• :
  • :
களத்தில்

எத்தனை கோடி செலவு செய்தாலும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது

எத்தனை கோடி செலவு செய்தாலும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற முடியாது

எடப்பாடி அரசைக் கண்டித்து அ.ம.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நிலக்கோட்டையில் நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நூற்றுக்கும் குறைவான தொண்டர்கள் கலந்துகொண்டனர். பிற்பகல் 2 மணி வரை உண்ணாவிரதத்திலிருந்த பெரும்பாலான நாற்காலிகள் காலியாகவே இருந்தன. மாலை 5 மணிக்கு டி.டி.வி தினகரன் வருவதையொட்டி அக்கம்பக்க கிராமங்களிலிருந்து நிர்வாகிகள் வாகனங்களில் ஆட்களை அழைத்து வந்தனர். மாலை 4 மணிக்கு மேல் கிராமங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தைக் கூட்டினார்கள்.

பின்னர், கூட்டத்துக்கு வருகை தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசிய டி.டி.வி தினகரன்,  ``தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளிலும் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி, யாரால் முதல்வர் பதவி வகிக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும். சின்னம்மா தயவால் இந்த ஆட்சி நீடித்து வருகிறது. என்னைப் பார்த்து துரோகி என்கிறார். யார் துரோகி என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.

1996 தேர்தலைத் தவிர அனைத்து தேர்தலிலும் நிலக்கோட்டை தொகுதியில் அம்மா தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. முதல்வரை மாற்றும் வரை ஓய மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். வருகின்ற இடைத்தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும். ஆர்.கே நகர் தொகுதி போல் 18 தொகுதி உட்பட 20 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும். எத்தனைக் கோடி செலவு செய்தாலும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாது. ஆர்.கே.நகர் போலவே அ.தி.மு.கவினரை ஓட ஓட விரட்டுவோம். எடப்பாடி அரசு புறக்கணித்த இந்த நிலக்கோட்டை தொகுதியில் வரும் தேர்தலில் குக்கர் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்” என்றார்.