img/728x90.jpg
இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்? 20 தொகுதிகள் 3 கட்சிகள்

இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்? 20 தொகுதிகள் 3 கட்சிகள்

 

ஒருவிரல் புரட்சி’க்காகக் காத்திருக்கின்றன 20 தொகுதிகள்.

பெரும்பான்மையின்றி ஊசலாட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க., ‘அ.தி.மு.க தொண்டர்களின் பெரும்பான்மை ஆதரவு தங்களுக்குத்தான் இருக்கிறது’ என்று முண்டாசு கட்டும் தினகரனின் அ.ம.மு.க., தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அவர் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் என்று மூன்று கட்சிகளுக்குமே இந்த இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த நிலையில், `இடைத்தேர்தலைத் தவிர்க்க வேறு வழியே இல்லையா?’ என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுப்பப்பட்டுவருகிறது.

‘தகுதிநீக்கம் செல்லும்’ என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, 18 எம்.எல்.ஏக்களும் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செல்ல 90 நாள்கள் கால அவகாசம் உள்ளது. 89-வது நாளில்கூட மேல் முறையீட்டுக்குப் போகலாம். அங்கே ‘உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை’ கிடைக்கலாம். ஆனால், அப்போதும்கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து மாற்றம் செய்யக்கோரும் அவர்களது எண்ணம் பலிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், ‘மேல் முறையீட்டு வழக்கு முடிகிறவரை, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது’ என்ற தடை ஆணையை வாங்கி, வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியைத் தமிழக ஆட்சியாளர்கள் செய்துவிடும் வாய்ப்பிருக்கிறது.

`‘தகுதி நீக்கம் செல்லும்’ என்ற நீதிமன்றத் தீர்ப்பு வெளியான ஆறுமாத காலத்துக்குள் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தி, சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தே ஆகவேண்டியது கட்டாயம்’’ என்பது சட்ட வல்லுநர்களின் கருத்து. அதனால்தான் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம், நிர்வாகிகள் கூட்டம் என்று ஜரூராகக் களத்திலிறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது ஆளும் அ.தி.மு.க தரப்பு. ஆனால், இந்த வேகத்தையும்கூட சந்தேகத்தோடு பார்க்கிறார்கள் அவர்களின் பங்காளிகளான அ.ம.மு.க-வினர்.

‘இடைத்தேர்தல் வேலைகளில் மும்முரம் காட்டுவதாக அ.தி.மு.க-வினர் பாவ்லாதான் செய்கிறார்கள். மத்திய அரசிடம் தங்களுக்கிருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கடைசி நேரத்தில் எப்படியும் தேர்தலைத் தள்ளிவைத்து ஆட்சியைத் தக்கவைக்கும் தந்திரத்தைத்தான் செய்வார்கள். அப்படியொரு சூழலை ஆட்சியாளர்கள் வலிந்து ஏற்படுத்துவது தெரியவந்தால், நாங்கள் மேல்முறையீடு செய்யவேண்டிய நிலை ஏற்படும்!’ என்கிறார்கள் இவர்கள்.

தில்லுமுல்லுதான் வியூகம்

இதுகுறித்துப் பேசும் டி.டி.வி ஆதரவாளரான வெற்றிவேல், ‘‘தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தாலும்கூட, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத் தேவையான எண்ணிக்கைகொண்ட தொகுதிகளில் மட்டும், ஏதாவது தில்லுமுல்லு செய்து தேர்தலையே நிறுத்திவைக்கும் திட்டங்களையும் தற்போதைய ஆட்சியாளர்கள் செய்துவருகிறார்கள்.

இதற்காகவே குறிப்பிட்ட தொகுதிகளில் மூத்த அமைச்சர்களைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறார்கள். இங்கே, திட்டமிட்டுப் பணப்பட்டுவாடா செய்து முடித்து, அந்தப் பழியைக் குறிப்பாக அ.ம.மு.க மீது சுமத்தி, முடிந்தவரை தேர்தலைத் தள்ளிவைக்கப் போராடுவார்கள்.

