img/728x90.jpg
தேனியில் குப்பைத்தொட்டியில் கூலித்தொழிலாளி உடல் கடமையைத் தட்டிக்கழித்த அதிகாரிகள்

தேனியில் குப்பைத்தொட்டியில் கூலித்தொழிலாளி உடல் கடமையைத் தட்டிக்கழித்த அதிகாரிகள்

 தேனி வாரச் சந்தையில் அனைவருக்கும் ஆதரவாக இருந்த சிவனாண்டிக்குக் கடைசியில் யாருமே ஆதரவு காட்டவில்லை

தேனியில் குப்பைத்தொட்டியில் கூலித்தொழிலாளி உடல்... கடமையைத் தட்டிக்கழித்த அதிகாரிகள்!
 
ஆதரவற்ற கூலித் தொழிலாளி சிவனாண்டி என்பவரது சடலத்தை, நகராட்சி ஊழியர்கள், தள்ளுவண்டியில் எடுத்துவந்து சுடுகாட்டுக்கு அருகில் இருந்த குப்பையில் வீசிச்சென்ற சம்பவம் தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
தேனியில் உள்ள வாரச் சந்தைப் பகுதியைச் சேர்ந்தவர் சிவனாண்டி. அங்குள்ளவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். கூலி வேலை செய்து வந்த அவருக்கு வயது 60. சொல்லிக்கொள்ளும்படி எந்தச் சொந்த பந்தமும் இல்லை. குடியிருக்க வீடு கூட இல்லாத அவரின் வசிப்பிடமே பெரியகுளம் சாலையும், வாரச் சந்தையும்தான். இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சிவனாண்டி இன்று காலை திடீரென உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் இந்தத் தகவலை போலீஸாருக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், விசாரணை நடத்திவிட்டு, உடலை அடக்கம் செய்யுமாறு நகராட்சி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்கள். அதன்பிறகு, இரண்டு நகராட்சி ஊழியர்கள் சிவனாண்டியைத் தள்ளுவண்டி ஒன்றில் வைத்து தேனி – அல்லிநகரம் சுடுகாட்டுக்கு நகரச் சாலையின் வழியே எடுத்துச்சென்றிருக்கிறார்கள். அங்குள்ள ஒரு குப்பை மேடு அருகே சிவனாண்டியையும், தள்ளுவண்டியையும் வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சிவனாண்டியின் உடல் குப்பையில் வீசப்பட்டது தொடர்பாக தேனி நகர போலீஸாரிடம்  கேட்டபோது, ``இறந்தவர் ஆதரவற்றவரா? அல்லது அடையாளம் தெரியாதவரா என்பதை முதலில் பார்ப்போம். அந்த வகையில் சிவனாண்டி ஆதரவற்றவராக இருந்தாலும் அனைவருக்கும் தெரிந்த நபர். அதனால், எங்கள் பக்கம் அனைத்து ஃபார்மாலிட்டிகளையும் முடித்துவிட்டு, கிராம நிர்வாக அலுவலருக்கும், நகராட்சிக்கும் தகவல் தெரிவித்துவிட்டோம். அடையாளம் தெரியாதவர் என்றால்தான் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்புவோம். பின்பு அந்த நபர் தொடர்பாக விசாரணை செய்வோம். அதற்கான எந்த அவசியமும் சிவனாண்டி விஷயத்தில் ஏற்படவில்லை. அதனால், உடலை அடக்கம் செய்யும் பணியை நகராட்சி நிர்வாகத்திடமே ஒப்படைத்துவிட்டோம்” என்றனர்.
 
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் ராஜாராமிடம் பேசியபோது, ``ஆதரவற்ற ஒரு நபரின் சடலத்தை வழக்கமாக எங்கள் ஊழியர்களை வைத்து போலீஸார்தான் அடக்கம் செய்வார்கள். நடந்த சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, சிவனாண்டி குப்பையில் வீசப்பட்ட சம்பவத்துக்கு போலீஸார்தான் காரணம்” என்றார்.
 
இதற்கிடையில், "தேனி நகரத்தில் அரசின் இலவச அமரர் ஊர்திகள் மொத்தம் எத்தனை உள்ளன?" என மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டோம். ``எங்களிடம் மொத்தம் 3 இலவச அமரர் ஊர்திகள் உள்ளன. ஒரு வாகனம் பழுது சரிபார்ப்புப்  பணிக்காகச் சென்றிருக்கிறது. மீதம் உள்ள இரண்டு ஊர்திகள் எப்போதும் தயாராக இருக்கும்.” என்றனர். சிவனாண்டி இறப்புக்குப் பிறகு காவல்துறையோ அல்லது நகராட்சி நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களோ இலவச அமரர் ஊர்தியை அழைத்தார்களா? எனக் கேள்வி எழுப்பியபோது, “இல்லை. அப்படி யாரும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. வாரச் சந்தைக்கும் சுடுகாட்டுக்கும் ஒரு கிலோமீட்டர் கூடத் தூரம் இல்லையே… தகவல் தெரிவித்தால் உடனே சென்றிருப்போம்” என்றனர்.
 
எது எப்படியோ தேனி வாரச் சந்தையில் அனைவருக்கும் ஆதரவாக இருந்த சிவனாண்டிக்குக் கடைசியில் யாருமே ஆதரவு காட்டவில்லை. இறப்பில் கூட ஒரு மனிதனுக்கு மரியாதை காட்டப்படவில்லை என்பது மிகவும் வேதனை!