img/728x90.jpg
இரவில் ஆய்வா? இயற்கை வளத்தை அழிக்க

இரவில் ஆய்வா? இயற்கை வளத்தை அழிக்க

கனிம வளங்கள் என்ற பெயரில் விவசாய நிலையங்களில் மத்திய அரசு ஆய்வு செய்வதும், அந்த நிலங்களைப் பறித்து விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்துவதும் விவசாயிகளைக் கொந்தளிக்க வைக்கிறது. இப்போது, மதுரை அருகே அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் (Tungsten) என்ற அரியவகை கனிமம் இருக்கிறதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அரிட்டாபட்டி கிராமத்துக்கு நள்ளிரவில் ரகசியமாக வந்த அதிகாரிகள்  விவசாய நிலங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து அரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்புக் குழுவின் செயலாளர் ரவிசந்திரனிடம் கேட்டோம். “அரிட்டாபட்டி ராமாயிமலைக்குப் பின்புறம் விவசாய நிலங்களில் கடந்த 15 நாள்களாக இரவு 12 மணிக்கு மேல் நிலங்களில் அதிகாரிகள் அளவீடு செய்து, ஆவணங்களைச் சேகரித்துச் சென்றுள்ளனர். ஆய்வு செய்வதற்கான எந்த ஆவணங்களும் அவர்களிடம் இல்லை. அவர்களிடம் கேட்டதற்கு, ‘இங்கு வைரம், டங்ஸ்டன் உள்ளிட்ட விலைமதிப்பற்ற  பொருள்கள் கிடைக்கின்றனவா என முதற்கட்ட ஆய்வு செய்ய வந்துள்ளோம்’ என்று தெரிவித்தனர். ஆய்வுசெய்வது பற்றி எங்கள் கிராம வி.ஏ.ஓ-விடம் கூட முன்கூட்டியே சொல்லவில்லை. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததற்கு, ‘அவர்கள் எதற்காக ஆய்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை’ என்று கூறினர். எங்கள் கிராமத்தில், டங்ஸ்டனோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் எடுப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். இந்த மண்ணை அழிக்க நினைக்கும் யாரையும் எங்கள் ஊர் வரவேற்காது” என்றார் உறுதியாக.

மேலூர் தாசில்தார் சரவணன்,  “‘ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியா’வில் இருந்து வந்த அதிகாரிகள் அரிட்டாபட்டியில் கிரானைட் போன்ற மதிப்புவாய்ந்த இயற்கை வளங்கள் இருக்குமா என்று ஆய்வு செய்திருக்கலாம். ஆனால், ஆய்வுத்திட்டம் குறித்த ஆவணம் எதையும் அவர்கள் எங்களுக்குத் தரவில்லை. கிராம மக்கள் என்னிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளனர்.  இது தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும்” என்றார்.

அரிட்டாபட்டியில் ஆய்வுசெய்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். “அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் வளம் உள்ளதா என்று ஆய்வு செய்துவருகிறோம். இருட்டில் ஆய்வு செய்தால்தான் யு.வி சிக்னல் கிடைக்கும். அதனால்தான் இரவிலும் ஆய்வு செய்கிறோம். பாறைகளில் டங்ஸ்டன் கலந்திருக்கும். அந்த கனிமம் அரிட்டாபட்டியில் உள்ளதா என்று முதல்கட்ட ஆய்வு செய்தோம். இதில் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தனர்.

‘டங்க்ஸ்டன் கார்பைடு’ என்று அழைக்கப்படும் இந்த கனிமம் தங்கம், பிளாட்டினத்தை விடக் கடினமான பொருளாகும். இது பெரும்பாலும் பல்புகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.