இப்படித் தேர்தல் நிறுத்திவைக்கப்படும் தொகுதிகளில், மறு தேர்தல் நடைபெறுவதற்குக் குறைந்தது ஆறுமாதகால இடைவெளி கிடைத்துவிடும். பின்னர், ஒட்டுமொத்தமாக ஆட்சியின் முழு அதிகாரத்தையும் இந்தக் குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் களமிறக்கி வெற்றிபெற முனைவதுதான் ஆட்சியாளர்களின் வியூகம்’’ என்கிறார்.

இதற்கிடையில், தி.மு.க - அ.ம.மு.க இடையில்  மறைமுக உடன்பாட்டுப் பேச்சு நடந்துவருவதாக அ.தி.மு.க முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்துப் பேசும்போது, ‘‘தி.மு.க-வோடு ரகசிய உடன்பாடு என்று எங்கள்மீது வீண்பழி சுமத்துகிறார்கள். அது தற்கொலைக்குச் சமம்! எதிரிக்கு எதிரி நண்பன்தான். பா.ஜ.க-வின் எதிரி காங்கிரஸ் என்றால், எங்களுக்கு காங்கிரஸ் நண்பன்தான். ஆனாலும்கூட தி.மு.க அப்படி என்றைக்கும் எங்களுக்கு நண்பனாகிவிட முடியாது... அது எப்போதும் எங்களுக்கு எதிரி கட்சிதான்’’ என்று மறுப்பவர், `‘இடைத்தேர்தலில் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர்த் தொகுதியைத் தவிர ஏனைய 19 தொகுதிகளும் ஜெயலலிதா  செல்வாக்கால் ஜெயித்த தொகுதிதான். எனவே, இம்முறையும் இந்தத் தொகுதிகள் எங்கள் வசப்படும்’’ என்கிறார் உறுதியாக.

இது எங்கள் கோட்டை!

இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியின் அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளராகக் களமாடிவரும் அமைச்சர் செல்லூர் ராஜு, , ‘‘தங்கள் ஆதரவாளர்களை உற்சாகம் அடையச் செய்வதற்காக டி.டி.வி தினகரன் தரப்பினர் எதையாவது பேசிவருகிறார்கள். எல்லாத் தொகுதிகளும் ஆர்.கே.நகர் ஆகி விடாது. ஒன்பது முறைக்கும் மேலாக அ.தி.மு.க வெற்றிபெற்ற தொகுதி திருப்பரங்குன்றம். இது எங்களின் கோட்டை!

தேர்தலை நடத்துவதும் கண்காணிப்பதும் மத்தியத் தேர்தல் ஆணையம்தான். இதில் மாநில அரசான நாங்கள் எப்படித் தலையிட முடியும்? தேர்தல் நடைமுறைகள் குறித்த ஆலோசனையை மட்டும்தான் மாநில அரசிடம் கேட்பார்களே தவிர, தேர்தலை எப்போது நடத்துவது என்ற முடிவைத் தேர்தல் ஆணையம்தான் சுயமாக முடிவுசெய்யும்.

தேர்தலைக் கண்டு எங்களுக்கு எந்த பயமும் இல்லை. எல்லாச் சமூக மக்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கிற வகையில், 20 தொகுதிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முறையும் வெற்றி எங்கள் பக்கம்தான்!’’ என்று தம்ஸ் அப் உயர்த்துகிறார்.

இதற்கிடையில், தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்கும் அ.தி.மு.க உள்விவகாரம் அறிந்தவர்கள், ‘‘இந்த இடைத்தேர்தல் தி.மு.க.வுக்கு முக்கியமான ஒன்று. சென்ற தேர்தலிலேயே தி.மு.க.வுக்கும் அ.தி.மு.கவுக்குமான வாக்கு வித்தியாசம் ஒரு சதவீதம்தான்.  இப்போது தேர்தல் நடைபெறும்  தொகுதிகளிலும் 19 தொகுதிகள் அ.தி.மு.க.வுடையது என்பதால் இதில் எவ்வளவு கிடைத்தாலும் தி.மு.க.வுக்குச் சாதகம்தான். கூடுதல் பலத்துடன் சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வை எதிர்கொள்ளலாம்” என்கிறார்கள்.

ஆனால் இன்னொருபுறம், “அ.தி.மு.க ஐந்து தொகுதிகளில் வெற்றிபெற்றாலே போதும். பெரும்பான்மைக்குத் தேவையான ஏனைய எம்.எல்.ஏ-க்களை வெற்றி பெற்ற எதிரணியிடமிருந்து எளிதாகத் தட்டிப் பறித்துக் கொள்வார்கள்.

