img/728x90.jpg
கடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

கடலூர் மாவட்டத்தில் 233 புயல் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப் புயல் கடலூர்- பாம்பன் இடையே வரும் 15-ம் தேதி முற்பகலில்  கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால் கடலோர மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்பதால் புயலை எதிர்கொள்ள  கடலூர் மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

``கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே வரும் 15-ம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்பொழுது காற்று 80-90 கி.மீ வேகத்தில் வீசும். இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகள், 16 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளில் 19 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 4 ஒன்றியங்கள் கடற்கரையில் அமைந்துள்ளன. இதில் 6.50 லட்சம் மக்களும், 49 கடலோர கிராமங்களில் 28,000 குடும்பங்களும் உள்ளன. மாவட்டத்தில் அதிக வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாகப் 274 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. புயலுக்கு முந்தைய அனைத்து முன்னெச்சரிக்கைப் பணிகளையும், 14-ம் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு மையங்கள் 28, பல்நோக்கு பாதுகாப்பு மையம் 14 உள்ளன.

இவற்றில் 25,000 பேர் தங்க வைக்க முடியும். மேலும் கூடுதலாக 1.55 லட்சம் பேர் தங்க வைக்கும் வகையில் 191 தற்காலிக பாதுகாப்பு நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சாலை ஓரம் உயரமாகக் கட்டடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் புயல் வீசும் போது கீழே விழுந்து விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க அவற்றை நிறுவனங்கள் அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள விளம்பரப் பலகைகள், பேனர்களை நாளை காலைக்குள் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 233 புயல் பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் உணவு தயாரிக்க உணவுப் பொருள்கள், சமையலர்கள் தயார் நிலையில் உள்ளனர். இங்கு 7504 மெ.டன் அரிசி, 1058 மெ. டன் சர்க்கரை, 348 மெ. டன் கோதுமை இருப்பில் உள்ளது. மேலும் ஆவின் பால் 2,000 லிட்டர், பால் பவுடர் 3,000 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 13 கால்நடைகள் பாதுகாப்பு மையங்களில் தேவையான தீவனங்கள் இருப்பில் உள்ளது.

மாநில பேரிடர் மீட்புக் குழுவில் பயிற்சிபெற்ற 117 காவலர்கள், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 75 பேர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்கு உடனடியாக செய்திகளை தெரிவிக்கக் கடலூரில் இன்று முதல் 107.8 என்ற அலைவரிசையில் எப்.எம் ரேடியோ தொடங்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி வரை காவல் துறை, மருத்துவர்கள், தீயணைப்புத்துறை உட்பட அரசுத் துறையில் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூரில் புயல் தொடர்பான புகார்களுக்கு 1077, 04142-220700, 221113, 233933, 221383 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.