img/728x90.jpg
திருவாரூர் மாவட்டத்தில் சோகம் வடிகால் நீரில் சமைத்துச் சாப்பிடும் மக்கள்

திருவாரூர் மாவட்டத்தில் சோகம் வடிகால் நீரில் சமைத்துச் சாப்பிடும் மக்கள்

 கடந்த வாரம் வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை கஜா புயலாக மாறி நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரையைக் கடந்தது. இந்தப் புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. 


இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி சுற்றியுள்ள பல கிராமங்கள் தனித்தீவாக மாறி பொதுமக்கள் உடுக்க உடை, உண்ண உணவு, படுக்க இடம், சரியான மருத்துவ வசதி இன்றி தவித்துவருகின்றனர். பல இடங்களில் அரசின் நிவாரணப் பணி முழுவீச்சில் கிடைக்கவில்லை என்பதால் மக்களே தங்களுக்குத் தேவையானவற்றை ஏற்பாடு செய்துகொள்ள தொடங்கிவிட்டனர். 


துணை முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் தினம் ஒவ்வொரு பகுதியாக வருகை தந்து பார்வையிட்ட பிறகு, அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது எனக் கூறுகின்றனர். ஆனால், இன்னும் சில கிராமங்கள் தீவுகளாக மாறி அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றன.

இதற்கிடையே, திருவாரூர் அருகே கரும்பியூர், கீழ்க்கட்டளை மற்றும் திருத்துறைபூண்டி சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் தங்குவதற்கு முகாம் இல்லாததாலும், அரசின் உணவு சரிவர கிடைக்கவில்லை என்பதாலும், தானே சமைத்துச் சாப்பிடத் தொடங்கிவிட்டனர்.

இந்த உலகத்துக்கே உணவளித்த சோழமண்டலத்து விவசாயிகள் ஒருவேளை உணவைச் செய்து சாப்பிடுவதற்குக் கூட இடம் இல்லாமல் சாலையோரங்களில் சமைத்துச் சாப்பிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர்க்குக் கூட வழியின்றி மழைநீர் வடிந்து வரும் வடிகாலில் இருந்து நீரை எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு
ஆளாகியுள்ளனர். 

இந்த நிலை தொடருமா? இல்லை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? சோழநாடு சோறுடைத்து என்பார்கள். இன்று டெல்டா மக்களுக்கு ஏற்பட்ட இந்த அவல நிலை விரைவில் சீராக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.