img/728x90.jpg
பேரனுக்குப் பேர் வெச்சுட்டீங்களா? ஜெயக்குமார்

பேரனுக்குப் பேர் வெச்சுட்டீங்களா? ஜெயக்குமார்

 அமைச்சர் ஜெயக்குமார் விவகாரச் சிந்து அவரின் அம்மா சாந்தி ஆகியோர் மீது முத்தியால்பேட்டை, எம்.கே.பி.நகர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்கறிஞர் கணேசன், சூப் கடைக்காரர் சந்தோஷ்குமார் ஆகியோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி ஆகியோர் விசாரித்துவருகின்றனர். 

 
 இதுதொடர்பாக சிந்துவின் அம்மா சாந்தியிடம் பேசினோம். 
 
 ``சார், என் மேல களங்கம் ஏற்படுத்த பொய்ப் புகார் கொடுத்திருக்கிறாங்க. இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறாங்க என்று தெரியல. டெய்லி சூப் ஆர்டர் பண்ணும் நம்பரை வெச்சு அந்தப் பையனுக்கு (சந்தோஷ்குமார்) காசு கொடுத்து ஒரு ஸ்டோரி பண்ணியிருக்காங்க. எனக்கு எந்த அட்வகேட்டும் தெரியாது. நான் எந்தவிதப் புகாரும் கொடுக்கல. கோர்ட்டு வாசலில் வைத்து யாரிடமும் தகராறு செய்யல" என்று வழக்கறிஞர் கணேசன், சூப் கடைக்காரர் சந்தோஷ்குமாரின் புகார்களுக்கு விளக்கமளித்தார் சாந்தி. 
 
அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 
 
வங்கி மேலாளர் ஒருவர் மீது முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நீங்கள் புகார் கொடுத்தாக வழக்கறிஞர் கணேசன் தெரிவித்துள்ளாரே? 
 
 ``அதுவா சார், அந்த பேங்க் மேட்டரச் சொல்றேன். அவரு பேங்க்ல மேனஜாரா இருந்தாரு. ஒரு ரூம் கேட்டு இல்ல... இல்ல... வாடகைக்கு வீடு கேட்டு வந்தாரு. 8,000 ரூபாய்க்கு ஒரு ரூமை வாடகைக்குக் கொடுத்தேன். ஆனால், அவரு வீட்டுச்சாவியை வெச்சுக்கிட்டு தேவையில்லாம பிரச்னை செய்தாரு. அதுதவிர வேறு எதுவும் இல்ல. நீங்களே சொல்லுங்க பிராட்வே பகுதியில இரண்டு பெட் ரூம், கிச்சன் எல்லாம் மாசம் 20,000 ரூபாய்க்கு வாடகைக்குக் கொடுக்காறாங்க. ஒரு ரூம் என்று கேட்டதால 8,000 ரூபாய்க்குக் கொடுத்தேன். ஆனால், அவரு முழு வீட்டையும் வாடகைக்குக் கேட்டாரு. லண்டனிலிருந்து சிலரை தங்க வைக்க ஏற்பாடு செய்தாரு. அதற்கு நான் சம்மதிக்கல. அவரோட ஃபைல்கள் அந்த ரூம்ல இருந்துச்சு. ஆனா அவரு அங்கு தங்கல. அவருக்குச் சொந்த ஊரு ஆந்திரா. அதுதான்சார் பேங்க் மேனஜரு பிரச்னை"
 
உங்கள் மகள் சிந்துவை சந்தோஷ்குமார் காதலித்ததாகவும் உங்களுக்கு இதயத்தில் ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று 5 லட்சம் ரூபாய் கடனாக வாங்கிவிட்டு சிந்து ஏமாற்றிவிட்டதாகவும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதே? 
 
 ``அதுஎல்லாம் பெரியவரின் (அமைச்சர் ஜெயக்குமார்) ஆட்கள் செய்கிற காரியம். சந்தோஷ்குமார், எங்கள் வீட்டின் அருகில் சூப் கடை வெச்சுருக்கான். எனக்குக் கீரையை சமையல் பண்ணிச் சாப்பிடப் பிடிக்காது. அதனால கீரை சூப் தினமும் சந்தோஷ்குமார் கடையில குடிப்பேன். ஒரு சூப் 35 ரூபாய். போனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கு வந்து கொடுப்பாங்க. அப்படிதான் சந்தோஷ்குமார் பழக்கம். சில நாளுக்கு முன் பெரியவரைக் காப்பாற்ற சந்தோஷ்குமார் போனில் பேசினாரு. அந்த ஆடியோ என்னிடம் இருக்கு. அதை வெளியிட்டால் போதும் சந்தோஷ்குமாரை ஏவி விட்டவர்கள் யாரென்று தெரிந்துவிடும். காச வாங்கிட்டு சிந்து மீது பொய் புகார் கொடுத்திருக்கான். எனக்கு ஹார்ட்ல எந்தப் பிரச்னையும் இல்ல. சிந்துவோட அப்பா சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறாரு. சென்னையிலும் புதுச்சேரியிலும் சொந்தமா வீடு இருக்கு. அப்படியிருக்கும்போது சிந்து ஏன் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கணும். உண்மையைச் சொல்லப்போனால் சந்தோஷ்குமாருதான் எங்கக்கிட்ட கடன் வாங்கியிருக்கான். எனக்கு ஹார்ட்ல ஆபரேசன் எல்லாம் பண்ணல. குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன்தான் பண்ணியிருக்கு."
 
சிந்துவின் மகனுக்குப் பெயர் வைத்துவிட்டீர்களா? 
 
``இல்ல சார். சீக்கிரத்தில வைப்போம்" (அப்போது குழந்தை அழ, இருடா ஆயா பேசிட்டு வந்துடுறேன் என்று சாந்தி சமாதானப்படுத்தினார்) 
 
 அமைச்சர் ஜெயக்குமாருடன் நீங்கள்தான் போனில் பேசினீர்களா? 
 
 ``ஆமாம்."
 
அமைச்சர் ஜெயக்குமார் தரப்பிலிருந்து உங்களுக்கு நேரிடையாகவும் மறைமுகமாகவும் மிரட்டல் வருகிறதா? 
 
 ``அப்படியெல்லாம் எங்களை யாரும் மிரட்ட முடியாது. நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை."
 
அமைச்சர் ஜெயக்குமாருக்கும் சிந்துவுக்கும் எப்படிப் பழக்கம் ஏற்பட்டது?
 
 ``சார், அத விடுங்க... எங்க மீது புகார் கொடுத்தவங்கள பத்தி எழுதுங்க. இரண்டு நாள்ல உங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமாரைப் பத்திய உண்மையைச் சொல்றேன்!’’