img/728x90.jpg
பணி ஆணை எங்கே -எனக் கேட்ட சிட்லப்பாக்கம் மக்கள் கைது செய்த காவல்துறை!

பணி ஆணை எங்கே -எனக் கேட்ட சிட்லப்பாக்கம் மக்கள் கைது செய்த காவல்துறை!

 நம்ம ஊருல தப்பு நடக்கும் போது, நாம கேக்காட்டி வேற யார்தான்மா கேட்கறதுன்னு சொல்லுவான். வேலையைப் பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு பணிசெய்ய விடாமல் தடுத்ததா பொய்வழக்கு போட்டு சிறையில வெச்சிருக்காங்க. இதனால எங்க வீட்டுல ரெண்டு நாளா யாரும் சாப்பிடல.

 
சிட்லப்பாக்கம் பகுதியில் மழைநீர்க் கால்வாய் பணி செய்த பணியாளர்களிடம், ``பணி ஆணை எங்கே" எனக் கேட்ட சமூக ஆர்வலர்களைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறை. 
 
2015-லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு பருவமழையின்போதும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிவிடுவது வழக்கமாகிவிட்டது. இதனால் நீர்நிலைகளை ஒன்றிணைப்பதற்காக மூடு கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தாம்பரம் அருகே உள்ள சிட்லப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதால் பொதுப்பணித் துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து மூடுகால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தப் பணி முடியும்வரை தற்காலிகமாக மழைநீர் வெளியேற மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளைச் செயல்பட விடாமல் குறுக்கிட்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அப்பகுதியைச் சேர்ந்த பாலசந்தர், சிவகுமார், குமார் சுப்பிரமணியம், சுனீல் ஜெயராமன் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாலசந்தர், ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி குமார் சுப்பிரமணியம் ஆகிய இரண்டு பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிவக்குமார் என்பவரையும் காவல் துறையினர் தேடிவருகிறார்கள்.
 
பாலசந்தர் அம்மா சாந்தியிடம் பேசினோம். ``ஏரியைத் தூர்வாருவது, நீர்நிலைகளில் இருக்கும் குப்பைகளை அள்ளுவது போன்ற வேலைகளை என் பையன் ஆர்வமாச் செய்வான். பொதுப் பிரச்னைக்காகத்தான் இந்தப் பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்து கேட்டிருக்கிறார்கள். `நம்ம ஊருல தப்பு நடக்கும்போது, நாம கேட்காம வேற யார்தான்மா கேட்கறது'னு சொல்வான். வேலையைப் பற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு, பணி செய்யவிடாமல் தடுத்ததாகப் பொய்வழக்கு போட்டுச் சிறையில வெச்சிருக்காங்க. இதனால எங்க வீட்டுல ரெண்டு நாளா யாரும் சாப்பிடல. ராத்திரி பகலா போலீஸ் ஸ்டேஷனுக்கும், கோர்ட்டுக்கும் அலைஞ்சுகிட்டிருக்கோம்” என அதற்கு மேல் பேசமுடியாமல் தேம்பி அழத்தொடங்கினார்.
 
சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், ``இப்பகுதியில் உள்ளவர்கள் சேர்ந்து, `சிட்லப்பாக்கம் ரைசிங் சோஷியல் ஆக்டிவிட்டீஸ்' என்ற அமைப்பை நடத்திவருகிறோம். சிட்லப்பாக்கம் பகுதியில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்போம். செல்போன் நிறுவனங்கள், குடிநீர் வடிகால் வாரியம் என யாராவது சாலைகளில் திடீரெனப் பள்ளம் தோண்டுவார்கள். பிறகு, அதை மூடாமலே போய்விடுவார்கள். யார் பள்ளம் எடுக்கிறார்கள் என்ற விவரமே பொதுமக்களுக்குத் தெரியாது. இதனால் சாலைகளில் யார் பள்ளம் எடுத்தாலும், எந்த வேலை நடந்தாலும் அந்த விவரங்களைக் கேட்போம். அதுபோல் இந்த வேலைக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு  கொடுத்துள்ளோம். ஆனால், இன்னும் தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்கள் பகுதியில் பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தவர்களிடம், `வொர்க் ஆர்டர் எங்கே' என 15 நாள்களுக்கு மேல் கேட்டுவந்தோம். கடந்த 20-ம் தேதி பாலசந்தர் என்பவர் இதேபோல் கேட்கும்போது, அதை சிவக்குமார் என்பவர் செல்போனில் பதிவுசெய்தார். அப்போது அங்கிருந்த உதவிச் செயற்பொறியாளர் மனோகரன், `கொடுக்க முடியாது. உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்குங்க’னு கோபமாகப் பேசினார். அதுவும் அந்த வீடியோவில் பதிவானது. 
 
