• :
  • :
களத்தில்

சென்னையில் போலீஸ் அசத்தல் - உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி

சென்னையில் போலீஸ் அசத்தல் - உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி

 சென்னையில் திருட்டு செல்போன் கும்பலை பிடித்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த போன்களை இன்று உரிமையாளரிடம் வழங்கினர். 

 
சென்னையில் செல்போன் திருட்டைத் தடுக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் செல்போன் திருடர்களுக்குக் கடிவாளம் போடமுடியவில்லை. இந்தச் சூழலில்தான் தி.நகர் துணை கமிஷனர் டாக்டர் கே.பிரபாகர் மேற்பார்வையில் எஸ்.ஐ.வெங்கடேசன் தலைமையிலான போலீஸ் டீம் துரிதமாகச் செயல்பட்டு திருட்டு செல்போன்களை சர்வசாதாரணமாக சென்னை பர்மா பஜாரில் விற்றுவந்த அப்துல்ரகுமானை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 50 ஐபோன்கள், 70 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். 
 
மொத்தமாக பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 217 செல்போன்களை அவர்களின் உரிமையாளரிடம் வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. செல்போன்கள் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்திருந்த பலருக்கும் போன்கள் திருப்பி வழங்கப்பட்டன. திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் செல்வநாகரத்தினம் செல்போன்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், ‘நீண்ட நாள்களாக செல்போன் திருடுபவர்களை கண்காணித்து இன்று இவ்வளவு போன்களை பறிமுதல் செய்துள்ளோம். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேப் போன்று மற்ற மாவட்டங்களிலும் போன்கள் திருட்டை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருகிறது. காணாமல் போன 217 செல்போன்கள் இன்று உரிமையாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. செல்போன்களில்தான் சிலர் பண பரிமாற்றம் முதல் தங்களில் அன்றாட சில தேவைகளையும் பயன்படுத்தி வருகிறார். அப்படிப்பட்ட செல்போன் திருடுபோவது மிகவும் வருத்தமான செய்தி. இதை எப்படியும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் தேடுதல் பணியில் இறங்கினோம். அது வெற்றிகரமாகிவிட்டது. எவ்வளவு விலை போனாக இருந்தாலும் கண்டிப்பாக புகார் கொடுங்கள் நிச்சயம் உங்கள் போன் கண்டுபிடித்துத் தரப்படும்” எனக் கூறினார். 
 
 
இன்றைய தினம் சுமார் 100 பேர் காணாமல் போன தங்களின் செல்போன்களை திருப்பி வாங்கிச் செல்ல வந்தனர். திரும்பவும் கிடைக்கவே கிடைக்காது என நினைத்த தங்களின் செல்போன்களை பலரும் மகிழ்ச்சியுடன் வந்து பெற்று சென்றனர்.