img/728x90.jpg
இந்தியத்தின் இன்னொரு பெயர் இந்துத்துவா!- காங்கிரசின் மற்றொரு பெயர் பா.ச.க..!!

இந்தியத்தின் இன்னொரு பெயர் இந்துத்துவா!- காங்கிரசின் மற்றொரு பெயர் பா.ச.க..!!

இந்தியத்தின் இன்னொரு பெயர் இந்துத்துவா!- காங்கிரசின் மற்றொரு பெயர் பா.ச.க..!!

 
வரும் மக்களவைத் தேர்தலில் (2019) பா.ச.க.வை வீழ்த்த காங்கிரசு அணியில் செயல்பட வேண்டும் என்ற கருத்து தமிழ்நாட்டில் முன்வைக்கப்படுகிறது.
 
பா.ச.க.வின் ஆரியத்துவா வெறி, சமற்கிருத - இந்தித் திணிப்பு, பெருங்குழும வேட்டைக்குக் கதவு திறந்து விடல், தமிழ்நாட்டிற்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கை போன்றவற்றைத் தடுக்கக் காங்கிரசுடன் அணி சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதே “சிறந்த உத்தி” என்று பேசுகின்றனர்.
 
இதுபோன்ற மக்கள் விரோத - தமிழர் விரோத காங்கிரசின் செயல்பாடுகளுக்கு எதிராக ஏற்கெனவே பா.ச.க.வுடன் அணிசேர்ந்து, அது ஆட்சிக்கு வர முட்டுக் கொடுத்த தி.மு.க. இப்போது அதே காரணங்களை கூறி காங்கிரசுடன் கூட்டணி சேர்கிறது.
 
1967இல் காங்கிரசின் வடநாட்டு ஆதிக்கம், இந்தித் திணிப்பு, முதலாளிய ஆதரவுக் கொள்கைகள் ஆகியவற்றை எதிர்ப்பதற்காக, இராசாசியின் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி உறவு கொண்டது தி.மு.க. பிராமணிய ஆதிக்கச் சார்பாளர் - ஏகபோக முதலாளியக் கொள்கை ஆதரவாளர் - இந்தித் திணிப்பாளர் என்று இராசாசியை தி.மு.க. கண்டனம் செய்து வந்த பின்னர் - காங்கிரசு எதிர்ப்பு என்ற நிலையில், அவரைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டார் அண்ணா.
 
1971 - பொதுத் தேர்தலில் காமராசரின் சிண்டிகேட் காங்கிரசு, இராசாசியின் சுதந்திராக் கட்சி ஆகியவற்றை எதிர்க்க - இந்திரா காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தார் கருணாநிதி!
 
இவ்வாறு எல்லாப் பிற்போக்கு மற்றும் வடநாட்டு ஆதிக்கக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்த தி.மு.க., தமிழ்நாட்டிற்குப் பெற்றுத் தந்த புதிய உரிமைகள் எவை? ஏற்கெனவே இருந்த உரிமைகளையாவது காக்க முடிந்ததா? எதுவும் இல்லை என்பது தான் ஒரே விடை!
 
மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வி இந்திரா காங்கிரசு ஆட்சியில் நடுவண் அரசின் மேலாதிக்கம் உள்ள பொதுப் பட்டியலுக்கு மாற்றப் பட்டது. தி.மு.க. கூட்டணி சேர்ந்த காங்கிரசு, வி.பி. சிங், தேவகௌடா, பா.ச.க. ஆட்சிகள் கல்வியை மீண்டும் மாநிலத்திற்குக் கொண்டு வரவில்லை.
 
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் நீட் நுழைவுத் தேர்வு கொண்டு வரப்பட்டு - வெளி மாநில மாணவர்கள் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் திமுதிமுவெனச் சேர வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த நீட் நுழைவுத் தேர்வு காங்கிரசு ஆட்சியில் திட்ட மிடப்பட்டது. பா.ச.க. செயல்படுத்தியது.
 
