img/728x90.jpg
பறக்கும் சாலைக்காக வெட்டப்படும் பத்தாயிரம் மரங்கள்!

பறக்கும் சாலைக்காக வெட்டப்படும் பத்தாயிரம் மரங்கள்!

 சென்னை-சேலம் எட்டுவழி பசுமைச் சாலைக்கு மக்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு, அதை தமிழகத்தின் தலைப்புச்செய்தி ஆக்கியது. அந்தச் சாலை பற்றித் தெரிந்த நம்மில் எத்தனை பேருக்கு, மதுரை பாண்டியன் ஹோட்டல் ஜங்ஷன் முதல் நத்தம் வரை அமையவிருக்கும் நான்குவழிச் சாலையால் ஏற்பட இருக்கும் பாதிப்புகளைப் பற்றித் தெரியும்? அதிகப் போக்குவரத்து இல்லாத இங்கு ஏற்கெனவே தரமான சாலை இருக்கும்போது, அதில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பறக்கும் உயர்மட்ட சாலைப்பாலம் அமைக்க வேலைகளைத் தொடங்கியுள்ளதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

 
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின்கீழ், மதுரை பாண்டியன் ஹோட்டல் அருகிலிருந்து செட்டிக்குளம் வரை 7.3 கி.மீ தூரத்துக்குப் பறக்கும் உயர்மட்ட சாலைப்பாலம் அமைக்கப்படுகிறது. அந்தப் பாலம் இறங்கும் செட்டிக்குளம் முதல் நத்தம் வரை ஏற்கெனவே இருக்கும் சாலையை விரிவாக்கி, நான்குவழிச் சாலை அமைக்கப் படுகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இதன் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.1068 கோடி. பாலம் அமைக்கப்படும் 7.3 கி.மீ தூரத்துக்கும் 220 தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் மதுரை மீனாட்சி, கள்ளழகர் சிலைகளையும் வடிவமைக்க உள்ளனர்.
 
சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும் இந்தச் சாலையால், ஏராளமான விளைநிலங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும், பெருமளவு மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவருவது மதுரை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கேள்விகள் இவைதான்...
 
‘ஒரு மரம் வெட்டுனா, 10 மரங்கள் வளர்க்கணும்’ என நீதிமன்ற வலியுறுத்தல் இருக்கு. இந்தச் சாலையில் மரத்த வெட்டுறதுக்கு முன்னாடியே ஏன் அதுக்கு மாற்றா மரங்களை நட்டு வைக்கல?
 
இந்த மரங்களை வெட்டுறதுக்கு பதிலா, அப்படியே இடப்பெயர்ச்சி செஞ்சிருக்கலாமே. இதை மதுரையிலேயே சில இடங்களில் செய்திருக்காங்க. குறிப்பா, கடந்த மாதம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சில மரங்களை இடப்பெயா்ச்சி செய்திருக்காங்க. இங்கு ஏன் செய்யல?
 
சில நேரங்களில், வெட்டுற மரத்துக்குப் பதிலா அப்போதைக்குப் பொது மக்கள் வாயை அடைப்பதற்காக சில மரங்களை நடுறாங்க. அப்படி அவுங்க நட்ட எத்தனை மரங்கள் முறையான பராமரிப்போட வளர்ந்திருக்கு? 
 
இந்தச் சாலையில் இருக்குற டிவைடர்ஸ் எல்லாம் பல லட்சம் செலவுல இப்போதான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி கட்டுனாங்க. இப்போ பாலம் வருதுன்னு அதை இடிக்கிறாங்க. முறையான திட்டமிடல் இருந்தா இப்படிச் செய்வாங்களா?
 
மரங்களையும் காட்டையும் அழிச்சுட்டு அவுங்க இரண்டு மடங்கு நிலம் கொடுத்தாலும் ஈடுகட்ட முடியாது. ஒவ்வொரு மரமும் 30, 40 வருஷமா வளர்ந்து நிக்குது. எங்களோட தோப்புத் துரவையெல்லாம் திருப்பி அவங்க எங்கே உருவாக்கித் தரமுடியும்? 
 
