img/728x90.jpg
18 எம் எல் ஏ-க்கள் தீர்ப்பு எதிரொலி

18 எம் எல் ஏ-க்கள் தீர்ப்பு எதிரொலி

 18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில்  உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் தனது தீர்ப்பை வாசித்து வருகிறார்.

 
18 எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
 
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணன் தீர்ப்பு வழங்க உள்ளார்.
 
உயர் நீதிமன்றம் தீர்ப்பு
 
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ-க்களும் நீதிமன்றத்தை அணுகினர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் இந்த வழக்கு தொடர்பாக விசாரணைசெய்து, தீர்ப்பை ஒத்திவைத்தார். 
 
சபாநாயகரின் முடிவுக்கு சாதகமான முடிவை நீதிபதி அறிவித்தால், தமிழக சட்டசபையில் தற்போது 214 இடங்கள் இருக்கும். அதில், அ.தி.மு.க அரசுக்கு 109 எம்.எல்.ஏ-க்களின் பலம் உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 108 இடங்கள் போதுமானது என்பதால், ஆட்சிக்கு உடனடியாக எந்தப் பாதிப்பும் இருக்காது. சபாநாயகரின் முடிவுக்கு எதிராகவும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு சாதகமான தீர்ப்பையும் நீதிபதி வழங்கினால், தமிழக சட்டசபையில் 232 இடங்கள் இருக்கும். ஆட்சியைத் தக்கவைக்க 117 இடங்கள் தேவைப்படும். ஆனால், அ.தி.மு.க-வுக்கு 109 இடங்களே இருக்கும். இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்படும். 
 
இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இன்று காலை முதல்வர் பழனிசாமி  கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகளை ரத்துசெய்துள்ளார். அவர் தற்போது, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்  உள்ளிட்ட அமைச்சர்களிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.