• :
  • :
களத்தில்

மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை

மீனவர்கள்  வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை

 நாட்டுப்படகு மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட தமிழக கடல் ஒழுங்கு முறை சட்டம், தற்போது விசைப்படகு மீனவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது. மீன்வளத்துறை விசைப்படகு மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அச்சம் எழுகிறது. என, தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

 
துாத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களிடையே கடலுக்குள் மீன்பிடிப்பதில் கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி வருகிறது.  3000-க்கும் அதிகமான நாட்டுப் படகுகளும்,   250-க்கும் அதிமான விசைப் படகுகளும்  உள்ளன. இந்த விசைப்படகுகளில்,  90 படகுகள் மட்டுமே தமிழக கடல் ஒழுங்குமுறை சட்டத்தின்படி,  மீன்வளத்துறையால் பதிவு செய்யப்பட்டவை. முறையாக பதிவு செய்யப்படாத அதிக நீளமுள்ள, குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பொறுத்தப்பட்ட விசைப்படகுகள் தங்கு கடலுக்குள் செல்வதால் நாட்டுப்படகு மற்றும் வலைகள் சேதமாகின்றன என நாட்டுப்படகு மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  
 
பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் தங்கு கடலுக்குச் செல்லக் கூடாது என மீன்வளத்துறையும் தடை  விதித்துள்ளது. இத் தடையை மீறி,  பதிவு செய்யப்படாத 37 விசைப்படகுகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று திரும்பினர். இதனால், விசைப்படகுகளால் ஒரு நாட்டுப் படகும், 28 வலைகள் முழுமையாக சேதம் அடைந்துவிட்டது. இதற்கான இழப்பீட்டுத் தொகையை உரிய விசைப்படகு உரிமையாளரிடம் வசூலித்து தர வேண்டும். அத்துடன், பதிவு செயப்படாத விசைப்படகுகள் நிரந்தரமாக கடலுக்குள் செல்லத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி   நாட்டுப்படகு மீனவர்கள் 4வது நாளாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த பிரச்னை குறித்து, வேம்பார் முதல் பெரியதாழை வரையுள்ள மீனவ கிராமங்களில் 20 கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய,  தூத்துக்குடி மாவட்ட  நாட்டுப்படகு, பைபர் படகு மீனவர்கள் சங்கத் தலைவர்  கயாஸ் , ``தமிழகத்தில் உள்ள  95 சதவிகித நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்கும் வகையில், தமிழக கடல் ஒழுங்கு முறை சட்டம்  கொண்டு வரப்பட்டது.  தற்போது, அதில் சில சட்டங்கள் விசைப்படகு மீனவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது. மீன்வளத்துறை விசைப்படகு மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அச்சம் எழுகிறது.
 
கடல் ஒழுங்குமுறைச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதில் மாற்றம் கொண்டு வரும்போது, நாட்டுப்படகு மீனவர்களிடம் கருத்துக் கேட்க வேண்டும். தூத்துக்குடியில்  தடையை மீறி தங்குகடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பதிவு செய்யப்படாத 37 விசைப்படகுகளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அகற்ற வேண்டும். அந்த விசைப்படகு உரிமையாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு எடுக்கும் நடவடிக்கை திருப்தி அளிக்காவிட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.” என்றார்.