• :
  • :
களத்தில்

எப்படி முந்திக்கொண்டு வரலாம் - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி

எப்படி முந்திக்கொண்டு வரலாம் - கோவை முன்னாள் எஸ்.பி காரை நிறுத்திய காவலருக்கு நேர்ந்த கதி

 தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை பாலத்தில் முந்திச் செல்ல முயன்ற கோயம்புத்தூர் முன்னாள் எஸ்.பி மூர்த்தியின் காரை தடுத்து நிறுத்திய காவலர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
எஸ்பி பாண்டியராஜனின் மனைவி
 
கும்பகோணம் அருகே அணைக்கரையில் நடந்த துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு கோயம்புத்தூர் முன்னாள் எஸ்.பி மூர்த்தி, தன் மனைவி மற்றும் உறவினருடன் நேற்று மதியம் காரில் அணைக்கரை வழியாகக் கும்பகோணத்துக்குச் சென்றிருக்கிறார். சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி-யாக அவர் தற்போது பணியாற்றி வருகிறார். அணைக்கரை பாலத்தைக் கடக்கும்போது அங்கு பணியில் இருந்த காவலர் நாடிமுத்து காரை நிறுத்தியதோடு, `பாலத்தில் கார் ஒன்றன் பின் ஒன்றாகத்தான் வர வேண்டும். நீங்கள் ஏன் முந்திக்கொண்டு வந்தீர்கள்' எனக் கேட்டிருக்கிறார். இதில் கோபமடைந்த எஸ்.பி மூர்த்தி, `நான் கோவை முன்னாள் எஸ்.பி' எனச் சொல்ல அவர் மனைவியும் நாடிமுத்துவை பேசியிருக்கிறார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றவே காரைவிட்டு எஸ்.பி உள்ளிட்ட அனைவரும் இறங்கிவிடுகின்றனர். அதன் பிறகு, தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமாருக்குப் போன் செய்து, `நான் அவசரமாகச் சென்றுகொண்டிருந்தேன். என்னைப் பற்றிச் சொல்லியும் அவன் கேட்கவில்லை' என ஒருமையில் பேசியதோடு உடனே, `அருகில் இருக்கும் இன்ஸ்பெக்டரை வரச் சொல்லுங்கள்' எனக் கூறியிருக்கிறார்.
 
 
அணைக்கரை பாலம்
 
இதற்கிடையே இந்தச் சம்பவத்தை இரு தரப்பும் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறது. எஸ்.பி மூர்த்தி போனில் பேசி கொண்டிருக்கும்போதே அவர் மனைவி நாடிமுத்து பற்றி, `அவன் இவன் எனப் பேசுகிறான்' எனச் சொல்ல, அதற்கு நாடிமுத்து, `நீங்கதான் என்னை அவன் இவன் எனச் சொன்னீர்கள். நான் சொன்னதை நீங்க பார்த்தீங்க' எனப் பதிலுக்குக் கூற மேலும் வாக்கு வாதம் முற்றியது. இதைத் தொடர்ந்து திருப்பனந்தாள் டி.எஸ்.பி சம்பவ இடத்துக்குச் சென்று எஸ்.பி மூர்த்தியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இதற்கிடையில் காவலர் நாடிமுத்து ஆயுதப்படை பிரிவுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார். பொதுமக்கள் கூடியிருக்க நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து திருவிடைமருதூர் காவல் நிலைய வட்டாரத்தில் விசாரித்தோம். ``கோயம்புத்தூர் முன்னாள் எஸ்.பி குடும்பத்தோடு வந்திருக்கிறார். அப்போது அணைக்கரை செக்போஸ்ட்டில் பணியில் இருந்த காவலர் நாடிமுத்து பணியில் இருக்கும்போது சீருடை அணியாமல் இருந்ததோடு காரை மறித்து விசாரித்திருக்கிறார். மூர்த்தி, தன்னைப் பற்றி சொன்ன பிறகும் விடவில்லை. இதில் நடைபெற்ற வாக்குவாதங்களை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். அப்போதே தஞ்சாவூர் எஸ்.பி-யிடம் மூர்த்தி புகார் சொன்னார். யூனிஃபார்ம் அணியாமல் பணியில் இருந்தது மற்றும் உயர் அதிகாரி எனத் தெரிந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களால் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்'' என்றனர்.