img/728x90.jpg
சுனாமியை விட பெரும் அழிவு டெல்டாவில் கஜாவின் கோரத்தாண்டவம்!

சுனாமியை விட பெரும் அழிவு டெல்டாவில் கஜாவின் கோரத்தாண்டவம்!

 நேற்று ஒரு வேலைதான் எங்களால் சாப்பிட முடிந்தது சார். எந்தப் பொருளும் இதுவரை வந்து சேரல, எல்லாப் பொருளுமே தண்ணியில நனைந்து வீணாப் போய்டுச்சு..."

`சுனாமியை விட பெரும் அழிவு'...  டெல்டாவில் கஜாவின் கோரத்தாண்டவம்! #SpotReport
அடிக்கடி சொல்கிற வரிகள்தாம்.
 
``மனதையும் கண்களையும் எவ்வளவு திடமாக வைத்திருந்தாலும் எதிரில் இருப்பவர்கள் அதைத் திரவமாக்கி விடுகிறார்கள்"
 
பேரழிவின் பல இடங்களிலும் களப்பணி செய்திருக்கிறேன். 2015 சென்னை, தானே, 2018 கேரளா என வெள்ள பாதிப்புகளை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். வெள்ள பாதிப்புகளை விட அதிக பாதிப்புகளை கஜா புயல் ஏற்படுத்தியிருக்கிறது. வீடு, மரம், ஆடு, மாடு என வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்திருக்கிற மக்களைச் செய்தியாக மட்டுமே பார்க்க முடியவில்லை. 
 
 
புயல் நிவாரண முகாம்களில் இருந்த மக்களை முதலில் சந்திக்க நேர்ந்தது. திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி செயல்படும் கட்டடத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என 300 பேருக்கும் மேலாக இருந்த கட்டடம் அது. புயலின் கோரத்தாக்குதலில் அந்தக் கட்டடமும் தப்பவில்லை. அடித்த புயலில் கட்டடத்தின் கண்ணாடிகள் உடைந்து சிதறிக்கிடந்தன. அதன் அருகில் அங்கிருந்த மக்கள் உணவு தயார் செய்து கொண்டிருந்தார்கள். வெறும் காலில் நடந்தால் நிச்சயம் கண்ணாடித் துகள்கள் காலை பதம் பார்த்துவிடும். ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பத்துப் பேருக்கும் மேல் உணவு சமைத்துக் கொண்டிருந்தார்கள். ``புயல் அடித்து 2 நாள் ஆச்சு; இதுவரைக்கும் யாருமே வந்து பாக்கல, எங்கள இப்படியே விட்டு விட வேண்டாம்னு மட்டும் சொல்லுங்க சார்” என்ற குரல்தான் நான் கேட்டு உடைந்து போன முதல் குரல். 
 
 
ஒவ்வொருவரும் புயல் அன்று தாங்கள் எதிர் கொண்ட சம்பவங்களை விவரிக்கும் பொழுது உடலெல்லாம் நடுங்குகிறது. எல்லைநாகலடி என்கிற கிராமத்தில் வசிக்கிற லட்சுமி பாட்டி என்பவர் புயல் குறித்த இரவை கண்ணீரோடு சொல்ல ஆரம்பித்தார். இரவு 1:30 மணிக்குப் புயலின் வேகத்தில் வீட்டின் கூரை முதலில் பறக்க ஆரம்பித்தது. ஓடுகள் பிய்த்து வீசப்படுவதைப் பார்த்ததும் என்ன செய்வதெனத் தெரியாமல் வீட்டில் இருந்த எல்லோரும் குழம்புகிறார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெயருக்குக் கூட அங்கு வெளிச்சம் என்ற ஒன்று இல்லாமலே இருக்கிறது. அடிக்கிற காற்றில் மெழுகுவத்தியோ, விளக்கோ கூட பயன்படுத்த முடியாத நிலை. ஓடு இல்லாததால் மழை நேரடியாக வீட்டுக்குள் பெய்ய ஆரம்பிக்கிறது. அடுத்து என்ன என்று யோசிப்பதற்கு முன்பாக, புயல் இரண்டு தென்னை மரங்களை அவர்களின் வீட்டின் மீது பிடுங்கி வீசிவிடுகிறது. மழை, புயல் எனச் சுற்றிச் சுற்றி அடிக்க என்ன செய்வதென்று தெரியாத மூன்று பேரும் நான்கு ஆடுகளுடன்  உடனடியாக வீட்டின் கழிவறையில் போய்ப் பதுங்கிக் கொள்கிறார்கள். யாருக்கும் தகவல் சொல்ல முடியாத அளவுக்குப் புயல் அடித்து நொறுக்கியது. பின்னிரவு 2 மணியிலிருந்து விடியற்காலை 5:30 மணி வரை மொத்தக் குடும்பமும் கழிவறையில் இருந்திருக்கிறது. விழுந்து கிடக்கும் ஒவ்வொரு மரத்துக்குப் பின்னாலும் ஒருவருடைய வாழ்க்கை இருக்கிறது என்பது மட்டும் அப்போது புரிந்தது. 
 