மாநில அரசுக்கு இருந்த ஒரே வரி விதிப்பு அதிகாரம் விற்பனை வரி (வணிக வரி)! அதையும் பறித்து, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் இந்திய பா.ச.க. ஆட்சி தில்லிக்கு எடுத்துக் கொண்டது. இந்த ஜி.டிஸ்.டி. வரித் திட்டம் காங்கிரசு ஆட்சியில் முன்மொழியப் பட்டது. செயல்படுத்தியது பா.ச.க. ஆட்சி! காங்கிரசு, இப்பொழுதும் ஜி.எஸ்.டி.யில் சில திருத்தங்கள் சொல்கிறதே தவிர, அதை நீக்கி மாநில வரி உரிமை நிலைநாட்டப் படவேண்டும் என்று கூறவில்லை!
 
இந்தித் திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு, மாநில உரிமைப் பறிப்பு மற்றும் பசுவுக்கென தனிச்சட்டம், ஆகியவை காங்கிரசின் மூலக்கொள்கைகள்! அவற்றை மேலும் தீவிரப்படுத்துகிறது பா.ச.க.!
 
பன்னாட்டுப் பெருங்குழும வேட்டைக்குக் கதவு திறந்துவிட்டது 1991-இல் காங்கிரசு ஆட்சி! அதற்குத் தாராளமயம் - உலகமயம் என்று “நாகரிகப் பெயர்” சூட்டிய நயவஞ்சகம் காங்கிரசுக்குச் சொந்தம்!
 
“இந்துத்துவா” என்று பெயர் சூட்டாமல் இந்துமத ஆதிக்கக் கொள்கையைக் கடைபிடித்தது காங்கிரசு! இந்து மதம் - இந்துத்துவா என்ற பெயரில் காங்கிரசும், பா.ச.க.வும் கடைபிடிக்கும் கொள்கையின் சாரம் என்ன? ஆரிய இன ஆதிக்கம் - சமற்கிருத, இந்தி ஆதிக்கம் - ஆரியப் “பண்பாட்டு” ஆதிக்கம் ஆகியவையே!
 
1947-இல் இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரை - இந்த ஆரியத்துவா கொள்கையில் வடநாட்டுப் பொருளியல் - பண்பியல் - வேத புராண - கடவுள் கொள்கை ஆதிக்கத் திணிப்பில் தான் காங்கிரசு ஈடுபட்டது. இராமலீலா கொண்டாடுவதில் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் என்ன வேறுபாடு உள்ளது? பாபர் மசூதி பூட்டப்பட்டது காங்கிரசு ஆட்சியில் தான்!
 
பாபர் மசூதியை 1992 -இல் பா.ச.க.வினரும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களும் இடித்துத் தகர்த்தன. அப்போது ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறப்பு இராணுவப்படை வேடிக்கை மட்டுமே பார்த்தது. காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தியும், தலைமை அமைச்சர் நரசிம்மராவும் பாபர் மசூதியைப் பாதுகாக்க இராணுவத்திற்கு ஆணையிடும் முடிவை எடுக்கவில்லை!
 
இப்போது வடநாட்டு ஆரியத்துவா கோயில்களுக்குப் போய் தனது மார்புப் பூணூலை வெளிக்காட்டி - நான் ஆரிய தத்தாத்ரேயா கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லி வருவது இராகுல்காந்திதான்!
 
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை இனப்படு கொலை செய்து, விடுதலைப்புலிகளின் தலைமை முதல் போராளி வரை உள்ள வீரர்களைக் குருதி வெள்ளத்தில் மூழ்கடித்துக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதப் போரை இயக்கியது இந்தியாவின் காங்கிரசு ஆட்சிதான்! அப்போதும் காங்கிரசுடன் கூட்டணி அரசில் பதவி பெற்று - தன்னலப் பலன்கள் அனுபவித்தது தி.மு.க. தான்!
 
