img/728x90.jpg
img/728x90.jpg
நம்பிக்கையோடு இருப்போம் மீள்வோம்! டெல்டா விவசாயிகளே

நம்பிக்கையோடு இருப்போம் மீள்வோம்! டெல்டா விவசாயிகளே

 டெல்டா விவசாயிகளே... நம்பிக்கையோடு இருப்போம்... மீள்வோம்!

 
எட்டுவழிச் சாலை திட்டத்துக்கான தென்னைக்கு அறிவித்த நிவாரண தொகையில் பாதிகூட கஜாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காத ஆட்சியாளர்களை எதிர்நோக்கிக் காத்திருக்காதீர்கள். நிவாரணப் பொருள்களைக் கொண்டு வந்த வாகனத்துக்கு, இளநீரைக் கைமாறாகக் கொடுத்தனுப்பியவர்கள் நீங்கள். இந்தக் கருணையும் அன்பும்தானே கடவுளின் வடிவம்?
டெல்டா விவசாயிகளே... நம்பிக்கையோடு இருப்போம்... மீள்வோம்!
கஜா புயல் முடிந்த அளவு தனது முழு பலத்தையும் காட்டிச் சென்றிருக்கிறது. கடலே இல்லாத திண்டுக்கல் பகுதியில்கூட மையம் கொண்டதை வைத்தே அதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். புயல் தாக்கிய 8 மாவட்டங்களும் சேதமடைந்திருக்கின்றன. அதிலும் டெல்டா மாவட்டங்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கிறது. விவசாயிகள் கால்நடைகள், மரங்கள், விவசாயப் பயிர்கள் என அனைத்தும் இழந்து நிற்கிறார்கள் விவசாயிகள்.
 
இந்நிலையில், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு கண்டு பொறுக்காமல் தென்னை விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சோகத்தின் அடர்த்தியை இன்னும் கூட்டியிருக்கிறது இந்த செய்தி. தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்ற சம்பிரதாயமான வார்த்தைகளைத்தான் இதற்காக சொல்லத் தோன்றுகிறது. ஆனால், அதைத் தாண்டியும் நம் டெல்டா விவசாயிகளிடம் உரையாட சில விஷயங்கள் இருக்கின்றன. விவசாயத்தை முழுமையாக நம்பியிருக்கும் உங்கள் குடும்பத்துக்கு, இருக்கும் கடைசி நம்பிக்கை விவசாயிகளாகிய நீங்கள்தான். நீங்களும் இல்லாமல் போனால் உங்கள் குடும்பம் என்ன செய்யும் என்பதை ஒருமுறை யோசித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன.
 
விழுந்த தென்னைகளை வெறுமனே தூக்கி நிறுத்த முடியாது. அவற்றுக்குப் பதிலாக நான்கு ஆண்டுகளில் காய்க்கக்கூடிய தென்னை மரக்கன்றுகளை வாங்கி வைக்கலாம்" என்று வேளாண்துறை நிபுணர்கள் ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறார்கள். நான்கு ஆண்டுகள் வரை எப்படி ஒரு விவசாயி தாங்கிக்கொள்ள முடியும் என்று நினைப்பது புரிகிறது. ஆனால், யதார்த்தம் அதுதான்.
 
ஏற்கெனவே பல விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இது மேலும், தொடர்கதை ஆகிவிடக் கூடாது. இதுபோக பல அழிவுத் திட்டங்கள் டெல்டாவில் வரிசைகட்டி நிற்கின்றன; காவிரியில் போதிய நீர் வரவில்லை; மூன்று போக நிலங்கள் ஒருபோகம் ஆகிவிட்டன. கடைசியாக நம்பியிருந்த மீத விவசாயமும் கஜாவில் சீரழிந்திருக்கிறது. கஜா புயலுக்கு அரசு என்னதான் நிவாரணம் வழங்கினாலும், விவசாயிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கும். அரசை மட்டுமே முழுமுற்றாக நம்பியிருப்பது நிச்சயம் இனி பலனளிக்காது என்றே தெரிகிறது. மத்திய அரசு கடந்த வர்தா, ஒகி புயல்களுக்கு அறிவித்த நிதியையே இன்னும் பாக்கி வைத்திருக்கிறது. மாநில அரசோ ஹெலிகாப்டருக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது. இவர்கள் வரும்போது வரட்டும்; உதவிகள் தரட்டும். ஆனால், விவசாயிகளாகிய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் நம்பிக்கையை இழக்காமல் பார்த்துக்கொள்வதும், அடுத்தகட்ட பணிகளை நோக்கி நடப்பதும் மட்டுமே. 
 
