• :
  • :
களத்தில்

மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட மாடுகள் புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைப்பு

மணல் திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட மாடுகள் புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் மணல் எடுப்பதற்கு 5 வருடங்களாகத் தடை இருந்து வருகிறது. ஆனாலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஜோராக நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு பகுதியில் உள்ள உதயம்பாக்கம் கிராமத்தில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் எடுப்பதாக செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்துக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் இன்று காலை உதயம்பாக்கம் பாலாற்றுப் பகுதிகளுக்குச் சென்றபோது மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மாடுகளுடன் வண்டியை விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அப்போது அங்கிருந்த 5 மாட்டு வண்டிகளைக் கைப்பற்றி செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்துக்குக் காவலர்கள் கொண்டுவந்தனர். கைப்பற்றிய வண்டிகளைக் காவல்நிலையத்துக்கு கொண்டுவந்து வைத்திருந்தனர். ஆனால், மாடுகளை மீட்டுச் செல்ல யாரும் வரவில்லை. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள புளூ கிராஸ் அமைப்புக்குக் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் கிண்டி புளூகிராஸ் பொது மேலாளர் ஜான் வில்லியம் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்துக்கு வந்தார். பறிமுதல் செய்யப்பட்ட 10 மாடுகளையும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் இளங்கோவன் புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைத்தார்

இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் இளங்கோவனிடம் பேசினோம். ``உயிருள்ள விலங்குகள் காவல்துறையிடம் பிடிபட்டால் வன விலங்கு உயிரியல் சட்டப்படி புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வைத்திருக்கக் கூடாது. அந்த மாடுகள் தங்களுடையதுதான் என நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து, பின்பு நீதிபதியின் உத்தரவுப் பெற்று புளூ கிராஸ் அமைப்பிடம் கொடுக்க வேண்டும். மாடுகளை அடையாளம் காட்டி பிறகு புளூ கிராஸ் அமைப்பினர் மாடுகளை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பார்கள்’’ என்கிறார். காவல்துறையினரின் புதிய யுக்தியால் மாடுகளில் மணல் கடத்துபவர்கள் மிரண்டு போய் உள்ளனர்.