img/728x90.jpg
img/728x90.jpg
மண்ல கை வைக்கிற தொழில் எங்க பிள்ளைகளுக்கு வேண்டாம்  - அகல்விளக்கு தம்பதி

மண்ல கை வைக்கிற தொழில் எங்க பிள்ளைகளுக்கு வேண்டாம் - அகல்விளக்கு தம்பதி

 திருவண்ணாமலை தீபத்திருவிழா நாளை நடைபெறுகிறது. என்னதான் மெழுகுவத்தி விளக்கு, நெய் விளக்கு என ‘ரெடிமேட்’ விளக்குகள் பேக்டு ஐட்டங்களாகக் கடைகளின் உத்திரத்தில் தொங்கிக் கிடந்தாலும், கார்த்திகை என்றாலே பாரம்பர்யமான நமது மண் விளக்குகளுக்கு உள்ள சிறப்பே தனிதான்!

 
மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளின் வாசத்தை நுகர்வதே அலாதி இன்பம். சென்ற வருடம் வாங்கி ஏற்றி வைத்த அகல்விளக்குகளில் மண்வாசத்துடன், விளக்கேற்ற ஊற்றிய எண்ணெய்யின் வாசமும் அப்பிக்கிடக்கும். புதிய அகல் விளக்குகளுடன் ஒப்பிடும்போது பழைய அகல் விளக்குகளின் வாசம் மாறுபடும். அத்தனையையும் நீரில் சில மணிநேரத்துக்கு ஊறப்போட்டு எடுப்பர். இப்படிச் செய்வதால், விளக்குகள் எண்ணெய்யைக் குறைவாக உறிஞ்சும். இந்த விளக்குகளுக்குப் பொருத்தமான ஜோடி ஆமணக்கில் பெறுகின்ற விளக்கெண்ணெய்யும் பஞ்சுத் திரியும்தான்!
 
 
நாம் வாழும் வீட்டின் உள்ளும் புறமும் என விரும்பும் இடமெங்கும் அந்த விளக்குகளை வைத்து திரியேற்றி தீபம் ஒளிரச் செய்து மொத்தமாய் அவ்வொளி வெள்ளத்தைப் பார்க்கையில் திக்குத் தெரியாத அந்த இன்பம் எங்கிருந்துதான் வந்துசேருமோ? அப்பப்பா!
 
சரி, நம்முடைய மனதைக் களிப்பூட்டுகின்ற இந்த மண்விளக்குகளை உருவாக்கிக் கொடுப்பவர்களின் வாழ்நிலையையும் மனநிலையையும் தெரிந்துகொள்ளலாமே என எத்தனித்தபோது, நண்பர் ஒருவர் ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் கூட்டாக மண் விளக்குகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கூறினார்.
 
மறம் செறிந்த பாலமேட்டில், ஊரின் தெற்கே தங்களுக்குச் சொந்தமான மனையில் தங்களது மண் விளக்குத் தயாரிப்புத் தொழிலுக்குப் போக மீதமுள்ள இடத்தில் மச்சுவீடு கட்டி வாழ்கின்றனர் நாகராஜன் - சிவரஞ்சனி தம்பதி.
 
“பூர்வீகம், மதுரை ஆரப்பாளையம்தான். ஆனாலும், சொந்தக்காரங்க சுத்தியும் இருக்கிறதாலயும் பொழப்புக்காகவும்தான் இங்க வந்து, எங்க எடத்துல வீடுகட்டி வாழ்ந்திட்டிருக்கோம்” என விவரித்த நாகராஜனின் முகத்தில் சின்ன புன்னகை.
 
“கரம்பை, பருமண்ணு, மணலு மூணும்தான் விளக்கு செய்யத் தேவை. ஈரத்துல கொழச்சடிச்சு எடுத்துப் பெசஞ்சு உருட்டிச் சுத்தி விளக்கு எடுப்போம். நாங்க அகல் விளக்கு, கார்த்திகை விளக்கு ரெண்டுதான் செய்வோம். ஒரு விளக்கு எடுத்தா முப்பது பைசா வரும் எங்களுக்கு” பேசிக்கொண்டே விளக்குத் தயாரிப்பில் மும்முரமாகிறார் சிவரஞ்சனி.
 