கைது செய்யப்பட்ட பாலசந்தர், கோவிந்தராஜ், குமார், பார்த்தசாரதி
 
இதனால் கோபமடைந்த அந்த அதிகாரி, சிவக்குமாரிடம் இருந்த செல்போனைப் பிடுங்கிக் கொண்டார். `இந்த போனை நீங்கள் வைத்துக்கொண்டு அவர்கள்மீது புகார்கொடுங்கள். இல்லையென்றால், உங்கள்மீது நடவடிக்கை எடுப்போம்’ எனச் சிட்லப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசனுக்கு மனோகரன் நெருக்கடி கொடுத்தார். நாங்களும் அதிகாரிகளுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். அன்று மதியமே உதவி செயற்பொறியாளர் மனோகரனை வரவழைத்து காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்பு, எங்களின் செல்போனைக் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அதோடு பிரச்னை முடிந்துவிட்டது என நாங்கள் வந்துவிட்டோம். ஆனால் அன்று மாலையே, `உங்களுடன் பேசவேண்டும், வாங்க' என எங்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்தார்கள். பாலசந்தரும், குமார் சுப்பிரமணியமும் காவல் நிலையத்துக்குப் போனார்கள். ஆனால் அவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் அங்கேயே கைதுசெய்து வைத்துவிட்டார்கள். அவசர அவசரமாகக் கைதுசெய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டார்கள். நாங்கள் கேட்டதற்கு, `மேலிடத்திலிருந்து ப்ரஷர் வருகிறது' எனக் காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்” எனக் கொதித்தார்.
 
அவரைத் தொடர்ந்து பேசிய பார்த்தசாரதி, ``பாலசந்தர், சிவக்குமார், குமார் சுப்பிரமணியம், சுனீல் ஜெயராமன் என 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். சுனீல் ஜெயராமன் 10 நாள்களாக சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் ஒருவர்மீது தேவையில்லாமல் வழக்குப் பதிவுசெய்துள்ளது காவல் துறையின் மிரட்டல் போக்கைக் காட்டுகிறது. அரசாங்கம் செய்யும்பொன்னையா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேலையைப் பற்றி எந்தக் கேள்வியையும் ஒருவர் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்டால் அவர்மீது கொலை மிரட்டல் வழக்குப் போடுவது அரசாங்கத்தின் கையாலாகாததனத்தைக் காட்டுகிறது. இதுபோன்ற வேலைகளை மேற்கொள்ளும்போது பாதுகாப்புப் பணிகள் மிகவும் அவசியம். ஒவ்வொரு வீட்டின் முன்பும் 10 அடிக்கு மேல் பள்ளம் எடுத்திருக்கிறார்கள். வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொருவரும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதவாறு பணிகள் மேற்கொள்கிறார்கள். மழைக்காலம் வந்துவிட்டது. திடீரென வெள்ளம் வந்தால் அந்த வீடுகளில் உள்ளவர்களை மீட்கக்கூட முடியாது. ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும். வொர்க் ஆர்டர் கொடுக்கச் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? பொய் வழக்குப் போட்டுச் சிறையில் அடைப்பதன்மூலம் எங்களைப் போன்ற சமூகச் செயற்பாட்டாளர்களை முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்” என்றார் ஆவேசமாய்.
 
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, ``வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு விரைவாகப் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காக விரைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நானும் அந்தப் பணிகளை தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறேன். பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை, பேரூராட்சித் துறை எனப் பல துறைகள் ஒன்றிணைந்து இந்த வேலையைச் செய்துவருகிறார்கள். பேரூராட்சி நிர்வாகம் மட்டும் இன்னும் டெண்டர் முடிக்கவில்லை. மற்றவர்களுக்கு டெண்டர் ஆர்டர் கொடுத்து வேலை நடந்துவருகிறது. பல துறைகள் சேர்ந்து செய்வதால் பணி ஆணை இல்லாமல் வேலை செய்வதாக அப்பகுதியினர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆர்டர் கொடுக்காத வேலையைச் செய்வதாக நினைத்துக்கொண்டு அந்தப் பணிகளை நிறுத்தச் சொல்லி அங்கிருப்பவர்கள் அதிகாரிகளுக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்தார்கள். அதிகாரிகள் விளக்கம் கொடுத்தும் தொடர்ந்து அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்ததால், அதிகாரிகளின் புகார் அடிப்படையில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். தவறு இருப்பதாக அவர்கள் நினைத்திருந்தால் என்னிடம் முறையிட்டிருந்திருக்கலாம்” என்றார் மிகத் தெளிவாக. 
 
மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமையல்லவா?