img/728x90.jpg
img/728x90.jpg
மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின் எழுச்சி நாள்.

மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின் எழுச்சி நாள்.

மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் தமிழ் தலைமுறையினரின் எழுச்சி நாள்.

- இயக்குநர் வ.கௌதமன் -

ஊடக அறிக்கை.

ஐம்பதனாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழ் பேரினத்தில் மூன்று மாமன்னர்கள் மட்டுமே எங்கள் தமிழினத்தின் இளைய தலைமுறையினரின் முன்னோடிகளாக வழிகாட்டிகளாக நாங்கள் மதித்து போற்றுகின்றோம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாய்ந்து வருகிற ஆற்றைத்தடுத்து அணையை கட்டி நாத்து நட்டு உலகத்து உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கிற விவசாயப் புரட்சியை செய்து கொடுத்த கல்லணை கட்டிய கரிகால் பெருவளத்தான். அவரிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு தெற்காசிய நாடுகள் முழுக்க கட்டி ஆண்டவர்கள் எங்களுடைய ராஜராஜசோழனும் அவரது மகன் ராஜேந்திரசோழனும். அவரிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்பு நாங்கள் வாழ்ந்த சமகாலத்தில் எங்களின் தமிழீழ மண்ணை வீரத்தோடும் நேர்மையோடும் அறத்தோடும் கட்டி ஆண்டவர் எங்களுடைய அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள்.

இம்மூவரும் ஒரு ஆயுத எழுத்தைப் போல எங்கள் மொழியை இனத்தை வளத்தை வரலாற்றை கலை கலாச்சாரம் பண்பாட்டை கட்டி காத்தவர்கள். அரசாண்டு தமிழினத்தை தலை நிமிர்த்தியவர்கள். நவம்பர் 26. இன்று என் தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள். தனது பன்னிரண்டாம் அகவையில் தனது வீட்டில் ஒரு நாள் இரவு தன்னுடைய தாய் பார்வதி அம்மாள் தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு உணவு பரிமாறும் போது தன் மகன் பிரபாகரனை நினைவுகூர்ந்து பேசுகிறார்.

அவரது தந்தை இலங்கை அரசாங்கத்தில் நில அளவையாளராக பணிபுரிந்தவர். தலைவர் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் அவர்கள் அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய மகள்களுக்கு அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். அவருடைய கவலை சிறுவன் பிரபாகரன் படித்து பெரிய ஆளாக வளர்ந்து அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் தன் மனைவிடம் துரையும் அதாவது பிரபாகரன் அவர்களும் அரசாங்க வேலைக்கு சென்று விட்டால் தான் நிம்மதி ஆகிவிடுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்க அதே வேலையில் பக்கத்து அறையில் படுத்து பகத்சிங் வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருக்கிறார் 12 வயது சிறுவனாக பிரபாகரன். கணவர் இறுதியில் கை கழுவி விட்டு துரையை சாப்பிட சொல்லு என்று கூறிவிட்டு அவர் அறைக்குள் நுழைந்து விடுகிறார். தாய் தன் மகன் அருகில் வர தன் தாயிடம் சிறுவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள்.

"அம்மா அப்பா சொன்னது எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன் அவர் சொல்வதைப் போல நான் படித்து அரசாங்க வேலைக்கு போவதில்லை என்னுடைய வேலை. நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிற எங்கள் தமிழ் மக்களுக்கு தனி ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதே என்னுடைய வேலை" என்றாராம் தீர்க்கமாக. அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் தமிழ் மண்ணை, தான் உயிராக நேசித்த மக்களை கட்டிக்காக்க அதிகாரமிக்க குரூரம் கோலோச்சிய சிங்கள அதிகாரவர்கத்தை எதிர்த்து சண்டையிட்டு தனது தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கொண்டே தங்கள் மன உறுதியை மட்டுமே மூலதனமாக கொண்டு இந்த உலகம் வியக்கும்படியான ஒரு உன்னதமான அரசாங்கத்தை கட்டி எழுப்பி முப்படைகளையும் வழி நடத்தியவர் மேதகு பிரபாகரன் அவர்கள். பிச்சைக்காரர்கள் இல்லாத ஒரு தேசமாக அது திகழ்ந்தது. காந்தியடிகள் கண்ட கனவு இந்திய ஒன்றியத்தில் கூட நடக்கவில்லை. ஒரு பெண் தனி ஒருவளாக தமிழீழம் முழுக்க இரவிலும் நடந்து தன் வீடு வந்து சேரும் நிலை உலகத்திலேயே அங்கு மட்டுமே சாத்தியமாக்கியது. தலைவர் பிரபாகரன் அவர்களின் நேர்த்தி மிக்க ஆட்சியினை கண்ட உலக நாடுகள் ஒரு சின்னஞ்சிறிய தேசம் நேர்மையோடும் அறத்தோடும் கம்பீரமாக எழுந்து நிற்பதை சகிக்கமுடியாமல் உலகத்தின் 34 நாடுகள் இணைந்து நின்று எங்கள் தமிழீழ மண்ணை எங்கள் தமிழ் மக்களை அழித்து சிதைத்தது.

