• :
  • :
களத்தில்

டி எஸ் பி மீது பெண் எஸ் ஐ காவல் நிலையத்தில் புகார்

 டி எஸ் பி மீது பெண் எஸ் ஐ  காவல் நிலையத்தில் புகார்

 குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, டி.எஸ்.பி., ஒருவர் என் நெஞ்சின் மீது கை வைத்து கீழே தள்ளிவிட்டார்” என பெண் எஸ்.ஐ., ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவர் சத்யபாமா. இவர் கடந்த 17-ம் தேதி முதல் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தார். இவருக்கு கோயில் மூலஸ்தானப் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 20-ம் தேதி இரவில் இவர் பணியில் இருந்தபோது, `டி.எஸ்.பி., ஒருவர் தன் மார்பின் மீது கை வைத்து தள்ளி தன்னைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக' குலசை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
சத்யபாமா அளித்துள்ள புகார் மனுவில், ``கடந்த 20-ம் தேதி, நான் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, இரவு 11.30 மணிக்கு சுவாமி தரிசனம் முடித்துவிட்டு பக்தர்கள் வெளியேறும் பகுதி வழியாக 20 நபர்களை அழைத்துக்கொண்டு, எஸ்.பி. ஏட்டு வெலிங்ஸ்டன் என்பவர் வந்தார். அப்போது, ``கூட்ட நேரத்தில் ஏன் இப்படி எல்லோரையும் மொத்தமாக அழைத்துக்கொண்டு வருகிறீர்கள். இதனால், வெளியில் செல்லும் பக்தர்களுக்கு இடைஞ்சலாக இருக்குமே எனக் கூறினேன். ஏட்டும், எதுவும் பேசாமல் உடன் வந்தவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றுவிட்டார். தரிசனம் முடித்துவிட்டு அவர்கள் திரும்பி வரும்போது, டி.எஸ்.பி., முத்துக்குமார் ``நீ பெரிய இவளா..” எனச் சொல்லி கையில் வைத்திருந்த திருநீரை என் கண்ணுக்குள் அள்ளி எரிந்துவிட்டு, என் நெஞ்சின் மீது கையை வைத்து தள்ளி விட்டதில் உண்டியல் மீது சரிந்து விழுந்தேன். அத்துடன் எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
 
அதேபோல டி.எஸ்.பி., முத்துக்குமார் அளித்துள்ள புகாரில், ``கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களை ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் திட்டிக்கொண்டிருந்தார். தன்னை யார் என்று அறிமுகம் செய்துவிட்டு அவர் எங்கிருந்து பணிக்கு வந்துள்ளார் எனக் கேட்டேன். என்னை உற்றுப் பார்த்தவர், என்னையும் தகாத வார்த்தைகளால் பேசினார். அந்த நேரத்தில், கூட்டத்தினர் தள்ளியதில், கையில் இருந்த திருநீறு அவர் மீது கொட்டிவிட்டது. இதைத் தட்டிக்கேட்ட என் மனைவியின் தலை மற்றும் முதுகில் அடித்து தாக்கினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து பெண் ஆய்வாளர் சத்யபாமாவைத் தொடர்புகொண்டு பேசினோம், ``என்ன நடந்தது என்பதை புகார் மனுவில் தெளிவாக சொல்லியிருக்கேன். அந்த டி.எஸ்.பி., மீது புகார் அளித்தும் குலசை காவல் நிலையத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. எஸ்.பி., மற்றும் டி.ஜி.பி., அலுலகத்துக்கும் புகார் மனு அனுப்பி உள்ளேன். நான் பாதுகாப்புப் பணியில் இருந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி., கேமரா பதிவுகளைப் பார்த்தால் உண்மை தெரியும்” எனச் சொல்லி போனை துண்டித்தார். டி.எஸ்.பி., முத்துக்குமாரை தொடர்புகொள்ள முயன்றோம். அவரது எண் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தது.
 
டி.எஸ்.பி., முத்துக்குமார், டி.ஜி.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருபவர் என்பதால் அவர் மீது வழக்குபதிவு செய்ய காவல்துறை தயங்குவதாகவே தெரிகிறது. ஒரு பெண் ஆய்வாளரின் புகாருக்கே இந்த நிலைமையா..?