திருத்துறைப்பூண்டி அருகில் இருக்கிற கிராமத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் புயல் வந்த அன்று தன்னுடைய குடும்பத்தோடு வீட்டில் இருந்திருக்கிறார். எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள். பின்னிரவு 2 மணிக்குக் காற்றின் வேகத்தில் மரம் உடைவதை உணர்ந்தவர் மழை பெய்து கொண்டிருந்ததை பற்றிக் கவலைப்படாமல் உடனடியாக வீட்டில் இருந்த எல்லோரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்திருக்கிறார். அதில் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவர். வீட்டை விட்டு வெளியே வந்த பத்து நிமிடத்தில் இரண்டு தென்னை மரங்கள் அவரது வீட்டின் மீது விழுந்து வீட்டைச் சுத்தமாக நொறுக்கிவிட்டன. ``கடவுள் புண்ணியத்தில் தப்பித்து வந்தோம் என்று சொல்லி தன்னுடைய நான்கு வயதுப் பெண்ணை கட்டிக் கொண்டு அழுகிறார்” 
 
கணவர் குவைத்தில் இருக்க தன்னுடைய குடும்பத்தைப் பராமரித்து வந்தவர் சாந்தி. இரண்டு மாதத்துக்கு முன்புதான் கடன் வாங்கி அவருடைய கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார். மூன்று மரங்கள் வீட்டில் விழுந்து வீட்டைத் தரைமட்டமாக்கிவிட்டது. மழையில் நனைந்திருந்த அரிசியை வெயிலில் காய வைத்துக்கொண்டிருந்தார். அன்றைய தினத்துக்கான உணவுக்கு அவர்களிடம் அரிசியோ இதர உணவுப் பொருள்களோ இல்லாம இருக்கிறார்கள். எப்படியும் உதவி வருமென எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டிமேடு ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் எல்லோரும் சாலையில் உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்கள். ஒட்டுமொத்த கிராமத்துக்கும் சாலையில்தான் உணவு தயாராகிறது. ``நேற்று ஒரு வேலைதான் எங்களால் சாப்பிட முடிந்தது சார், எந்தப் பொருளும் இதுவரை வந்து சேரல, எல்லாப் பொருளுமே தண்ணியில நனைந்து வீணாப் போய்டுச்சு, இருக்க காச போட்டு அரிசி வாங்கி எல்லாருக்கும் சமைச்சிட்டு இருக்கிறோம் என்கிறார்கள். எல்லா நிகழ்வுகளும் கண் முன்னே நடந்து முடிந்து விட்டன. யாரிடமும் என்ன ஆனது எனக் கேட்கவே மனம் கனக்கிறது. 
 
