• :
  • :
களத்தில்

மாதவரத்தில் புதிய அடுக்குத்தள பேருந்து நிலையம் என்னென்ன சிறப்புகள்?

மாதவரத்தில் புதிய அடுக்குத்தள பேருந்து நிலையம் என்னென்ன சிறப்புகள்?

 மாதவரம் பேருந்து நிலையம் அடுக்குத் தளங்களைக் கொண்டது என்பதுதான் அதன் முதல் சிறப்பு. நகரமயமான சூழலில் இடம் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்த முயற்சி இது. அதன் தரை தளத்தில் 50 பேருந்துகளும், முதல் தளத்தில் 70 பேருந்துகளும் நிறுத்துவதற்கு ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது

மாதவரத்தில் புதிய அடுக்குத்தள பேருந்து நிலையம்.. என்னென்ன சிறப்புகள்?
சென்னையில் விழாக்கால விடுமுறைகளின் முன்தினத்தின்போது எப்போதும் கடும் வாகன நெரிசல் காணப்படும். கடந்த புதன்கிழமை ஆயுத பூஜைக்கான அரசு விடுமுறையை ஒட்டி விடியவிடிய சென்னையும், அதன் புறநகர்ப் பகுதிகளும் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. இந்தச் சூழலில் போக்குவரத்துத் துறையில் ஒரு பாராட்டத் தகுந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. மாதவரம் அடுக்குப் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலமாக கடந்த அக்டோபர் 10ம் தேதி திறந்து வைத்திருக்கிறார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நல்ல பெயரையும் வாங்கிக்கொடுத்திருக்கிறது இந்தத் திட்டம்.
 
தமிழ்நாடு, எப்போதும் ‘சின்ன இந்தியா’ எனச் சொல்லும் அளவிற்கு, பல்வேறு மாநிலத்தைச் சார்ந்த மக்களை கணிசமான அளவில் கொண்டிருக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சியின் காரணமாக இங்கிருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலை செய்பவர்களும், சிறுகடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வெளிமாநிலங்களில் துவங்கி அங்கேயே தங்கியவர்களும் அதிகம். இவர்களின் பயணம் பெரும்பாலும் சென்னை நோக்கியதாகவே அமையும். குறிப்பாக தெலுங்கு பேசும் மக்கள் அதிகளவில் சென்னையில் வசிக்கின்றனர். அதேபோல, இங்கிருந்து திருப்பதி கோயிலுக்கு எப்போதும் தமிழக மக்கள் சென்று வந்துகொண்டிருப்பார்கள். மாதவரத்தில் உருவாகியுள்ள இந்தப் புதிய பேருந்து நிலையம் அவர்களுக்கான பயணத்தை எளிமையாக்கியுள்ளது.
 
ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்பவர்கள் இதற்கு முன்புவரை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குதான் வர வேண்டும். குறிப்பாக மாதவரம் பேருந்து நிலையம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்குச் சென்று வரும் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். திறக்கப்பட்டுள்ள இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என்பதை நேரில் பார்வையிட்டோம்...
 
மாதவரம் பேருந்து நிலையம் அடுக்குத் தளங்களைக் கொண்டது என்பதுதான் அதன் முதல் சிறப்பு. நகரமயமான சூழலில் இடம் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறந்த முயற்சி இது. அதன் தரை தளத்தில் 50 பேருந்துகளும், முதல் தளத்தில் 70 பேருந்துகளும் நிறுத்துவதற்கு ஏதுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்த உடன் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பேருந்து நிலையம், கோயம்பேட்டிலிருந்து சற்று தூரம் அமைந்திருக்கிறது. எனவே, பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையில் நகர பேருந்துகளுக்கான வசதியும், இப்பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகமும், மற்ற மாநில போக்குவரத்துக் கழகங்களின் அலுவலகங்களும் பயணிகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகச் செயல்படுகிறது. திருட்டு போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
 
“என் சொந்த ஊர் திருப்பதி. சொந்தக்காரங்க நிறைய பேரு சென்னையிலதான் இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே அடிக்கடி சென்னை வந்திருக்கேன். இன்னைக்கு ஊருக்கு போகலாம்னு கிளம்பும்போதுதான் எனக்கு பேருந்து நிலையத்தை இங்க மாத்திட்டாங்கன்னு தெரிஞ்சுது. வந்துபோறது இப்போ கஷ்டமா இருந்தாலும், வரும் காலங்கள்ல இது நல்ல மாற்றமா இருக்கும்” என்றார்.
 
பயணங்களின் வருகை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி நடத்துநர் ஒருவருடம் பேசினோம்..
 
“ பேருந்து நிலையத்தை பேரிஸ் பூக்கடையில இருந்து கோயம்பேட்டுக்கு மாற்றம் செஞ்சப்போ எப்படி இருந்ததோ, அதேபோலதான் இப்பவும் இருக்கு. இன்னும் நிறைபேருக்கு இங்க மாத்துனது தெரியல. சில நாள்கள் போனா எல்லாம் சரியாகிடும். பெரிய நெரிசல் குறைஞ்சது மாதிரியிருக்கும். இடவசதி ரொம்ப நல்லா செஞ்சு கொடுத்திருக்காங்க. குறிப்பா வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வெடுக்க அறைகள் இருக்கு. இது வெளிமாநிலத்துல இருந்து ரொம்ப தூரம் கண்முழிச்சு வண்டி ஓட்டிட்டு வர்ற ஓட்டுநர், நடத்துநர்கள் உடல்நிலைக்கு ரொம்பவே நல்லது” என்றார்.