• :
  • :
களத்தில்

எங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும் - ஆங்கிலப் பயிற்சி குறித்து அரசுப் பள்ளி மாணவி

எங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும் - ஆங்கிலப் பயிற்சி குறித்து அரசுப் பள்ளி மாணவி

ஆங்கில பேச்சுப் பயிற்சி தமிழ் மொழியை நிச்சயம் எந்த வகையிலும் பாதிக்காது. தமிழர்களுக்கான வளர்ச்சியாக மட்டுமே அமையும்."
``எங்க தன்னம்பிக்கை அதிகரிக்கும்!'' - ஆங்கிலப் பயிற்சி குறித்து அரசுப் பள்ளி மாணவி

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கில், 'அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது?' எனச் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளது. இதைப் பெரும்பாலானவர்கள் வரவேற்றாலும், 'இது இந்தி திணிப்புபோல அமையும்' போன்ற குரல்களையும் கேட்கமுடிகிறது. இந்த நிலையில், இந்த ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தினால் மாணவர்களுக்கு எந்த விதத்தில் பயனுள்ளதாக இருக்கும், இதனால் என்னென்ன முன்னேற்றங்கள் மாணவர்களிடம் ஏற்படும்... அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிலரிடம் பேசினோம்.

எஸ்.தீலிப், ஆங்கில ஆசிரியர், விழுப்புரம்

``பாடங்களைக் கற்பித்தல் கொள்கைகளில் அரசாங்கத்தால் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். இந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மாணவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் திணறினாலும், அதன் அவசியத்தையும் நலனையும் உணர்ந்து அதற்கு ஈடுகொடுத்து ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், ஆங்கிலப் பாடங்களைப் பொறுத்தவரை, புதுவிதமான கற்பித்தல் முறையில் பாடங்களை நடத்தினாலும்கூட அதன் முழுப்பயனும் மாணவர்களைச் சென்றடைவது இல்லை. காரணம் ஆங்கிலம் அவர்களுக்கு இயல்பானதாக இருப்பதில்லை. மேலும், ஆங்கிலம் என்பது மனப்பாடம் செய்து படிக்கும் ஒரு பாடம் என்றுதான் எண்ணுகிறார்கள். காரணம், ஆங்கிலத்தை உள்வாங்கிக்கொள்வதிலும் அதைப் பேசுவதிலும் அவர்களுக்கு அதிக சிரமம் இருக்கிறது. ஆனாலும்கூட மதிப்பெண்ணுக்காக மனப்பாடம் செய்து தேர்வு எழுதி விடுகிறார்கள்.


இதன் விளைவை அவர்கள் உயர் கல்வி செல்லும்போதுதான் உணர்கிறார்கள். கல்லூரிகளில் பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படும்போது அதைப் புரிந்துகொள்வதில் பின்தங்கி, தங்களைச் சமுதாயத்தில் நிரூபிக்கத் தடுமாறுகிறார்கள். இதுபோன்ற கல்விச் சூழலில், பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் வரவேற்புக்குரியது. இது அமல்படுத்தப்பட்டால், நிச்சயம் மாணவர்களின் ஆங்கிலத் திறன் வளரும். வேலைவாய்ப்பில் மற்ற மாநிலத்தவர்களுடனான போட்டியை எதிர்கொள்ளக் கைகொடுக்கும். தமிழர்களுக்கான வளர்ச்சியாகவே இது அமையும்.''

ராஜேஸ்வரி, ஆங்கில ஆசிரியை, விருதுநகர்

``ஏற்கெனவே அரசாங்கப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆங்கில வழிக்கல்வி என்பது அவர்களின் திறனாக இருக்கும்; திறனுக்கான வளர்ச்சியாக இருக்காது. எனவே, பள்ளிகளில் ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளும் அவசியமாகிறது. மாணவர்களைப் பொறுத்தவரை 90% மதிப்பெண் பெறுபவர்கள்கூட, கல்லூரிகளில் ஆங்கிலத்தில் வகுப்புகள் எடுக்கப்படும்போதும், மற்றவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போதும் தங்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்தால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகிறார்கள். எனவே, ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் மாணவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். ஆங்கிலத்தை மாணவர்கள் சரியாகப் புரிந்து படித்தால் மட்டுமே உயர் கல்வியில் சிறப்பாகச் செயல்பட்டு எதிர்காலத்தை நல்லபடியாக அமைத்துக்கொள்ள முடியும்."



மாணவிசிவ லட்சுமி, எட்டாம் வகுப்பு மாணவி, விழுப்புரம்

``உயர் படிப்பு, வேலை என்று எல்லா இடங்களிலும் ஆங்கிலம் அவசியமாக இருப்பதால் சரளமாக ஆங்கிலம் பேசக் கற்றுக்கொள்வது அவசியம் என்பது எங்களுக்குப் புரிகிறது. நீட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கும்கூட ஆங்கிலப் பயிற்சி நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். அதற்கான பயிற்சி வகுப்புகளை அரசாங்கப் பள்ளிகளில் அமல்படுத்தினால் நிச்சயம் என்னைப்போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும். கான்வென்ட் மாணவர்களைப்போல எங்களுக்கும் ஒரு தன்னம்பிக்கை கிடைக்கும். இதனால், தாய்மொழி தமிழ் மீதான எங்கள் பற்றில் எந்த மாற்றமும் ஏற்படாது.''

ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகள் பள்ளிகளில் நடைமுறைப்படுத்துவதை ஆங்கிலத் திணிப்பாக பார்க்காமல், தமிழர்களின் வளர்ச்சியாகப் பார்க்கலாம். நல்ல மதிப்பெண்கள் இருந்தும் ஆங்கிலப் புலமையை அளவீடாகக் கொள்ளும் வேலைவாய்ப்பு நேர்காணல்களில் தகுதியான எத்தனையோ பட்டதாரிகள் பின்தள்ளப்படுகிறார்கள். ஆங்கிலம் என்பது அறிவல்ல, மொழியே என்பதை நிரூபித்து தமிழர்கள் இன்னும் முன்னேறுவோம்.