இவ்வாறு விவசாயிகளிடமும் மக்களிடமும் பலவாறாக எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மரங்களை வெட்டுவதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும் ‘மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கம்’ அமைப்பினரிடம் பேசினோம். ‘‘900 மரங்களை இந்தப் பாலத்துக்காக மட்டும் வெட்டப்போறதா தகவல் வந்திருக்கு. ஆனா, நன்கு வளர்ந்த, பணமாகக்கூடிய மரங்களை மட்டும்தான் அவங்க கணக்குக் காட்டியிருக்காங்க. ஐந்தாறு ஆண்டுகள் வளா்ந்த நிலையில் உள்ள பெருமரக்கன்றுகளும், எக்கச்சக்கமாக சிறு மரக்கன்றுகளும் இருக்கு. அதையெல்லாம் யாருமே கணக்குப் பண்ணல. எல்லாம் சேர்த்தா, பத்தாயிரம் மரங்கள் வரும். வளர்ச்சின்னு சொல்லிட்டுச் செயல்படுத்தப்படுற திட்டங்களால பாதிக்கப்படுறது நாம மட்டுமில்ல, விலங்குகளும் பறவைகளும்கூடத்தான். இந்த உலகத்துல மனுஷங்க மட்டுமே வாழ்ந்துட்டு இல்லன்னு அரசாங்கத்துக்கு யார்தான் புரிய வைக்கிறது?’’ என்று ஆதங்கமாகப் பேசுகிறார் அந்த அமைப்பின் ஸ்ரீதர் நெடுஞ்செழியன்.
 
அதே அமைப்பின் கார்த்திகேயன் பார்கவிதை, ‘‘இந்தப் பகுதியில 55 வகையான மரங்கள் இருக்கு. அதுல கடம்பம், காயம் பூ, செங்கொன்றை போன்ற அரிய வகை மரங்களும் அடக்கம். மதுரையில் வேற எந்தப் பகுதியிலும் இல்லாத 46 ஆலமரங்களும் இங்குதான் வரிசைக்கட்டி நிற்கின்றன. சரியான திட்டமிடுதல் இல்லாமல் இப்படியே அனைத்தையும் அழிப்பது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி’’ என்றார்.
 
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாகப் புதிய மரங்களை நட்டு, முறையாகப் பராமரித்து வளர்ப்பதில் பல சிக்கல்கள் உள்ளன” என்று கிடைத்த பதிலே, ‘1,000 மரங்களை அழித்தாலும் ஒரு மரத்தைக்கூட மீண்டும் உருவாக்குவது கடினம்’ என்கிற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 
 
சாலையோரம் கரும்புச்சாறு கடை வைத்திருக்கும் முதியவர் விரக்தியுடன் கேட்ட கேள்வி நம்மை உலுக்கியது. ‘‘நான் 15 வருஷமா இங்கதான் கடை வச்சிருக்கேன். 15 வருஷத்துக்கு முன்னாடி இங்க ரெண்டு புங்க மரங்களை நட்டு வச்சேன். நல்லா வளர்ந்து நிழல் கொடுத்துட்டு இருந்துச்சு. போன வாரம் ரெண்டையும் வெட்டிட்டாங்க. ஏன் வெட்டறீங்கன்னு கேட்டதுக்கு, ‘உன்னை யாருடா இங்க மரம் வைக்கச் சொன்னது’ன்னு கேட்டாங்க. இனி அவுங்களால இந்த 15 வருஷத்து மரத்தைக் கொண்டுவர முடியுமா? திருப்பி ஒரு மரம் நட்டு வளர்த்தாலும், நான் அப்போ உசுரோட இருப்பேனான்னு தெரியலம்மா!’’ 
 
பதில் சொல்லுங்கள் அதிகாரிகளே!