img/728x90.jpg
 புழல் சிறையிலிருந்து ஒரு கைதியின் கடிதம் - என் உயிருக்கு ஆபத்து

புழல் சிறையிலிருந்து ஒரு கைதியின் கடிதம் - என் உயிருக்கு ஆபத்து

 தரம் உயர்ந்த மாடர்ன் ஆடைகள்; வெளியிலிருந்து வரவழைக்கப்பட்ட விதவிதமான உணவு வகைகள்; திரைச் சிலைகள்; ஆண்ட்ராய்டு செல்போன்கள்; போதைப் பொருள்கள் எனப் புழல் சிறையே சொர்க்கமாக மாற்றியமைக்கப்பட்டு, அங்கு கைதிகள் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவருவது போன்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி, தமிழகத்தை அதிரச் செய்தன.

 
`தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள், பெண் கைதிகள் எனச் சில பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும் புழல் சிறையில், இந்த விவகாரத்துக்குப் பிறகு அந்தச் சிறையில் கெடுபிடியான சில மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளனர், சிறைத்துறை அதிகாரிகள். இப்படியான மாற்றங்கள் வரவேற்கத்தகுந்தது என்றாலும், ஒருசில கைதிகளின்மீது மனித உரிமை மீறல் நடத்தப்படுவதாகக்  குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுதொடர்பாக  நீதிபதி ஒருவருக்கு, அசோக் (4558) என்கிற கைதி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் அசோக்கின் மனைவி நம்மைத் தொடர்புகொண்டதோடு, ``எனது கணவரைக் காப்பாற்ற உதவி செய்யுங்கள்" என்று கதறி அழுதார். 
 
இதுதொடர்பாக அசோக், நீதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், `` `அ' பிரிவில் இருந்த என்னை, திடீரென எந்தக் காரணமும் இன்றி செல்லூலார் பிளாக்குக்கு மாற்றம் செய்துவிட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளை அடைத்துவைக்கும் அறை அது. அந்த அறையில், `அ' பிரிவு கைதிகளை அடைக்க வேண்டிய காரணம் ஏன் என்று தெரியவில்லை. கடந்த 5 நாள்களுக்கு முன்பு சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்... என்னிடம், `நீ இலங்கையைச் சேர்ந்தவன்தானே...? செல்போன் பயன்படுத்துகிறாயா?' எனக் கேட்டார். அதற்கு நான், `ஐயா... நான் இன்னும் 3 மாதங்களில் விடுதலையாக உள்ளேன். என் மனைவியும் 2 நாள்களுக்கு ஒருமுறை வந்து பார்த்துச் செல்கிறார். நான் ஏன், செல்போன் பயன்படுத்தப் போகிறேன்' என்று மிகவும் பணிவான முறையில் பதில் சொன்னேன். ஆனால், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் கேட்டுவிட்டுப் போன அடுத்த 2 நாள்களில் `அ' பிளாக்குக்கு என்னை மாற்றிவிட்டனர்.  
 
எந்தத் தவறும் செய்யாத என்னை ஏன் இந்த பிளாக்கில் மாற்ற வேண்டும்..? இலங்கை கைதி என்பதாலும், புழல் சிறையில் யாரோ செய்த தவறுகளுக்காகச் சந்தேகம் என்ற பெயரிலும் என்னைத் துன்புறுத்துகிறார்கள். எனவே, நான் தாக்குதலுக்கு உள்ளானாலோ அல்லது வேறு மாவட்டங்களில் உள்ள சிறைகளுக்கு மாற்றப்பட்டாலோ, அதற்குச் சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மட்டுமே காரணமாக இருக்க முடியும். இதே அறையில் இருந்தால், என்னுடைய உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக கண்காணிப்பாளர் செந்தில்குமாரை அழைத்து விளக்கம் கேட்க வேண்டும். மேலும் பழையபடியே என்னை, `அ' பிரிவுக்கு மாற்றம் செய்ய வேண்டும்" என்று அதில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. 
 
இதுகுறித்து அசோக்கின் மனைவி சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ``நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். அவருடைய தாயகம் இலங்கை. அவருக்குத் தொடர்பில்லாத குற்றச்சாட்டில் இத்தனை ஆண்டுக்காலம் சிறையிலிருந்து தண்டனை அனுபவித்து வருகிறார். சிறையிலிருந்து வெளியில்வரும் இந்தச் சூழலில், இப்படியான பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகள் அடைக்கும் அறையில் அடைத்துவைத்து என் கணவரைத் துன்புறுத்துகின்றனர். சிறையில், அவரைச் சந்தித்தபோது மிகுந்த வேதனையாக இருந்தது. என்னுடைய கணவர் நேர்மையானவர். அவரை இதிலிருந்து மீட்கவே நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்றார், கண்ணீரைத் துடைத்தபடியே.
 
இதுதொடர்பாக, `சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், ``இந்தப் புகார் பொய்யானது. எந்த ஒரு கைதியையும் அப்படி நாங்கள்  அடைக்கவில்லை" என்று முடித்துக்கொண்டார்.   
 
கைதிகளின் உணர்வுகளையும் அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும்.