• :
  • :
களத்தில்

7 நாள்களாக மின்சாரம் இல்லை கொதித்தெழுந்த மக்கள் துணை முதல்வரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

 7 நாள்களாக மின்சாரம் இல்லை கொதித்தெழுந்த மக்கள் துணை முதல்வரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

 புதுக்கோட்டையில், மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டும் மின்சாரம் வழங்கப்படாததால், கொதித்தெழுந்த மக்கள்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 புதுக்கோட்டையில், இரண்டாவது முறையாகப்  புயல் பாதிப்புகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  கஜா புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள்குறித்த ஆலோசனைக் கூட்டம்,  ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில், கல்யாணராமபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு, இடைத்தெரு பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர்  ஒன்று திரண்டு, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று கூறி, ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் பேச்சுவார்த்தை நடத்தினார். 1மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என போலீஸார் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர். 
 
 
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறும்போது, ‘கஜா புயலால் கடந்த 7நாள்களாக மின்சாரம் இல்லை. மின் ஊழியர்கள் நகருக்குள் மின் இணைப்புகளைச் சரிசெய்து  முடித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால், இதுவரை வரவில்லை. அதேநேரத்தில், அருகில் உள்ள  கோவில்பட்டி, திருக்கோகர்ணம் ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் வந்துள்ளது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிரமுகர்கள் இருவருக்கிடையே இருக்கும் பிரச்னை காரணமாக மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின்சாரம் கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர்.