img/728x90.jpg
6 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பெரிய குளத்தில் தென்பட்ட அரிய வகைப் பறவை

6 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை பெரிய குளத்தில் தென்பட்ட அரிய வகைப் பறவை

 கோவையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு, யுரேசியன் ஹாபி என்ற வெளிநாட்டுப் பறவையை, பறவைக் காட்சியின் போது சிறுவர்கள் கண்டுள்ளனர்.

 
கோவையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி, பல்லுயிர்களுக்கு இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.  மேலும், பல்வேறு நாடுகளில் இருந்து, பறவைகள் கோவைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், பறவைக் காட்சிக்காக (Bird sightings) சூழலியல் செயற்பாட்டாளர் சரவணன், உக்கடம் பெரிய குளத்துக்கு சில சிறுவர்களுடன் சென்றுள்ளார். அப்போதுதான், யுரேசியன் ஹாபி (Eurasian Hobby) என்ற அரிய வகை பறவையை அவர்கள் பார்த்துள்ளனர்.
 
இதுகுறித்து சரவணன், “ஒவ்வொரு வாரமும், கோவை மாநகரில் உள்ள குளங்களில் மாணவர்களுக்கு இயற்கைக் கல்வி எடுத்து வருகிறோம். இந்நிலையில், இன்று 4 சிறுவர், சிறுமிகளுடன் உக்கடம் பெரிய குளத்துக்குச் சென்றோம். முதலில், என்னுடன் வந்த சிறுவர்கள்தான் அந்தப் பறவையை பார்த்தனர்.
 
இந்த யுரேசியன் ஹாபி, ஐரோப்பாவில் இருந்து வரும் ஒரு பறவை. இந்தப் பறவை உலகம் முழுவதும் புலம் பெயர்ந்தாலும், நம் நாட்டில் பெரும்பாலும் வட இந்தியாவுக்கே செல்லும். எப்போதாவது அரிதாகத்தான் தென் இந்தியாவுக்கு வரும். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கோவையிலும், 2016-ம் ஆண்டில், சென்னை கிண்டி தேசியப் பூங்காவிலும் இந்தப் பறவை தென்பட்டுள்ளது. அதன் பிறகு இப்போதுதான் தென்படுகிறது.
 
இது ஃபால்கன் வகையைச் சேர்ந்த பறவை. நீர் நிலைகளில் உள்ள தவளை, மீன், பறவைகள் போன்றவற்றை சாப்பிடும். குறிப்பாக, காற்றில் பறந்துகொண்டே, மற்ற பறவைகளை சண்டை போட்டு, அடித்துச் சாப்பிடும் தன்மையைக் கொண்டது. அதற்கு, தகுந்த உணவுகள் அதிகம் கிடைப்பதால் இங்கு வந்துள்ளன.  உக்கடம் பெரிய குளத்தில் இப்படிப் பல அரிதான பறவைகளை காண முடியும். அது பல்லுயிர் அதிகம் நிறைந்த பகுதி. எனவே, வளர்ச்சி என்ற பெயரில் முழுவதும் மாற்றாமல், பல்லுயிர் பெருக்கத்துக்காக அதை அப்படியே பராமரிக்க வேண்டும்” என்றார்.