காவிரித் தீர்ப்பாயம் 1991 சூன் 25 அன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்த வேண்டும் என்று நரசிம்மராவ் - சோனியா ஆட்சிக்கு உச்ச நீதிமன்றம் 1991 நவம்பரில் ஆணையிட்டது. நரசிம்மராவ் - சோனியா ஆட்சி வெறுமனே அரசிதழில் வெளியிட்டுவிட்டு செயல்படுத்தாமல் ஒதுங்கிக் கொண்டது. அதைக்கூட தாங்கிக் கொள்ளாத கர்நாடகக் காங்கிரசு ஆட்சி - பங்காரப்பா ஆட்சி கண்டன முழு அடைப்பு நடத்தி, கர்நாடகத் தமிழர்கள் ஏராளமானோரை இனப்படுகொலை செய்தது. இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள், தமிழ்நாட்டிற்கு ஏதிலிகளாக ஓடி வந்தார்கள். அன்றைய செயலலிதா ஆட்சி இரண்டு இடங்களில் அகதி முகாம்கள் திறந்தது.
 
கன்னடர்கள் கர்நாடகத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததைக் கண்டித்து நரசிம்மராவ் - சோனியா காந்தி தலைமை கர்நாடகக் காங்கிரசு ஆட்சி மீது நடவடிக்கை எடுத்ததா? இல்லை! கர்நாடகத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கியதா? இல்லை! அப்போது, காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. அ.தி.மு.க. அன்றைக்குத் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி!
 
காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5 -இல் இறுதித் தீர்ப்பளித்தது. அப்போது காங்கிரசு ஆட்சி! அதை அரசிதழில் வெளியிட்டு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2013 பிப்ரவரி 19இல் ஆணையிட்டது. அப்போதும் மன்மோகன் சிங் - சோனியா ஆட்சி தந்திரமாக இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டுவிட்டு, செயல்படுத்தாமல் ஒதுங்கிக் கொண்டது. 2004இல் இருந்து 2013 வரை காங்கிரசுக் கூட்டணி அரசில் தி.மு.க. பதவி வகித்தது.
 
கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சியாக இருந்தாலும், பா.ச.க. ஆட்சியாக இருந்தாலும் காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளையும் செயல்படுத்தியதே இல்லை.
 
கடந்த 2016-இல் உச்ச நீதிமன்றம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்குக் கட்டளையிட்டது. ஆனால் காங்கிரசின் கர்நாடக ஆட்சி, அதன் முதல்வர் சித்தராமையா ஆட்சி, தண்ணீர் திறந்துவிட மறுத்து விட்டது. அத்துடன் கர்நாடகத்தில் தமிழர்களைத் தாக்கிய கன்னட வெறியர்களைத் தடுக்கவோ - அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ கர்நாடகக் காங்கிரசு ஆட்சி முன் வரவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். நிறுவன சொகுசுப் பேருந்துகள் நூற்றுக்கணக்கில் பெங்களூரில் எரிக்கப்பட்டன. தடுப்பதற்குத் தீயணைப்புத் துறை முன் வரவில்லை. அவை எரிந்து சாம்பலான பின் தீயணைப்பு வண்டிகள் ஒப்புக்கு வந்தன!
 
தமிழர்களுக்கெதிரான இந்த வன்முறையை - சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் கண்டிக்கவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துங்கள் என்று தங்களது மாநில ஆட்சிக்கு சோனியாவும் இராகுலும் கட்டளை இடவில்லை. வேண்டுகோள் கூட விடவில்லை.
 
காவிரி டெல்டாவில் வேளாண் விளைநிலங்களையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கும் வகையில் ஓ.என்.ஜி.சி. ஓநாய்களை ஏவிவிட்டது காங்கிரசு ஆட்சி. அதைத் தொடர்கிறது பா.ச.க. ஆட்சி! தி.மு.க. - அ.தி.மு.க. திராவிட ஆட்சிகள் - காவிரி டெல்டாவை தில்லிக்குக் காவு கொடுக்கத் துணைபோயின. வாழ்வுரிமை இழந்த மக்கள் போராடுகிறார்கள்.
 