சென்னையிலிருந்து கொண்டு சென்ற நிவாரணப் பொருள்களை அவர்களிடம் கொடுக்கும் பொழுது, புகைப்படம் எடுத்து விடுவார்களோ என்று நினைக்கிற மக்களை, வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறவர்களை, எதிர்கொள்ளவே பயமாய் இருக்கிறது. ஊருக்கு உணவளித்த டெல்டா மக்கள் நிவாரணத்துக்கு எதிர்பார்த்து நிற்பது மனதை இன்னும் கனமாக்குகிறது. கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் சரியாகக் குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு மேல் ஆகும். மின்சாரக் கம்பங்கள் பெயருக்கு ஒன்று கூட இல்லை. எல்லாக் கம்பங்களும் உடைந்து விழுந்து கிடக்கின்றன. உடைந்த மின்கம்பங்களை விட மின் கம்பிகளை அப்புறப்படுத்தவே பல நாள்களாகும். அதன் பிறகு புதிய கம்பங்கள் நடப்பட்டு மீண்டும் மின்சாரம் வழங்கக் குறைந்தபட்சம் 1 மாதம் வரை ஆகும். டெல்டா மாவட்டங்களில் இதுவரை பாதிப்புகள் தெரிந்திருப்பது 50 சதவிகிதம்தான். மீதமுள்ள 50 சதவிகித பாதிப்புகள் கண்டறியப்படாமலே இருக்கின்றன. சாலைகளில் மரம் கிடைப்பதாலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாலும் பல தகவல்கள் இதற்கு மேலாகத்தான் தெரிய வரும். 
 
மின்சாரம், இணையம் என்று இப்போது வரை தகவல் தொடர்புகள் இல்லாமல் இருக்கிற கடைக்கோடி கிராமங்களின் நிலைமை எப்படி இருக்குமென்று நினைத்தால் பகீரென்று இருக்கிறது. கிராமங்களுக்குள் இருக்கிற எல்லாச் சாலைகளும் மற்ற சாலைகளோடு தொடர்பில்லாமல் இருக்கின்றன. எல்லாச் சாலைகளிலும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. வீடு வாசல், மரம், வாழ்வாதாரம் என்று ஒட்டு மொத்த வாழ்க்கையையும் இழந்து நிற்கிறார்கள். எங்குபார்த்தாலும் மரங்களும் மின்சாரக் கம்பிகளும் விழுந்து கிடக்கின்றன. ஆங்காங்கே ஊர் இளைஞர்கள் விழுந்த மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மரங்களை அப்புறப்படுத்தினால் மட்டுமே பல உதவிகள் அம்மக்களை சென்று சேரும். திருத்துறைப்பூண்டி மட்டுமல்ல ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களின் நிலையும் இதுதான். 
 
டெல்டா மக்களின்  பலமே அவர்களின் வீடும், அதன் அமைவிடமும்தான். எல்லா வீடுகளைச் சுற்றியும் ஒரு தென்னைமரமோ, ஒரு புளிய மரமோ கட்டாயம் இருக்கும். அப்படித்தான் அவர்கள் தங்களின் வாழ்வியலைக் கட்டமைத்திருந்தார்கள். டெல்டா மக்களின் நிலை முழுவதும் இன்னும் வெளி உலகுக்குத் தெரியவில்லை. புயல் என்று சொல்லிவிட்டு எளிதில் கடந்து போக முடியாத ஒரு சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 
 
 
 
சென்னை வெள்ளத்தின் போது ஒட்டு மொத்த தமிழகமும் கைகொடுத்துத் தூக்கிவிட்டது. அண்டை மாநிலமான கேரளா பாதிக்கப்பட்ட போதும் ஒட்டுமொத்த தமிழகமும் தோள்கொடுத்தது. கேரளாவில் வெள்ள பாதிப்பின் பொழுது நிவாரண பொருள்களை ஏற்றிச் சென்ற அநேகத் தமிழக வாகனங்களை அங்கே காண முடிந்தது. ஆனால் டெல்டா மாவட்டத்தில் அப்படி ஒரு காட்சியை நேற்றுவரை காண முடியவில்லை. நிச்சயம் டெல்டா மக்கள் மீண்டு வந்துவிடுவார்கள். அந்த மனவலிமையை அவர்களிடம் காண முடிந்தது. 
 
கை கொடுப்போம் என்பதை விட, நம் மக்களின் கண்ணீர் துடைப்போம்!