img/728x90.jpg
வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்

வாடகை வீட்டில் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கல்

 தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு வீட்டில் இருந்து 2,304 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் மதுபான பாட்டில்களை பேக்கிங்  செய்யும் உபகரணங்களை போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். 

 
தூத்துக்குடி  மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் ஒரு வீட்டில், போலி மதுபாட்டில் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மதுவிலக்குப் பிரிவு போலீஸார், திருச்செந்தூர் அடைக்கலாபுரம்  பகுதியில் ரோந்து சென்றபோது  செல்லத்துரை என்பவரிடம்  சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அடைக்கலாபுரம் சுனாமி நகரைச் சேர்ந்த பிரேம்குமார், திருச்செந்தூரைச் சேர்ந்த சந்திரபோஸ்,  வீரபாண்டியபட்டினத்தைச் சேர்ந்த மூர்த்தி, முரளி ஆகியோர், செல்லத்துரை வீட்டை அதிக பணம் தருவதாகக் கூறி வாடகைக்கு எடுத்து, போலி மதுபாட்டில்கள், போலி மது தயாரிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து, அந்த வீட்டில் போலீஸார் சோதனையிட்டபோது, 48 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 48 பாட்டில்கள் வீதம் மொத்தம் 180 மில்லி லிட்டர் அளவுள்ள 2,304 போலி மதுபான பாட்டில்களில், ஒரு பகுதி லேபிள் ஒட்டாமலும், மற்றொரு பகுதி பாட்டில்களில் ”ஹனி டே” என்ற லேபிள் ஒட்டியும் மூடி முத்திரையிடப்பட்ட பாட்டிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
அத்துடன்,  25 லிட்டர் எரிசாராயம் (ஸ்பிரிட்) மற்றும் 35 லிட்டர் கேனில் 25 லிட்டர் சிவப்பு நிறம் கலந்த எரிசாராயம் (ஸ்பிரிட்), 16 ஆயத்தீர்வை வில்லைகள், 195 லேபிள்கள், 105 பாட்டில் மூடிகள், 100 மில்லி பிடிக்கக்கூடிய கண்ணாடிக் குடுவை, எரிசாராயத்தில் கலந்து வண்ணம் கொடுக்கக்கூடிய 180 மில்லி கலவை, ஸ்பேனர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, செல்லத்துரை உள்ளிட்ட நான்கு பேரையும் கைதுசெய்ததுடன், மேலும் சிலரை தேடிவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.