img/728x90.jpg
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல்?

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல்?

 சென்னை : நவ. 19-'கஜா' புயல் பாதிப்பிலிருந்து, தமிழகத்தின், டெல்டா மாவட்டங்கள் இன்னும் மீளாத நிலையில், வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, தமிழகத்திற்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடலோர மாவட்டங்களில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, கன மழை பெய்யலாம் என, எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபி மற்றும் வங்கக்கடலில் மீன் பிடிக்கச் செல்ல, மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தாக்கிய, 'கஜா' புயலின் கோர தாண்டவத்தால், நாகை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள், கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. சூறாவளி காற்றால் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாலைகளில் சரிந்து கிடக்கின்றன.வேளாண் பகுதிகள் நிறைந்த டெல்டா மாவட்டங்களில், தென்னை, வாழை மரங்கள் முறிந்து விழுந்துள்ளன; நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், ஒட்டுமொத்தமாக சாய்ந்து உள்ளன.
வாழ்வாதாரத்தையும், வீடுகளையும் இழந்து, ஆயிரக்கணக்கானோர், நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில், புயல் பாதிப்பில் இருந்து, இப்போதைக்கு மீண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நிவாரண பொருட்கள், சீரமைப்பு குழுக்கள் செல்ல முடியாத அளவுக்கு, அவை, தனி தீவுகளாக விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கஜா புயலை தொடர்ந்து, வங்கக்கடலின்
 
 
தென் கிழக்கில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. புயலைஏற்படுத்தக் கூடும் என, பொதுவாக கருதப்படும் 
இது, படிப்படியாக வலுப்பெற்று, வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, இன்று டெல்டா மாவட்டங் களுக்கு கிழக்கே நகரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால், இன்று இரவுக்கு பின், நாகை, கடலுார் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களிலும், ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளிலும், கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை மையம் எச்சரித்துள்ளது.கடலுார், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களின் சில பகுதிகள்; விழுப்புரம், அரியலுார், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களின் பெரும்பாலான இடங்கள் மற்றும் புதுச்சேரியில், மிதமான மழை பெய்யும். சில இடங்களில், மிக கன மழைக்கும் வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், நாகை, தஞ்சை, திருச்சி, கிருஷ்ணகிரி
 
மற்றும் தர்மபுரி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை மறுநாள், கன மழை கொட்டும் வாய்ப்புள்ளது. தமிழகத்தை தாக்கிய, கஜா புயல் தற்போது, அரபிக் கடலில் நிலை கொண்டிருப்பதால், அங்கும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உள்ளதால், வங்கக் கடலிலும், 22ம் தேதி வரை, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது.
 
மழை எவ்வளவு?
 
 
நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், மாநிலத்தில், அதிகபட்சமாக, பூந்தமல்லியில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது. கொளப்பாக்கம், திருத்தணி, 2; சேலம், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம் மற்றும் செங்கத்தில், தலா, 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
 
சோமாலியா நோக்கி செல்கிறது, 'கஜா'
 
 
வங்க கடலில் உருவாகி, தமிழக டெல்டா மாவட்டங்களில், கோரத்தாண்டவமாடிய, 'கஜா' புயல், தமிழகம், கேரளாவை தாண்டியும் கலங்காமல், அரபி கடலுக்குள்நுழைந்துள்ளது. தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, சோமாலியாவை நோக்கி சுழன்று
 
வருகிறது.வடகிழக்கு பருவமழை, நவ., 1ல் துவங்கியது; முதல் வாரத்தில், டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும், மழை கொட்டியது. 
 
திடீரென, தாய்லாந்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அந்தமான் அருகே நகர்ந்து வலுப்பெற்றது; நவ., 10ல் புயலாக மாறியது. இது, வங்க கடலின் மத்திய பகுதி, மத்திய வடகிழக்கு பகுதி உள்ளிட்டவற்றுக்கு சுழன்று சென்று, தமிழகத்தை நோக்கி திரும்பியது.'கஜா' என, பெயரிடப்பட்ட இப்புயல், நவம்பர், 15 நள்ளிரவுக்கு மேல், பயங்கர சூறாவளி காற்றுடன், வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. 
 
அப்போது, புதுச்சேரி, காரைக்கால், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கேரளா வழியே, அரபிக் கடலுக்குள், கஜா புயல் நுழைந்துள்ளது. தாய்லாந்து, அந்தமான், தமிழகம், கேரளா ஆகியவற்றை தாண்டியும், 'கஜா'வின் ஆக்ரோஷம் அடங்கவில்லை. 
 
ஆசியா கண்டத்தை கடந்து, இன்னும் வலு குறையாத தால், தென் ஆப்ரிக்காவின் சோமாலியாவை நோக்கி செல்கிறது.நேற்றிரவு நிலவரப்படி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சுழன்று கொண்டிருந்தது. இன்று, காற்றழுத்த தாழ்வு மண்டல மாக, வலுவிழக்கும் என, வானிலை மையம் கணித்து உள்ளது. இதனால், அரபி கடலுக்குள் மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.