img/728x90.jpg
பெண்களின் உடல்ரீதியான பிரச்னைகளுக்கு கைவைத்தியம் சொல்லும் வேதவள்ளி பாட்டி!

பெண்களின் உடல்ரீதியான பிரச்னைகளுக்கு கைவைத்தியம் சொல்லும் வேதவள்ளி பாட்டி!

 இதனால என் பென்ஷன் பணம் வராமப்போச்சுனா, அப்புறம் உன் அம்மாவுக்கு மருமகளா வந்து உன் வீட்ல ஒக்காந்துப்பேன்” என்று கிண்டல் செய்தபடியே என்ட்ரி கொடுத்தார், 94 வயதான வேதவள்ளி பாட்டி. பெண்களின்  ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும் இந்தப் பாட்டி கடலூர் கூத்தப்பாக்கத்தில் வசிக்கிறார்.

 
கடலூர் அவ்வை சண்முகிகையில் ஒரு பை, அதில் பல டப்பாக்கள். அவை என்னவென்று கேட்டதற்கு, ``இந்த காலத்துல கண்டதையெல்லாம் வாயில் போட்டுக்கிட்டு செரிமானம் ஆகாம ஆயுள குறைச்சிக்குதுங்க. அதான் செரிமானத்துக்கு நீட்டு மாத்திரை, சளிக்கு உருண்டை மாத்திரையை (அவர் இப்படித்தான் அழைத்தார்) ஓமத்தண்ணி காய்ச்சு விக்குறேன்” என்றார்.
 
``நீட்டு மாத்திரையா, அப்படின்னா?'' என்று கேட்டதுதான் தாமதம்... ``கருந்துளசி, வெள்ள துளசி, தூதுவளை, மொசமொசக்கை, நொச்சித் தழை, நொனா தழை. இதையெல்லாம் நல்லா அலசி உலரவெச்சு, அம்மியில் போட்டு பதமா அறைச்சு பெருங்காயம் போட்டு நீட்டா புடிச்சா, அது நீட்டு மாத்திரை” என்றார். பெண்களின் உடல்ரீதியான பல பிரச்னைகளுக்கு கைவைத்தியம் சொல்வதால், வேதவள்ளிப் பாட்டிக்கு ஏரியாவில் ஏகத்துக்கும் பிரபலம்.
 
 
அவர் தயாரிக்கும் மருந்துக்குத் தேவைப்படும் தழைகளை, தேடிப் பறிக்கிறார். மற்றவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்கிறார். இவை அனைத்தையும் சிறு அலுப்பும் இல்லாமல் செய்கிறார் என்பதே நம்மைச் சிலிர்க்கவைக்கிறது. பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளில் தொடங்கி, குழந்தையின்மை, குழந்தைக்கு உரம் எடுத்தல், குடல் ஏற்றம் சரிசெய்தல், குழந்தைக்கு தலைக்கூற்றுதல் என, குழந்தை மற்றும் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வித்தைகளையும் கைவசம் வைத்துள்ளார்.
 
``குழந்தைங்க உடம்புக்கு எந்தப் பிரச்னையா இருந்தாலும் நாங்க பாட்டிகிட்டதான் முதல்ல போவோம். `இதெல்லாம் வழக்கமா இந்த வயசுல குழந்தைகளுக்கு வர்றதுதான்' எனச் சொல்லி, ஏதாவது சின்ன கைவைத்தியம் செய்வார். எல்லாமே சரியாகிவிடும். சிலசமயம் பாட்டியே `ஆஸ்பத்திரி போய் பாரு' என்று சொல்லி அனுப்பிவிடுவார்” என்கிறார்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள். ``இந்த ஊரு இளசுகளுக்கு, பேச்சிலும் பலத்திலும் படு டஃப் இந்தப் பாட்டி'' என பாட்டியை கேலிசெய்கிறார் அதே ஏரியவைச் சேர்ந்த கார்த்திகேயன். 
 
வேதவள்ளிதான் உண்மையான பெயர் என்றாலும், பாட்டிக்கு ஊருக்குள் `அவ்வை சண்முகி' என இன்னொரு பெயரும் உண்டு. இந்த ஜாலி பாட்டியின் மறுபக்கம் நம்மைச் சிலிர்க்கவைத்தது. ``நொண்டியோ ஊனமோ, கறுப்போ சிவப்போ நமக்குனு ஒண்ணு பொறந்துட்டா அந்தக் குழந்தைங்க மேல பாசம் குறைஞ்சிடும்கிற பயத்துல, நான் பிள்ளையே பெத்துக்கல” என்ற வார்த்தைகள் நம் கண்களை ஈரமாக்கின.
 
தான் குழந்தை பெற்றுக்கொண்டால் தன் கணவனின் முதல் மனைவிக் குழந்தைகள் மீதுள்ள அன்பு குறையும் என்பதால், ஊர் பேச்சைப் பொருட்படுத்தாமல் குழந்தைப் பெற்றுக்கொள்ளாமலேயே தாயானார் இந்த வேதவள்ளி பாட்டி. இப்போது, தாய்க்கும் தாயாகப்போவோருக்கும் இவரது கைவைத்தியம் இன்றியமையாதவை என்று ஊரே பேசுகிறது.
 
எவ்வளவு தொலைவானாலும் நடந்தே செல்வார். அந்தக் கால உணவும் கைவைத்தியமுமே, இவரது ஆரோக்கியத்துக்குக் காரணம். இந்தக் காலத்தில் 30 வயதானாலே நோயெல்லாமும் நம்மை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துவிடுவது சாதரணமாகிவிட்டது. சில எளிய மனிதர்கள் போதும், கடுமையான நாளைகூட சந்தோஷமாக மாற்றுவதற்கு. அப்படித்தான் வேதவள்ளி பாட்டியும் சாதாரணமான ஒரு நாளையும் சந்தோஷமாக மாற்றுகிறார்.