• :
  • :
களத்தில்

சென்னையில் 90 சதவிகிதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது!

சென்னையில் 90 சதவிகிதம் பேருக்கு தண்ணீர் கிடைக்காது!

 இந்தக் கட்டுரை எழுதப்பட்ட அக்டோபர் 17-ம் தேதி மதியம் ஒரு மணிக்கு சென்னையில் கனமழை கொட்டிக்கொண்டிருந்தது. மதியம் சாப்பிட்டு முடித்து, வாஷ்பேசினில் கைகழுவப்போனால் தண்ணீர் வரவில்லை. பிரச்னை இங்கு மட்டுமல்ல... சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்று தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. பிரபல ஹோட்டல்கள் சிலவும் மூடப்பட்டிருக்கின்றன. ஐ.டி நிறுவனங்கள் பல விடுமுறை அறிவித்துள்ளன. சென்னைக்கு எப்போதுமே ‘தண்ணியில’ கண்டம். 2001-ல் தண்ணீர் இன்றித் தவித்தது சென்னை. 2015-ல் சென்னை மாநகரமே தண்ணீரில் மூழ்கியது. இப்போது சென்னை மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகள் தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. ஏன் இந்த சிக்கல்?

 
நிலத்தடி நீரை வணிகமயமாகப் பயன்படுத்துவதை முறைப்படுத்த 2014 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தமிழக அரசு இ்ரண்டு அரசாணைகளை வெளியிட்டது. அதன்படி மதுபானங்கள், குளிர்பானங்கள் என வணிக நோக்கில் தண்ணீரைப் பயன்படுத்தும் நிறுவனங்களின் பட்டியலில்... தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள், கேன் குடிநீர் தயாரிப்பு ஆகியவற்றுக்கு நிலத்தடி நீரை எடுப்பவர்களையும் சேர்த்துள்ளனர்.  
 
இதை எதிர்த்து கேன் குடிநீர் தயாரிப்பாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த 3-ம் தேதி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் அரசு ஆணைகளை அமல்படுத்த உத்தரவிட்டார். தவிர அரசின் அனுமதி பெறாமல் வணிகரீதியாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துபவர்களை திருட்டு வழக்கில் கைது செய்யவும் உத்தரவிட்டார். நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்தவும் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து,  சென்னை அருகே பூந்தமல்லியில் அனுமதியின்றி செயல்பட்ட 100-க்கும் மேற்பட்ட போர்வெல்களை உடைத்து மூடினர் வருவாய்த் துறை அதிகாரிகள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 15-ம் தேதியிலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால், சுமார் 4,100 தண்ணீர் டேங்கர் லாரிகள் இயங்கவில்லை. உரிய தீர்வு ஏற்படாவிட்டால், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓடும் 10,000 தண்ணீர் டேங்கர் லாரிகளும் ஓடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 
 
கேன் குடிநீர் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினரும் அக்டோபர் 17-ம் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர்  வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது. சென்னையின் பெரும்பாலான வணிக வளாகங்களும் அலுவலகங்களும் தனியார் டேங்கர் லாரி தண்ணீரையே நம்பியுள்ளன. இந்த வேலைநிறுத்தம் அவர்களை ஸ்தம்பிக்க வைத்தது. சென்னையில் புதிதாக உருவாகியுள்ள பல குடியிருப்புகளுக்கு மெட்ரோ வாட்டர் வழங்கும் குடிநீர் செல்வதில்லை. அவர்களும் டேங்கர் லாரிகளை நம்பியிருப்பதால், பல குடியிருப்புகள் தவித்தன.
 
இதுகுறித்து பழைய மகாபலிபுரம் சாலை குடியிருப்போர் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ கோடாவிடம் கேட்டோம். “ஓ.எம்.ஆர் சாலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்புகள் கட்டப்பட்டன. வீடுகள் கட்ட சி.எம்.டி.ஏ-வில் அனுமதி வாங்கியபோது, ‘குடிநீர் வசதி வரும்’ என்று சொல்லித்தான் அப்ரூவல் கொடுத்தனர். குடிநீர் வசதிக்கு டெபாசிட் தொகையாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். இதுவரை குடிநீர் இணைப்பு தரப்படவில்லை. மாநகராட்சிக் கூட்டங்களில், குடிநீர் வாரியக் கூட்டங்களில் இதுகுறித்து கேட்கும்போது உரிய பதில் இல்லை. மெட்ரோ வாட்டர் இணையதளத்தில் சோழிங்கநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், பல குடியிருப்புகளில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. சில இடங்களில் நிலத்தடி நீர் கறுப்பாகத்தான் வருகிறது. தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் ஓ.எம்.ஆர் சாலையில் சுமார் மூன்று லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளோம். மூன்று நாள்களாக ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்கவில்லை. மெட்ரோ வாட்டர் தண்ணீர் தேவைக்கு ஏற்றபடி தருவதில்லை. இணையதளத்தில் பதிவு செய்தால், வாரத்துக்கு இரண்டு லாரி தண்ணீர் மட்டும் தருகின்றனர். தனியார் லாரிகளைப் போல மெட்ரோ வாட்டர் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டாலே தண்ணீர்ப் பிரச்னையைச் சமாளித்து விடலாம். அதுவரை தனியார் தண்ணீர் டேங்கர் லாரிகள் விநியோகத்தை அரசு தடுக்கக் கூடாது” என்றார். 
 
