img/728x90.jpg
தேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

தேனி அருகே 10 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் தேனி மாவட்டத்தில் வேகமாகப் பரவி வரும் சூழலில், ஆண்டிபட்டி அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைகுண்டு நகரில் கடந்த 10 ஆண்டுகளாக விவேகானந்தா மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. தங்க வணங்காமுடி என்பவர் இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர், மருத்துவப் படிப்பு படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்து வருவதாகப் பரவலாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இன்று தேனி துணை ஆட்சியர் தினேஸ்குமார், விவேகானந்தா மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர் இருக்கையில் அமர்ந்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த தங்க வணங்காமுடியைப் பிடித்து அவரிடம் மருத்துவ பட்டப்படிப்புக்கான ஆவணங்களைக் கேட்டார். அப்போது அவர் மருத்துவப்படிப்பு படிக்காதவர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மருத்துவத் துறை இணை இயக்குநர் சரஸ்வதிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர், நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது காலாவதியான மருந்துகள், தடை செய்யப்பட்ட கருத்தடை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு தங்க வணங்காமுடி கைது செய்யப்பட்டார். போலி மருத்துவமனையில் இருந்த மருந்துகள், மருத்துவக்கருவிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் கடமலைகுண்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.