இப்போது மரக்காணத்திலிருந்து இராமநாதபுரம் வரை பெட்ரோலியம், மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட ஐட்ரோ கார்பன் எடுக்கப் பன்னாட்டு ஏலம் கோருகிறது பா.ச.க. ஆட்சி. முதல் கட்டமாக, கடலூர் மாவட்டம் - பரங்கிப்பேட்டையிலிருந்து நாகை மாவட்டம் - தரங்கம்பாடி வரை மூன்று வட்டங்களை ஏலம் விட்டுள்ளது. உயிர்க் கொல்லி ஸ்டெர்லைட் முதலாளி வேதாந்தாவுக்கு இரண்டு வட்டங்களும், ஓ.என்.ஜி.சி.க்கு ஒரு வட்டமும் ஏலம் விடப்பட்டுள்ளன. பா.ச.க. ஆட்சி! இதில் மாற்றுக் கருத்து காங்கிரசுக்கு உண்டா? கொடுத்த ஏலத்தைத் திரும்பப் பெற தி.மு.க. கோருகிறதா? அ.தி.மு.க. வகையறா அவ்வாறு கோருகின்றனவா? இல்லை!
 
இந்தக் கட்சிகளில் எந்தக் கட்சி - எந்தக் கட்சிக்கு மாற்று? தமிழ்நாட்டைப் பலி கொடுப்பதில் இணைந்து பதவிப் போட்டியில் பிரிந்து நிற்கின்றன.
 
இந்தியத் தேசியத்தின் இன்னொரு பெயர் இந்துத்துவா! காங்கிரசின் மற்றொரு பெயர் பா.ச.க.! தில்லியின் கங்காணி பெயர் திராவிடம்!
 
ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களின் உடல் நலத்தைக் கெடுத்து அன்றாடம் உயிர் அச்சம் ஏற்படுத்தி வருகிறது. அதை மூட வேண்டும் என்ற மக்கள் திரள் அறப்போராட்டத்தைக் காவல்துறை கொண்டு தாக்கி, 15 உயிர்களைக் காவு கொண்டது அ.தி.மு.க. ஆட்சி! பா.ச.க. ஆட்சி ஏவிவிட்டது. காங்கிரசுக் கட்சித் தலைமை ஸ்டெர்லைட்டை மூடச் சொல்கிறதா? இல்லை! மக்கள் எதிர்ப்பைத் துச்சமாகத் தூக்கி எறிந்து ஸ்டெர்லைட் ஆலையை நிறுவ அனுமதித்ததும் அதன் விரிவாக்கத்தை அனுமதித்ததும் அ.தி.மு.க. - தி.மு.க. ஆட்சிகள்!
 
தி.மு.க. காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தும் அ.தி.மு.க. - பா.ச.க.வை அனுசரித்தும் - தூத்துக்குடி மக்களுக்கு என்ன உறுதி தரப்போகின்றன? உயிர்க் கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை இக்கழகங்களால் நிரந்தரமாக மூட முடியுமா? மக்கள் தன்னெழுச்சியாகப் போராடித்தான் மூட வேண்டும் என்றால், இந்தக் கழகங்களை அவர்கள் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?
 
பன்னாட்டு சரக்குக் கப்பல்களுக்காக - கன்னியா குமரிக் கடலில், மிகப்பெரிய துறைமுகம் கட்டத் திட்டம் தீட்டிச் செயல்படுகிறது பா.ச.க. அரசு. மீனவர்களின் மீன்பிடி உரிமை பறிக்கப்படுகிறது. அவர்கள் புதிய துறைமுகம் வேண்டாம் என்று போராடுகிறார்கள். பா.ச.க.வின் துறைமுகத் திட்டத்தை இராகுல் காந்தி எதிர்க்கிறாரா? இல்லை!
 
தமிழ்நாட்டுக் கடல் பகுதியை ஆக்கிரமித்து தமிழ் நாட்டு மீனவர்களை அன்றாடம் தாக்கி, படகுகளைக் கடத்தி, மீனவர்களை இலங்கைச் சிறையிலடைக்கும் சிங்களர் அட்டூழியங்களுக்கு ஏற்கெனவே காங்கிரசு ஆட்சி பாதுகாப்பு வழங்கியது. இப்போது பா.ச.க. ஆட்சி பாதுகாப்பு வழங்குகிறது!
 