 
விளக்கு எடுக்கும் சிவரஞ்சனியின் பணிகளுக்கு வேண்டியவற்றைச் செய்துகொடுத்துவிட்டு நம்மிடம் வருகிறார் நாகராஜன். “சிமென்ட் பொருளுங்க ஏதாச்சும் செய்வேன். பெயின்ட் வேலை, சமையல் வேலை வந்தா போவேன். மதுரை கோச்சடையில இருக்கற கோயில்ல வழிவழியா வர்ற பூசாரிக் குடும்பம் எங்களோடது. எல்லாம் இருந்தாலும், இந்த மண்ணு தொழில்லதான் எங்க மனசுக்கு நிம்மதி கிடைக்குது” என்றவர் சட்டென்று நினைவுக்கு வந்தவராக,
 
“எங்களை மாதிரி பரம்பரையா மண்தொழில் செய்யுறவங்களுக்கு எல்லா சலுகைகளையும் அரசாங்கம் தரத்தான் செய்யுது. ஆனா, இடையில இருக்கிறவுகதான் எடக்கு பண்ணிக் கெடுத்து விடுறாக. இந்தத் தொழில் பார்க்கிறதுக்கு அடையாளமா உழவர் அட்டை வாங்கியிருந்தாலும், நியாயமா எங்களுக்குக் கிடைக்க வேண்டிய கவர்மென்ட் பணம் இன்னும் கைக்கு வந்து சேரலை” என்று, அரசாங்கம் வழங்கும் சலுகைகூட தங்களுக்குக் கிடைப்பதில்லை என்று ஆதங்கத்துடன் கூறினார்.
 
எடுத்த விளக்குகளைக் காய வைக்கக் கணவரிடம் கொடுத்துக்கொண்டே, “அட, அரசாங்கம் எங்க ஆளுங்களுக்குக் கொடுக்கிற கரண்டு திருகைகூட கிடைக்கலை, தம்பி. நான் சீதனமா கொண்டு வந்த இந்தக் கிரைண்டரை மாத்தி வேல பாத்துப் பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம்” என சிவரஞ்சனி பெருமூச்சு விட, விளக்குகளைக் காயப்போட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிய நாகராஜன், உழவர் அட்டை விவரங்களைக் கொண்டு வந்து காட்டினார்.
 
``பரம்பரை பரம்பரையா செய்துக்கிட்டு வந்த இந்தத் தொழிலை விட்டுவிட்டு, பல குடும்பங்கள் வேற வேற தொழில்களுக்குப் போயிட்டாங்க. ஆனால், அவங்களுக்கெல்லாம் கவர்மென்ட் கொடுக்கற சலுகைகள் கிடைச்சிடறது. அது சட்டவிரோதம்தானே?'' என்று நொந்துகொண்டே கூறினர்.
 
இவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். அரசுப் பள்ளியில் பயில்வதால் கல்விச் செலவுக்குச் சிக்கல் இல்லை என்கிறார். மூத்த பையன் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். ஓவியம் வரைவதில் கெட்டிக்காரனாம். அடுத்ததாய், மகள். எட்டாம் வகுப்பு படிக்கிறாள். கடைக்குட்டி பையன் இரண்டாம் வகுப்பு.
 
“எதுக்கும் தெரிஞ்சி வச்சிக்கிடட்டுமேன்னு மூத்தவனுக்கு மட்டும் மண்ணு வேலைங்க எல்லாத்தையும் கத்துக்கொடுத்திருக்கேன். எனக்குத் துணையா இருந்து ஆர்வமா வேலை செய்வான். ஆனா, நாங்க படுற அவஸ்தைகள இதுங்க பட்டுற கூடாதேன்னு தெனமும் துடிச்சிட்டு இருக்கேன். மண்ல கை வைக்கிற தொழில் எங்க பிள்ளைகளுக்கு வேண்டாம்!” - பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கனவு நாகராஜனின் கண்களில் மிதக்கிறது.
 
மண்ணிலும் சரி, மனதிலும் சரி, ஈரத்தோடு கொஞ்சம் நியாயமான இறுக்கமும் கலந்திருக்கின்ற வரைக்கும் இந்தச் சமூகம் இளகி உருமாறுமே தவிர, என்றென்றைக்கும் உடையாது.