img/728x90.jpg
என் பணிக்காலம் முடிய 39 நாள்கள் இருக்கு முடிந்தவரை சிலைகளை மீட்டெடுப்பேன்

என் பணிக்காலம் முடிய 39 நாள்கள் இருக்கு முடிந்தவரை சிலைகளை மீட்டெடுப்பேன்

 என்னுடைய பணிக்காலம் இன்னும் 39 நாள்களில் நிறைவடைகிறது. அதற்குள் என்னால் முடிந்தவரை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன் என்று ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

 
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள உலோகச் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இரண்டாவது நாளாக தொல்லியல்துறை மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சிலைகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப் பாதுகாப்பு மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 4,539 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 87 சிலைகளின் ஆய்வு தொடர்ந்து இரண்டாவது நாளாக தொடங்கிவிட்டன. இந்த ஆய்வினை தொல்லியல் துறை தென் மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையிலான தொல்லியல் துறை மற்றும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 70 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
 
இதனிடையே  சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு நேற்று வருகை தந்தார். காலையில் வந்தவர் மாலை வரை ஒவ்வொரு சிலைகளின் தொன்மை பற்றியும் அவற்றின் எடை போன்றவற்றை ஆய்வு செய்தார். இறுதியாக பத்திரிகையாளர்கள் பார்வைக்காக தஞ்சை மாவட்டம் சிவபுரத்தைச் சேர்ந்த நடராஜர் சிலையை வைத்தார். பின்னர் பேசிய ஐ.ஜி பொன் மாணிக்கவேல், ``சிலையினுடைய பழைமை பற்றியும் இந்தச் சிலை கடந்த 1951ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் சிவபுரம் அன்னமுத்து என்பவரது தோட்டத்திலிருந்து தோண்டிஎடுக்கப்பட்ட சிலையாகும். இதனுடன் 5 சிலைகள் உட்பட மொத்தம் 6 சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டன. அதன்பிறகு இந்தச் சிலைகள் தஞ்சையில் வைக்கப்பட்டு, பின்னர், சென்னை, பாம்பே, நியூயார்க் லண்டன்வரை சென்றன. இந்தச் சிலையை மீட்க வேண்டும் எனக் கிராமமக்கள் கடந்த 1969-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர். பின்னர் 1973-ம் ஆண்டு இந்தச் சிலை மீட்கப்பட்டது.
 
 
இறைவன் இங்கு இருக்க இதனுடன் கண்டெடுக்கப்பட்ட இறைவி சிலை உட்பட மேலும் 5 சிலைகள் நியூயார்க் மியூசியத்திலேயே உள்ளன. இந்தச் சிலை கடந்த 1973-ம் ஆண்டிலேயே 9 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்பனையாகியுள்ளது என்பதைப் பார்க்கும்போது தற்போது இந்தச் சிலைகள் ஒவ்வொன்றும் ரூ.100 கோடிவரை இருக்கும். மீட்கப்பட்ட இந்தச் சிலையை இதற்குரிய கோயிலில் வைத்து தினமும் பூஜைகள் செய்யவேண்டும். தெய்வங்கள் எல்லாம் வழிபட வேண்டும். அவை அருங்காட்சியகத்திலோ பாதுகாப்பு மையத்திலோ இருப்பது சரியில்லை. அந்தந்த கோயில்களில் இருந்தால்தான் தினமும் அதற்கான வழிபாடுகள் நடைபெறும் என்பதற்காக அந்தக் கோயில்களில் வைத்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு அறைகள் கட்டப்படவேண்டும். ஆனால் கட்டப்படவில்லை.
 
பாதுகாப்பு அறைகள் கட்ட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்  அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பிலும் கடந்த 400 நாள்களுக்கு முன்பு, அறநிலையத்துறை அதிகாரி ஜெயா என்பவர் தலைமையில் வந்த ஆணையத்திடம் அனைத்துக் கோயில்களிலும் பாதுகாப்பு அறைகள் கட்டச்சொல்லி மனு அளித்தோம். அந்த மனுமீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். பின்னர் அதற்கான பணிகள் நடைபெறுமா எனப் பார்போம். திருவாரூரில் நடைபெறும் ஆய்வுகள் நிறைவடைகிறது. மீதமுள்ள சிலைகளை ஆய்வு செய்வதற்கு மேலும் 20 நாள்களுக்கு மேல் தேவைப்படுகிறது. என்னுடைய பணிக்காலம் இன்னும் 39 நாள்களில் நிறைவடைகிறது. அதற்குள் என்னால் முடிந்தவரை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவேன்" என்றார்.
 
இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள், தமிழக அரசும் இந்து சமய அறநிலைத்துறையும் உங்களுக்கு ஒத்துழைப்பு தருகிறதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், ஐ.ஜி பொன் மாணிக்கவேல், எங்களது பணிகளுக்குத் தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையினரும் 2 ஆயிரம் சதவிகிதம் ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தெரிவித்தார்.