சென்னை - சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை இராகுல் காந்தி எதிர்க்கிறாரா? இல்லை!
 
கோவை - தருமபுரி மண்டலத்தில் வேளாண் விளை நிலங்களில் கெய்ல் குழாய்ப் புதைப்பதை இராகுல் காந்தி தடுக்கப் போகிறாரா? காங்கிரசு ஆட்சியில் செயல் படுத்திய சீரழிவுதானே அது!
 
கேரளத்தின் கொச்சி துறைமுகத்திலிருந்து கர்நாடகத்தின் பெங்களூர் வரை செல்லும் இந்தக் கெய்ல் குழாய் - கேரளத்தில் தண்டவாளங்கள் ஓரமாகவும், சாலைகளின் ஓரமாகவும் புதைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் விளைநிலங்களின் குறுக்கே புதைக்கப் பட்டுள்ளது.
 
இச்செயல் - இந்திய அரசு தமிழர்களுக்கு எதிராகக் காட்டும் இனப்பாகுபாடு இல்லையா? தி.மு.க. - அ.தி.மு.க. திராவிட ஆட்சிகள் தமிழர்களுக்கு இன இரண்டகம் செய்து, தில்லிக்குக் கங்காணி வேலை பார்ப்பதைக் காட்டவில்லையா?
 
இப்போது அதே கொங்கு மண்டலத்தில் - விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்து, வேளாண்மையை நாசப்படுத்துகிறார்கள். மக்கள் அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். அந்த மின் கம்பிகளை நிலத்திற்கு அடியில் புதைக்கக் கூடாதா? புதைக்கலாம்; ஆனால், அரசியல் அனாதைகளாக உள்ள தமிழர் நிலங்களில் மின் கோபுரம் கட்டினால் யார் என்ன செய்ய முடியும் என்ற ஆணவம் ஆட்சியாளர்களுக்கு!
 
கடல் மாலை (சாகர் மாலா), இந்திய மாலை (பாரத் மாலா) என்ற பெயர்களில் தமிழ்நாட்டின் கடல் வழி - தரை வழி இரண்டையும் தில்லி ஆதிக்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. இதற்காக புதிய புதிய துறைமுகங்களையும் சாலைகளையும் விமானப் படைத் தளங்களையும் உருவாக்கி வருகிறது. எட்டு கோடித் தமிழர்களையும் இடையறாத கண்காணிப்பில் வைத்துக் கொள்ளும் ஏற்பாடுகள் இவை!
 
ஏறுதழுவல் உரிமைப் போராட்டம் போல், தமிழ்நாட்டில் மீண்டும் எழுச்சி வந்தால், மிக வேகமாக தமிழ்நாட்டிற்குள் இந்திய இராணுவம் இறங்குவதற்கான ஏற்பாடுகள் இவை! தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைகளில் இராணுவ விமானங்கள் தரையிறங்கிக் கொள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டுவிட்டது!
 
இத்திட்டங்களில் பா.ச.க.வும், காங்கிரசும் இணைந்தே செயல்படுகின்றன. இவற்றை எதிர்க்கக்கூடிய எண்ணமோ ஆற்றலோ இருவகைத் திராவிடக் கட்சிகளுக்கும் இல்லவே இல்லை!
 
* பதவி - பணம் - விளம்பரம்!
 
“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்று அண்ணா சொன்னார். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பதவி - பணம் - விளம்பரம் என்று அதை மாற்றிக் கொண்டன. அதனால் இந்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களின் குற்ற நடவடிக்கைகளில் நிரந்தரமாக சிக்கிக் கொண்டுவிட்டன. இரு கழகங்களின் முன்னணித் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்கள் அவ்வப்போது திடீர்ச் சோதனைகளுக்கு உள்ளாகின்றன. அவர்கள் மீது ஊழல் வழக்குகள் பாய்கின்றன. அவர்கள் சிறைகளில் அடைக்கப்படு கிறார்கள்.
 
