• :
  • :
களத்தில்

குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - திருச்சியில் பெண் தாசில்தாருக்கு வலுக்கும் எதிர்ப்பு

குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்  - திருச்சியில் பெண் தாசில்தாருக்கு வலுக்கும் எதிர்ப்பு

 மணல் கடத்தலில் ஈடுபட்ட பெண் தாசில்தார் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள்  மனு கொடுத்ததால்  பரபரப்பு ஏற்பட்டது.

 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த திருவாசி பகுதியில் உள்ள  கொள்ளிடம் ஆற்றில், லாரிகளில் சட்டவிரோதமான மணல் அள்ளுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தாலும், நடவடிக்கை இல்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த நிலையில்,  கடந்த 11-ம் தேதி இரவு 1 மணியளவில், திருவாசி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொக்லைன்  வாகனம் மூலம்  மூன்று லாரிகளில்  மணல் அள்ளப்படுவது தெரிந்த அப்பகுதி மக்கள், மணல் லாரிகளை விரட்டினர். அதில் ஒரு லாரி மட்டும் சிக்கியது.  அந்த லாரி மண்ணச்சநல்லூரை  அடுத்துள்ள ச.அய்யம்பாளையம்  கிராமத்தைச் சேர்ந்த பாலையா மகன் நந்தகுமார்  என்பவருடையதும்,  அவர், தாசில்தார்  ரேணுகாதேவி சமயபுரம் பகுதியில் கட்டிவரும் புதிய வீட்டுக்கு மணல் அடித்துச் செல்கிறோம் எனச் சொல்லவே, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அங்கு  வந்த தாசில்தார்  ரேணுகாதேவியை அவரது வாகனத்துடன்   சிறைப் பிடித்தனர்.  அதையடுத்து மண்ணச்சநல்லூர் போலீஸார் லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் நந்நகுமார் மற்றும் தாசில்தார் ரேணுகாதேவி மற்றும் அவரது வாகனத்தையும் மீட்டனர். பின்னர் மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் நந்தகுமார்  மற்றும் அவரது லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
 
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மணல் கடத்தல் சர்ச்சையில் சிக்கிய தாசில்தார் ரேணுகா மணப்பாறை டி.என்.பி.எல் காகித தொழிற்சாலை தாசில்தாராக பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக திருச்சி மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணியாற்றிய ராஜேஷ் கண்ணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
 
குண்டர் சட்டத்தில் கைது செய்ய மனு அளித்த சமூக ஆர்வலர்கள்
 
இந்த நிலையில் இன்று பாசன வாய்க்கால் விவசாயிகள் ஒருங்கிணைப்புத் தலைவர் அன்புசெழியன் தலைமையில் ம.தி.மு.க புறநகர் மாவட்ட பொறுப்பாளர் சேரன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
 
பின்னர் நம்மிடம் பேசிய காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ``காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளைக் குறித்து தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகிறோம். அதுமட்டுமல்லாமல் பாசன வாய்க்கால் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவும் மணல் கடத்தல் குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர், தலைமைச் செயலாளர், திருச்சி கனிமவள அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் பலமுறை மனு அளித்துள்ளார்கள். ஆனால், நடவடிக்கை இல்லை  இந்த நிலையில், கடந்த சிலவாரங்களுக்கு முன்பு மணல் கொள்ளையில் ஈடுபட்ட வட்டாட்சியர் ரேணுகாதேவியை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாகவும்,  பாசன வாய்க்கால் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு கொடுத்த புகாரின் காரணமாகவும், அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீது எந்தவித மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
மணல் கடத்தலில் ஈடுபட்ட வட்டாட்சியர் ரேணுகாதேவி விவகாரத்தில் அவர் பணியிட மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளார். இது கண் துடைப்பு நடவடிக்கை. தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மற்றும் அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற அரசாணைப்படி, வட்டாட்சியர் ரேணுகா தேவி மீது மணல் திருட்டு வழக்கு பதிவு செய்து அரசு அறிவித்தபடி குண்டர் சட்டத்தில் உடனடியாக அவரைக் கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் செய்யும் பொதுமக்களைத் திரட்டி அடுத்தகட்ட போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும்" என்றார் காட்டமாக.