இந்த இரண்டு பெரிய கட்சிகளுக்கிடையே நந்தியாக இருப்பது டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சிதான். அவரையே நம்பிவந்த 18 எம்.எல்.ஏ-க்களும் பதவி பறிபோய் ஒன்றரை வருடங்களாகிவிட்டன. மறுபடியும் அதே நபர்கள் கோடிக்கணக்கில் செலவுசெய்து, இடைத்தேர்தலில் ஜெயித்து வந்து, எடப்பாடி ஆட்சியைக் கலைத்துவிட்டால், மறுபடியும் இந்த எம்.எல்.ஏ-க்கள் பதவி இழக்கத்தானே நேரிடும்?

எதிரி கட்சியான தி.மு.க-வுக்கும் அ.ம.மு.க ஆதரவு கொடுக்க முடியாது... இந்தச் சூழ்நிலையில், மனக்கசப்பையெல்லாம் மறந்து எடப்பாடியும் தினகரனும் கைகோப்பதுதான் இழப்புகளை ஈடுசெய்ய ஒரே வழி... ஆனால் அதற்குச் சாத்தியம் குறைவு.

இந்த அரசியல் கூட்டல் - கழித்தல் கணக்குகளையெல்லாம் ஏற்கெனவே கச்சிதமாகப் போட்டுவைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமிதான். அதனால்தான், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களில் பத்துப் பேரைக் கையிலெடுத்து ‘உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை’ கேட்டு மேல் முறையீடு செல்லும் முயற்சிகளைச் சத்தமில்லாமல் செய்துவருகிறார். இந்தக் கணக்கு மட்டும் கூடிவந்தால், இப்போதைக்கு இடைத்தேர்தலே நடக்காது. இதுவரையில், ஆட்சியை நகர்த்திக்கொண்டு வந்ததுபோல், இந்த வழக்கை வைத்தே ஆட்சியை நீட்டித்துக்கொள்வார்’’ என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள் கிசுகிசுப்பாக.

ஆர்.கே.நகர்... தி.மு.க-வுக்குப் படிப்பினை!

இதற்கிடையில், இடைத்தேர்தல் குறித்து கனத்த அமைதிகாக்கும் தி.மு.க-வின் நிலை அனைவரது எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது. ‘என்னாச்சு... இடைத்தேர்தலில் தி.மு.க-வின் நிலைப்பாடுதான் என்ன...’ என்ற கேள்வியை அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனிடம் கேட்டேன்.

‘‘டி.டி.வி.தினகரன் புதுக்கட்சி ஆரம்பித்திருப்பதால், கொஞ்சம் வேகமாகத்தான் இருப்பார். ‘என்னாயிடுமோ’ என்ற பயத்தில் அ.தி.மு.க-வினரும்கூட ஜரூர் காட்டுவார்கள்தான். ஆனால், என்னைப் பொறுத்தவரை இடைத்தேர்தல் நடைபெறுமா என்பதே சந்தேகம்தான். அப்படித் தேர்தல் நடைபெற்றால், அதையும் எதிர்கொள்ள தி.மு.க தயாராகவே இருக்கிறது.

இந்த 20 தொகுதிகளில் மட்டுமல்லாமல், ஏற்கெனவே 234 தொகுதிகளிலும் தி.மு.க பூத் கமிட்டி தயார் நிலையில் உள்ளது. தலைமைக் கழகத்திலிருந்து பூத் கமிட்டி சோதனையும் செய்தாகிவிட்டது.  ஆர்.கே.நகர்த் தேர்தல் முடிவு எங்களுக்கும் ஒரு வகையில் படிப்பினைதான். அந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் தற்போது எங்களது வியூகத்தைக் கொஞ்சம் மாற்றி அமைத்திருக்கிறோம். இந்த முறை மிகச் சரியாகச் சொல்லியடிப்போம்!’’ என்கிறார் சிரித்தவாறு.

எது எப்படியோ... இந்த 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவு என்பது, தமிழக அரசியல் களத்தில் கட்சிகளின் உண்மையான பலம் என்னவென்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டிவிடும் என்பது மட்டும் உண்மை!

த.கதிரவன்