• :
  • :
களத்தில்

ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதிப்புகளைப் பார்வையிடும் முதல்வர் பழனிசாமி

ஹெலிகாப்டரில் சென்று புயல் பாதிப்புகளைப் பார்வையிடும் முதல்வர் பழனிசாமி

 கஜா புயல் பாதித்த மாவட்டங்களை நாளை ஹெலிகாப்டரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 
கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலைமை மிக மோசமானதாக இருக்கிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு நிவாரணப் பொருள்களும், உதவிகளும் அரசு மூலமாகவும், சமூக ஆர்வலர்களால் மூலமாகவும் செய்யப்பட்டு வருகிறது. இருந்தும் பல மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உதவிகள் சென்றடையவில்லை என்பதால் பல இடங்களில் மக்கள் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களைச் சந்திக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கொதிப்பில் உள்ளதாகத் தகவல் வெளியானது. நான்கு நாள்கள் ஆகியும் முதல்வர் வரவில்லை என எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வந்தன.
 
 
இந்த நிலையில், புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.1000 கோடி உடனடியாக விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள முதல்வர், நாளை பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களையும் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையில் புயல் சேதப் பகுதிகளைப் பார்வையிடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உயிரிழந்த 231 பசு, எருமை மாடுகளுக்கு தலா ரூ.30,000, 20 காளை மாடுகளுக்கு தலா ரூ.25,000, 19 கன்றுகளுக்கு தலா ரூ.15,000, உயிரிழந்த 1,181 ஆடுகளுக்கு தலா ரூ.3,000, 14,986 கோழி, பறவைகளுக்கு தலா நூறு ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டி, சேலை வழங்கப்படும். முகாம்களில் தங்கியுள்ள பெரியோர், பெண்கள், குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் வழியே பால் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
மின்துறை பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக ரூ.200 கோடி உடனடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, கஜா புயல் தொடர்பாகப் பிரதமர் மோடியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 22 -ம் தேதி சந்திக்கவுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் கஜா புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கும் எடப்பாடி பழனிசாமி, புயல் சேதம் தொடர்பான அறிக்கையைக் கொடுத்து நிவாரண நிதி கேட்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.