தி.மு.க. - அ.தி.மு.க. தலைவர்கள் எப்போதும் இந்திய அரசு தங்கள் மீது எடுக்கக்கூடிய குற்ற நடவடிக்கைகள் குறித்,து அஞ்சிக்கிடக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திட, மீட்டிட, தில்லி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இவர்களால் போராட முடியாது. மக்களிடம், அடையாளப் போராட்டம் நடத்தி நாடக மாடுவார்கள்; அவ்வளவே!
 
அ.தி.மு.க. ஆட்சியின் சீர்கேடுகளை எதிர்க்க தி.மு.க.வை ஆதரிப்பதும், பா.ச.க. பாசிசத்தை வீழ்த்த காங்கிரசை ஆதரிப்பதும் நெருப்பை நெருப்பால் அணைக்க முயல்வது போல்தான்!
 
* வெளியார் ஆக்கிரமிப்பு
 
நம்முடைய எல்லா உரிமைகளையும் விழுங்கிவிடக் கூடிய பேரபாயமாக தமிழ்நாட்டில் வெளியார் ஆக்கிரமிப்பு பெருகி வருகிறது. அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து குவிகிறார்கள். இவர்கள் அனைவரும் வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை பெறுகிறார்கள்.
 
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் திட்டமிட்டு வடநாட்டவர்களையும், மற்ற வெளி மாநிலத்தவர்களையும் 100க்கு 90 விழுக்காட்டு அளவுக்கு வேலைக்குச் சேர்க்கிறார்கள்.
 
இந்த நிலை தொடர்ந்தால், விரைவான எதிர்காலத்தில் தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக இருக்காது. கலப்பின மாநிலமாக மாறிவிடும்!
 
இந்த ஆபத்தைத் தடுக்க, எந்தக் கட்சி பேசுகிறது? என்ன வேலைத்திட்டம் வைத்திருக்கிறது? ஒன்று மில்லை!
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்தான், வெளியார் வெள்ளத்தைத் தடுக்கவும் நடுவண் அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கு 90 விழுக்காடு வேலை பெறவும், மிகையாகத் திணித்த வெளியாரை வெளியேற்றவும் சட்ட ஏற்பாடுகளைக் கூறி வருகிறது. இதற்காகப் பல போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
 
* பா.ச.க. மட்டும்தான் பாசிசமா?
 
பா.ச.க. பாசிச போக்கில் போவது உண்மைதான்; காங்கிரசு பாசிச வழியில் செல்லாதா? இராகுல் காந்தியின் பாட்டி இந்திராகாந்தி நெருக்கடி நிலை அறிவித்து பாசிச ஆட்சி நடத்தவில்லையா? இராகுல் காந்தியின் சித்தப்பா சஞ்சய் காந்தி அந்த நெருக்கடி நிலை காலத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு வெளியே ஓர் அதிகார மையமாக ஆடிய ஆட்டம், தில்லி துருக்மான் கேட் பகுதியில் ஏழை எளிய முசுலிம்கள் வீடுகளை இடித்துத் தகர்த்து பலரைப் படுகொலை செய்த கொடுமைகள் அனைத்தும் வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன.
 
இப்பொழுது மக்களவையில் பா.ச.க.வுக்கு தனிப் பெரும்பான்மை இருப்பதுபோல் இராகுல் காந்திக்கும் தனிப்பெரும்பான்மை கிடைத்தால் தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து - இந்தியத்தேசிய வெறியாட்டம் போடுவதில் தீவிரம் காட்டுவார்.
 
குசராத்தில் 2002இல் பல்லாயிரக்கணக்கான முசுலிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது மோடி ஆட்சியில்! இராசீவ் காந்தி ஆட்சியில் தில்லியில் 1984 இல் பல்லாயிரக்கணக்கில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். காங்கிரசுத் தலைவர்கள் முன்னின்று அந்த இனப்படுகொலையை அரங்கேற்றினார்கள். அவர்களில் பலர் - எந்த நடவடிக்கையுமின்றி தப்பித்து அமைச்சர் உள்ளிட்ட பதவிகளைப் பெற் றார்கள். சிலர் மாட்டிக்கொண்டு சிறைக்குப் போனார்கள்!
 