அதில் பல வல்லரசுகளும் துணைநின்றன நாங்கள் வாழும் இந்திய ஒன்றியம் உட்பட. இப்படி பல நாடுகள் ஒன்றிணைந்து உலகம் தடை செய்யப்பட்ட குரூரமான ஆயுதங்களை பயன்படுத்திய நிலையிலும்கூட தலைவர் பிரபாகரன் அவர்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை. சமாதானம் அடையவில்லை. சரணடையவில்லை. காரணம் தமிழ் இனம் இந்த பூமிப்பந்தின் ஆதி இனம். நாங்கள் நிமிர்வது காலத்தின் கட்டாயம். எது நடந்தாலும் இறுதிவரை உறுதியோடு போராடுவோம் என்ற நிலையிலேயே மரபு வழி போரைத் தொடர்ந்தார. இந்த உலகம் வேடிக்கை பார்க்க பார்க்க முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்களை அடித்து உயிர் குடித்தது அதிகார வர்க்கங்கள். அதன்பிறகும் நாங்கள் இன்னும் அறவழியில் ஓடிக்கொண்டிருக்கிறோம் எங்களுக்கான தீர்வை நோக்கி உலக நாடுகள் மத்தியிலும் ஐநா சபையிலும் தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

இன்றுவரை எங்களுக்கு சிறு வெளிச்சம் கூட இல்லை. யுத்தம் நடந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் தீர்வு கிடைப்பதற்குப் பதிலாக எங்கள் தமிழர் ரத்தத்தை குடித்த ராஜபக்சேவை மீண்டும் அரியணை ஏற்றும் சூழலையே இந்த உலகம் உருவாக்கி கொடுக்கிறது. நாங்கள் இன்றும் பொறுத்திருக்கிறோம் காத்திருக்கிறோம். எங்களுக்கு ஒரு நிம்மதியான தீர்வு வரும் என்கிற நம்பிக்கை ஒருவேளை அது பொய்த்துப் போனால் தமிழர்களுக்கான தமிழீழ விடுதலை இனி சாத்தியமே இல்லை என்கிற ஒரு நிலை உருவானால் ஒருபோதும் தமிழினம் அடங்கி போகாது. மாறாக தமிழர் வாழ்வியலில் எத்தனையோ நூற்றாண்டுகளில் இந்த இனம் சிதைந்து அழிந்து மீண்டும் தன்னுடைய வரலாற்றை தங்களுடைய மொழியை தங்களுடைய இனத்தை கலை கலாச்சாரத்தை புதுப்பித்து கம்பீரமாக கட்டி எழுப்பிய வரலாறுகள் எங்கள் தமிழினத்திற்கு உறுதியாக தெரிந்திருக்கிறபடியால் நாங்கள் மீண்டு எழுவோம். எங்களுக்கான வரலாற்றை உருவாக்குவோம். தலைவர் பிரபாகரன் அவர்கள் இருக்கிறாரா இல்லையா என்கிற விமர்சனமோ விவாதமோ எங்களுக்கு அவசியமில்லை. அவர் காட்டிய பெரும் பாதை எங்கள் தமிழினத்தின் தலைமுறைக்கு வெளிச்சம் காட்டும்.

நாங்கள் மீண்டும் உலகத்தின் மத்தியில் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கின்றோம். யுத்தம் நடந்த ஆறாவது மாதத்தில் அமெரிக்கா ஒரு அறிக்கை வெளியிட்டது. யுத்தத்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் ஒரு தீர்வு கொடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் தமிழீழத்தில் புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றது. அமெரிக்கா சொன்னது உறுதியாக நடக்கும். இப்பொழுதும் யுத்தத்தை பின்தொடர்வது சரியனதில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி வழியிலேயே தீர்வு கிடைக்கும் என்று காத்திருந்தோம்.

பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் இறுதியாக நாங்கள் உலகத்தின் நீதிமான்களிடம் ஏமாறும் சூழல் ஏற்பட்டால் புறநானூறு சுமந்து வாழ்ந்த எங்கள் இனம் தன் மொழியையும் இனத்தையும் மக்களையும் மானத்தையும் காக்க காலங்காலமாக தங்கள் உயிரை கொடுத்து எப்படி காப்பாற்றியதோ அதே போன்று புறநானூறு சுமக்க தயங்காது. தலைவர் பிரபாகரன் அவர்களுடைய 64 வது அகவை நாள் எங்களுக்கான தமிழ் இனத்தின் இளைய தலைமுறைக்கான ஒரு எழுச்சியான நாள். ஒரு பெரும் வெளிச்சத்தை காட்டும் நாள். ஒருபோதும் தமிழினம் தன் கலை கலாச்சாரம் பண்பாட்டை சிதைக்கவோ அழிக்கவோ எவர் வந்தாலும் எமன் வந்தாலும் வேடிக்கை பார்க்காது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

வெல்வோம்.