img/728x90.jpg
அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்

அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்

வாட்ஸ் அப்களில் அவதூறு பரப்பும் வகையில் பரப்பப்பட்ட ஆடியோகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். ஆனால், அமைச்சர் ஜெயக்குமாருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறுவதற்கு வெற்றிவேல் மருத்துவரா?”  என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், அமுதகவி உமறுப்புலவர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. உமறுப்புலவரின் நினைவிடத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதைசெய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாமிரபரணி புஷ்கர விழா, நதியைத் தெய்வமாக நினைத்து மக்கள் வழிபட்டு பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயம். இந்த விழாவை நடத்திட பல்வேறு ஆன்மிக அமைப்புகள் கோரிக்கை வைத்தன. இது ஒரு அரசு விழாவாக இல்லாவிட்டாலும், அரசு சார்பில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
 
தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படவில்லை. மக்கள் அளித்த பணியைச் சரிவரச் செய்யாமல், எந்த நேரமும் அரசை குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார். தான் எப்படியும் முதல்வர் ஆகிவிடலாம் என பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார். இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைக்கூட தரமாட்டார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில், கனிமொழி அல்ல ஸ்டாலினே நிறுத்தப்பட்டாலும் அ.தி.மு.க தான் ஜெயிக்கும்.
 
அரசியலில் இருப்பதைக் காட்டுவதற்காக, தினகரன் அணியினர் உண்ணவிரதம் உள்ளிட்ட போராட்டங்களைச் செய்துவருகின்றனர். தற்போதைய அ.தி.மு.க  அரசுக்கு எந்தவித சிக்கலும் இல்லை. இந்த அரசு 2021-ம் ஆண்டு வரை நீடிக்கும். மெஜாரிட்டியை நிரூப்பிக்க வேண்டிய நேரத்தில் நிரூபிப்போம். அமைச்சர் ஜெயக்குமார் குறித்து வாட்ஸ் அப்களில் அவதூறு பரப்பும் வகையில் பரப்பப்பட்ட ஆடியோ குறித்து, ”அது தனது குரலே அல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டு பல நாள்களாகத் தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்” என  ஆணித்தனமாக விளக்கம் அளித்துள்ளார். அந்த ஆடியோவில் குறிப்பிடப்படும் பெண், நேரடியாக நான்தான் பாதிக்கப்பட்ட பெண் என இதுவரை விளக்கம் அளித்துள்ளாரா? இது அரசியலில் ஒரு தரம்கெட்ட விளையாட்டு. இது நல்லதல்ல. அமைச்சர் ஜெயக்குமாருக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த வேண்டும் எனக் கூறுவதற்கு வெற்றிவேல் என்ன மருத்துவரா?” என்றார்.