தண்ணீர் டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கத்திடம் பேசினோம். “அரசு உத்தரவை அமல்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காகத் தண்ணீர் எடுத்த லாரியின் ஓனர், டிரைவர், போர்வெல் உரிமையாளர் மூன்று பேர் மீதும் வழக்குப் போட்டிருக்கிறார்கள். பூந்தமல்லியில் மட்டும் 130 போர்வெல்களை உடைத்து நொறுக்கி மூடி விட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடப் போவதாக அறிவித்ததும், அரசு தரப்பில் வாய்மொழியாக, ‘யாருக்கும் இடையூறு இல்லாமல் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்கின்றனர். வாய்மொழி உத்தரவை நம்பி நாங்கள் செயல்பட முடியாது. வணிக அடிப்படையில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் பிரிவிலிருந்து, தண்ணீர் லாரிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பொதுமக்களுக்குக் குடிநீர் வழங்குவது தான் எங்கள் வேலை. எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
 
 
 
தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன், “தமிழக அரசு 2014-ம் ஆண்டு அரசாணையில் தமிழகத்தின் நிலத்தடி நீர் வகைப்பாட்டினை கிரிட்டிக்கல், மோஸ்ட் கிரிட்டிக்கல், செமி கிரிட்டிக்கல், சேஃப் என்று பிரித்திருக்கின்றனர். இதில் சேஃப் பகுதிகளில் நிலத்தடி நீர் எடுக்கலாம். மற்ற பகுதிகளில் எடுக்கக் கூடாது. ஆனால், இந்த அரசாணை வெளியிடுவதற்கு முன்பு 2002-ல் இருந்தே நாங்கள் தொழில் செய்துவருகிறோம். எனவே, 2014-க்கு பின்பு தொடங்கப்பட்ட குடிநீர் நிறுவனங்களுக்கு மட்டும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். தவிர மத்திய தண்ணீர் சட்டத்தில், ‘எங்கு வேண்டுமானாலும் நிலத்தடி நீர் எடுக்கலாம். அதற்கு உரிய கட்டணத்தை அரசிடம் செலுத்த வேண்டும். நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்வதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் பிரச்னைகள் இருக்காது” என்றார். 
 
இந்தப் பிரச்னை தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜனிடம் பேசினோம். “சென்னைக்கு மட்டும் தினமும் இருபது மில்லியன் லிட்டர் தண்ணீர் பத்தாயிரம் டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. பெரிய குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் தரப்படவில்லை. நிலத்தடி நீரும் உப்பாகிவிட்டது. திடீரென்று தண்ணீர் கிடைக்கா விட்டால் கஷ்டம்தான். அதேசமயம் நிலத்தடி நீரை வரைமுறை இல்லாமல் தொடர்ந்து உறிஞ்சினால் அதுவும் பெரும் ஆபத்து. கடல் நீர் உள்ளே வந்து விடும். நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். திடீரென்று செய்தால் ஒன்றும் நடக்காது. எதிர்காலத்தில் சென்னையில் 90 சதவிகிதம் பேருக்குத் தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும். தண்ணீர் பிரச்னையைப் பற்றி அரசுக்கு ஆழமான அக்கறை வேண்டும்.  ஏரி, குட்டைகள், குளங்களைத் தூர்வாரி, மழைநீரை நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் ஒரே வழி. அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்றால் தண்ணீருக்காக அடித்துக்கொள்ளும் நிலை ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது” என்றார்.
 
தனிநபர் தொடங்கிப் பெரு நிறுவனங்கள் வரை எல்லோருக்கும் தண்ணீர் கொடுக்கவேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு. எதைக் காரணம் சொல்லியும் இதிலிருந்து தப்ப முடியாது. அதேசமயம் நிலத்தடி நீரை வரைமுறையின்றி உறிஞ்சி இயற்கைச் சமநிலையைக் குலைக்கவும் அரசுக்கு அதிகாரம் இல்லை. 
 
தீர்வு என்ன?
 
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரம் தண்ணீர் இல்லாமல் வறண்டது, உலகெங்கும் இருக்கும் நகரங்களுக்கு எச்சரிக்கை மணி. மெட்ரோ வாட்டர் நிறுவனம் தினமும் 4.3 கோடி லிட்டர் தண்ணீரை சென்னைக்கு விநியோகிக்கிறது என்றால், அதைவிட இரண்டு மடங்கு அதிகத் தண்ணீரை தனியார் லாரிகள் விநியோகிக்கின்றன. பெரு நிறுவனங்கள் முதல் கார்ப்பரேட் மருத்துவமனைகள் வரை பலவற்றையும் அரசு கைவிட்ட நிலையில், தனியார் லாரிகளிடமே அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். புறநகர்ப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளுடன் உருவாகும் ‘கேட்டட் கம்யூனிட்டி’கள் எல்லாத் தேவைகளுக்கும் தனியாரிடமே தண்ணீரை விலைகொடுத்து வாங்குகின்றன. இந்தச் சூழலில் அரசாணையை மாற்றி, தனியார் டேங்கர் லாரிகளுக்கும் கேன் வாட்டர் தயாரிப்பாளர்களுக்கும் விலக்கு கொடுப்பது தற்காலிகத் தீர்வாகவே இருக்கும். மழைநீர் சேகரிப்பைக் கட்டாயமாக அமல்படுத்துவது மட்டுமே நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வழி. பெருநிறுவனங்களுக்கு, குழாயில் வெளியேறும் எல்லா நீருமே கழிவுநீர் அல்ல என்ற உணர்வு வர வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்வதுதான் நிரந்தரத் தீர்வாக அமையும்.