• :
  • :
களத்தில்

24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்

24 வீடுகளை கடலுக்குள் அனுப்பிய கஜா புயல் - சோகத்தில் மீனவ கிராமம்

 கஜா புயல் காரணமாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால், 24 வீடுகள் கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட சம்பவம் மீனவ மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
புதுச்சேரி - சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுச்சேரியை அடுத்திருக்கிறது பொம்மையார் பாளையம். மீனவ கிராமமான இது, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்டது. இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் கடல் அரிப்பால், கடந்த 10 ஆண்டுகளில் பல வீடுகளும், மரங்களும் கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் கரையைக் கடந்த கஜா புயல் புதுச்சேரி, கடலூர், வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
 
 
கஜா கரையைக் கடந்த அன்று, புதுச்சேரியில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. சுமார் 5 அடி தூரம் வரை அலைகள் மேலெழும்பியதால், கரையோரம் இருந்த மீனவ கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, பொம்மையார்பாளையம் மீனவர் கிராமத்தில் 24 வீடுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டன.
 
அதேபோல, பல தென்னை மரங்களும் வேரோடு சரிந்தன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, தொடர்ச்சியாக இருக்கும் கடல் அரிப்பால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் மரங்களும் கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டிருக்கிறது என்கின்றனர் அப்பகுதி மக்கள். 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமிக்குப் பின்னர் 75 வீடுகளும் 40 தென்னை மரங்களும் கடலுக்குள் சென்றிருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இழுத்துச்செல்லப்பட்ட வீடுகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மக்கள் தங்காததால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.