img/728x90.jpg
மக்கள் கூட்டத்தால் தத்தளித்த ஊட்டி 63,000 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டுள்ளனர்

மக்கள் கூட்டத்தால் தத்தளித்த ஊட்டி 63,000 பேர் தாவரவியல் பூங்காவை பார்வையிட்டுள்ளனர்

 நீலகிரி மாவட்டம் ஊட்டியில் செப்டம்பர் முதல் வாரம் முதல், இரண்டாவது சீசன் துவங்கியது. இதையடுத்து கர்நாடகா, கேரளா மாநில சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிகளவு வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறை நாள்கள் என 4 நாள்கள் தொடர் விடுமுறை மற்றும் கர்நாடகாவில் தசரா பண்டிகை விடுமுறை காரணமாக ஊட்டியில் கடந்த புதன்கிழமை மாலை முதலே சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்தது. இதனால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் களைக்கட்டின.

 
குறிப்பாகக் கேரளா, கர்நாடகா மாநில சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதனிடையே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று ஊட்டியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வருகை காரணமாக ஊட்டி - குன்னூர் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்தவாறே நகர்ந்தன. ஊட்டி நகரில் கமர்சியல் ரோடு, எட்டின்ஸ் ரோடு, பூங்கா சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாவரவியல் பூங்காவைத் தவிர ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு இல்லத்தில் குவிந்தனர். அதிலும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
 
இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள முதுமலை, சூட்டிங்மட்டம், அவலாஞ்சி, தொட்டபெட்டா மலைச்சிகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காணப்பட்டது. தொடர் விடுமுறை நாள்களில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் கடந்த 17-ம் தேதி 6516, ஆயுதபூஜை தினத்தன்று 15, 609, விஜயதசமியன்று 17,151, சனிக்கிழமை 13,785, ஞாயிற்றுக்கிழமை சுமார் 15,000 என 63,000-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சென்றுள்ளனர்.