* பாசிச உள்ளடக்கம் ஒன்றே! 
 
காங்கிரசு - பா.ச.க. இரண்டிற்கும் பொதுவான பாசிச உள்ளடக்கம் இயற்கையாக இருக்கிறது. ஏன்? இரண்டும் ஆரியப் பண்பாட்டு அடித்தளத்தில் இயங்குகின்றன. ஆரியம், பாசிசத்தின் வேர்களைக் கொண்டது. இட்லர் கூட தன்னை ஆரியன் என்று கூறிக் கொண்டார். செர் மானியக் குருதி ஆரியக் குருதி என்றும் அது தூய்மையானது என்றும் ஆரிய இனம் உலகத்தை ஆளப்பிறந்தது என்றும் கூறினார்.
 
பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களால் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் பல்வேறு வளர்ச்சி யடைந்த மொழிகளும் - அவற்றின் வழியிலமைந்த வளர்ச்சி அடைந்த தேசிய இனங்களும் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றில் தனித்தனி தாயகமும் அரசும் கொண்டிருந்தவவை! அந்த இனங்களில் மிகவும் பழமையானது தமிழ் இனம்! உலகின் மூத்த செம்மொழி தமிழ்!
 
பழமைமிக்க இந்த இனங்களை மறைத்து “இந்தியன்” - “பாரதீயன்” என்ற பெயரில் ஆரியச் சார்பான செயற்கைத் தேசிய இனத்தைத் திணிப்பதில் காங்கி ரசுக்கும் பா.ச.க.வுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை! தேசிய இனத்தாயகமாக விளங்கும் “மாநிலத்தின்” உரிமைகளைப் பறித்து - அவற்றைத் தில்லியில் குவித்துக் கொள்வதில் - காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.
 
* உடனடி அபாயமா? நிரந்தர அபாயமா?
 
உடனடி அபாயம் பா.ச.க. பாசிசம்; அதனை ஆட்சியிலிருந்து நீக்க வேண்டும்; அதற்குக் காங்கிரசு பயன்படும். அது போதும்; மற்றவற்றைப் பிறகு பார்க்கலாம் என்று ஓரு கருத்து முன் வைக்கப்படுகிறது.
 
‘உடனடி அபாயம் காங்கிரசு எதேச்சதிகாரம் - காங்கிரசின் ஊழல்’ என்று ஏற்கெனவே முழக்கம் முன்வைக்கப்பட்டு, வெவ்வேறு கூட்டணிகள் அமைக்கப்பட்டன. இந்திய ஆட்சியையும் அவை பிடித்தன. தமிழ்நாடு எந்த உரிமையை மீட்டது? ஒன்றுமில்லை!
 
மண்டல் குழு பரிந்திரை ஏற்கப்பட்டதை சொல்கிறார்கள். பல போராட்டங்களுக்குப் பின் மண்டல் குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டது. அது தமிழ்நாட்டிற்கு மட்டும் உள்ள உரிமை இல்லையே!
 
வடநாட்டினர்க்கும் சேர்த்து பிற்படுத்தப்பட் டோர்க்கான இடஒதுக்கீடு! அது ஓர் உரிமைதான்! அதே வேளை இன, மொழி, தாயக உரிமைகள் அனைத்தும் தமிழர்களுக்கு அடிப்படையானவை. எக்காரணம் கொண்டும் அவற்றை இழக்கக் கூடாது!
 
மயிலைப் பிடித்து வருகிறேன் என்று காட்டுக்குப் போனவர், மயிலைப் பிடிக்க முடியாமல் மயிலிறகு பொறுக்கி வந்து, அதன் இறகையாவது மீட்டு வந்தேன் அல்லவா என்று மார்தட்டினால் எப்படி இருக்கும்? ஆட்சியாளர்கள் அளிக்கும் சில சின்னஞ்சிறு பலன்களை முதன்மைப்படுத்தி அதற்காகப் பகை அரசுகளைப் பாராட்டுவதும் தமிழகக் கங்காணிகளைப் புகழ்வதும் மயிலிறகு மீட்ட மாவீரைப் பாராட்டுவது போல் தான் இருக்கும்!
 
ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சி இந்திய மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவே இல்லையா? செய்தது. பின் ஏன் வெளியேற்றினோம்? ஒட்டுமொத்த உரிமைகள் பற்றி சிந்தித்தோம்! அயலார் ஆட்சி கூடாது என்ற தன்மான உணர்ச்சி ஏற்பட்டது. விடுதலை பெற்று கூடுதலான வாழ்வுரிமைகளை உருவாக்கிக் கொள்வோம் என்று எண்ணினோம். அதனால் வெள்ளையராட்சியை வெளியேற்றினோம்.
 
எனவே, ஆதிக்க ஆட்சியாளர்களுக்கு எதிரான - உரிமைப் பறிப்பாளர்களுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில், எதிரி செய்த சின்னஞ்சிறிய பலன்களை முதன்மைப்படுத்தி, எதிரியோடு இணக்கம் காணக் கூடாது!
 
அரசியல் போர் உத்தி பற்றி பேசிய நம் பேராசான் திருவள்ளுவர் “கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என்றார். ஒரே வீச்சில் முயலைக் குத்தி வீழ்த்திய வேலைவிட, யானை மீது வீசி குறி தவறிப்போன வேலே உயர்வானது என்றார்.
 
தற்காலிக நிவாரணம் - உடனடி நிவாரணம் என்று செயல்பட்டு தலைமுறைகள் பலவற்றை வீணடித்து விட்டோம் தமிழர்களே! நிரந்தரப் பேரிழப்புகளுக்கு ஆளாகிவிட்டோம் தமிழர்களே! கொஞ்ச நஞ்சம் இருந்த உரிமைகளையும் கொள்ளை கொடுத்துவிட்டோம் தமிழர்களே!
 
* வெள்ளையர் ஆட்சிக்குபின் இழந்தவை..
 
“விடுதலை” பெற்ற இந்தியாவில், 1952 பொதுத் தேர்தலில் இருந்து தமிழர்கள் இழந்ததுதான் ஏராளம்!
 
வெள்ளையராட்சியில் இருந்த ஆற்றுரிமை, கடல் உரிமை, நில உரிமை, தாய் மொழி உரிமை, மதச்சார் பின்மை, உணவு உரிமை அனைத்தையும் இழந்து விட்டோம்!
 
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழர்களின் இன உரிமைகளை - வாழ்வுரிமைகளை - தாயக மண்ணுரிமைகளைக் காப் பாற்றும் நிலை இந்தியாவில் இல்லை. இதனால் தேர்தல் வேண்டாம் என்று கூறவில்லை. தேர்தல் களத்தில் ஒப்பீட்டளவில் சரியான - தகுதியான இன உரிமை இயக்கத்தினரைத் தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டும் போதாது! அதுவே நமது கடமையின் எல்லை இல்லை!
 
தேர்தலில் போட்டியிடுபவர்கள் - இந்தத் தேர்தல் உங்கள் தலைவிதியை மாற்றிவிடும்; தலைகீழ் புரட்சி கொண்டு வருவோம் என்று பேசுவது வழக்கம்தான்! ஆனால், தேர்தல் முடிவுகளால் அப்படிப்பட்ட அடிப்படை மாற்றங்கள் நிகழ்வதில்லை. விழிப்புணர்ச்சி யடைந்த தமிழர்கள் கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் பெற வேண்டும்.
 
பதவி - பணம் - விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப் படாத தமிழ்த்தேசிய இலட்சியவாதியாக ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் உருவெடுக்க வேண்டும்! மாபெரும் மக்கள் எழுச்சி அறப்போர்க்கு அணி சேர வேண்டும்! இந்திய ஏகாதிபத்திய ஆட்சியில், தமிழ்நாட்டுக் கங்காணி அதிகாரத்தையும் எதிர் கொள்ளும் ஆற்றல் உள்ள மக்கள் எழுச்சி தேவை! அப்போதுதான் தமிழின உரிமைகளை மீட்க முடியும்!" 
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ.மணியரசன்