நிச்சயமாக இது உங்களுக்குப் பேரிடிதான். அதை மறுப்பதற்கில்லை. மனம் தளராமல் மீண்டு எழுவதற்குரிய நம்பிக்கைதானே விவசாயிகளின் கவசம்? கிராமத்தில் இருக்கும் நீங்கள், பக்கத்தில் இருக்கும் இளைஞர்களையும் விவசாயிகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு உடனடியாகக் களத்தில் இறங்குங்கள். உங்கள் தோட்டம் அதிகமான சேதம் அடையாமல் இருந்தால், பக்கத்தில் இருக்கும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்குள் உதவி செய்யாமல் இருந்துவிடாதீர்கள், அது பெரும் பாவம். எல்லாவற்றையும் உங்களுக்குள் சரி செய்துகொண்டால் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உங்கள் இடத்தைத் தேடி வருவார்கள். அப்போது அவர்களை எதிர்கொள்ளுங்கள்.
 
 
இப்போது ஒரு விவசாயிக்கு அத்தியாவசிய தேவை, மரங்களைத் தூக்கி நிறுத்துவதுதான். (தென்னையைத் தூக்கி நிறுத்துவது அதிகமான செலவுக்கு வழி வகுக்கும் அல்லது 45 நாள்கள் கழித்து முளைக்காமலும் போகலாம்) அதற்கு பெரும் தொகை செலவாகும். உங்கள் கிராமத்தில் இருக்கும் ஜே.சி.பி இயந்திரங்களைக் குறைந்த செலவில் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ஒட்டு மொத்தமாக எல்லோருடைய தோட்டங்களிலும் மரங்களைத் தூக்கி நடும் வேலையை உடனே தொடங்குங்கள். இதுபோக சேதமடைந்த பயிர்களை எவ்வாறு பணமாக்குவது என்று யோசியுங்கள். கால்நடைகள் வைத்திருக்கும் விவசாயிகள், கால்நடைகளின் உணவுக்காகச் சேதமடைந்த பயிர்களை உரிய விலை கொடுத்து வாங்கிக்கொள்ளுங்கள். அது மற்றொரு விவசாயியைக் கஷ்டத்தில் இருந்து காப்பாற்றும். ஒரு காலத்தில் நம் சமூகமே இப்படித்தானே இயங்கியது? இப்படி உங்களுக்குள் உதவிக்கொண்டாலே போதும் உங்களின் கஷ்டங்கள் பெருமளவு குறைந்துவிடும். உங்களுக்குள் பொருள்களை பரிமாற்றம் செய்துகொள்ளுங்கள். எட்டுவழிச் சாலை திட்டத்துக்கான தென்னைக்கு அறிவித்த நிவாரண தொகையில் பாதிகூட கஜாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்காத ஆட்சியாளர்களை எதிர்நோக்கிக் காத்திருக்காதீர்கள். நிவாரணப் பொருள்களைக் கொண்டு வந்த வாகனத்துக்கு, இளநீரைக் கைமாறாகக் கொடுத்தனுப்பியவர்கள் நீங்கள். இந்தக் கருணையும் அன்பும்தானே கடவுளின் வடிவம்? அது நீங்கள்தான். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள், தன்னார்வ குழுக்கள் என இணைந்து உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். உதவிகளுக்காக அவர்களோடு கைகோத்துக் கொள்ளுங்கள்.
 
விவசாயி வாழ்ந்தால்தான் நாடு தலை நிமிர்ந்து வாழ முடியும். இந்நாட்டை எல்லையில் காக்கும் படை வீரர்கள் முக்கியமானவர்கள் என்றால், மக்களுக்கு உணவளித்து உயிர் காக்கும் நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்று யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்துக்காகவாவது சோகமுடிவுகளைக் கைவிடுங்கள். இது துயரம்தான். கடந்துவிடலாம். சோகம்தான்; நிச்சயம் மீண்டுவிடலாம்!