img/728x90.jpg
img/728x90.jpg
இதுவா சனநாயகம்?

இதுவா சனநாயகம்?

இதுவா சனநாயகம்?

சனநாயகம் என்பதைத் தேர்தலில் வாக்களிப்பது என்று சுருக்கிவிடக் கூடாது. அதே போல் சனநாயகம் என்பது பெரும்பான்மையின் விருப்பத்தைச் செயல்படுத்துவது என்றும் குறுக்கிவிடக் கூடாது.

வெள்ளையர் ஆட்சியும் இந்தியாவில் 1920 தொடங்கிப் பொதுத் தேர்தல்கள் நடத்தியது. அத்தேர்தல்களை 1937 வரை புறக்கணித்தது காங்கிரசுக் கட்சி. காங்கிரசுக்குத் தலைமை தாங்கிய காந்தியும் நேருவும் ஆயுதப் போராளிகளா? இல்லை! பின்னர் ஏன் அத்தேர்தல்களைப் புறக்கணித்தார்கள்? ‘எங்கள் மண்ணை ஆண்டு கொண்டு இங்கே தேர்தல் நடத்த வெள்ளையன் யார்? அவனுக்குக் கங்காணி வேலை செய்யும் ஆட்களைத் தேர்வு செய்ய சனநாயகத்தைத் தந்திரமாகப் பயன்படுத்துகிறான்’ என்று கூறி எதிர்த்தார்கள்; அதில் போட்டியிட மறுத்தார்கள்.
 
வெள்ளையன் ஆட்சியில் இருந்ததைவிடக் கூடுதலாக அதிகாரங்களைக் குவித்து வைத்துக் கொண்டுள்ளது புதுதில்லி! இந்திய மக்களவையில் 543 உறுப்பினர்கள். தமிழ்நாடும், புதுவையும் சேர்ந்து 40 உறுப்பினர்கள் நமக்கு!
 
இந்திய அரசில் தமிழ்நாடு புறக்கணிக்கத்தக்க சிறுபான்மை! தமிழ்நாட்டின் மக்கள் தொகை 8 கோடி! ஏன் இந்த அவலம்? நம்மோடு தொடர்பில்லாத வடவர் உள்ளிட்ட பல இனங்களுடன் நம்மைச் சேர்த்ததால் நாம் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டோம்.
 
தமிழ்நாட்டிலே விளையும் நெல்லுக்கு, கரும்புக்கு, பருத்திக்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் புதுதில்லிக்கு! தமிழ்நாட்டில் கல்வி, மருத்துவம், வேளாண்மை, கனிமங்கள், தொழிற்சாலைகள், தொடர்வண்டி, நெடுஞ்சாலை உள்ளிட்ட எல்லாம் தில்லியின் அன்றாட அதிகாரத்தின் கீழ் அல்லது இறுதி அதிகாரத்தின் கீழ்!
 
இந்த ஏகாதிபத்தியக் காலனிய அதிகாரம் அனைத்தையும் சனநாயகப்படி பெற்றுள்ளதாக இந்திய அரசு சொல்கிறது! தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தேர்ந்தெடுக்கும் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்டே இந்த அதிகாரத்தைப் பெற்றதாகச் சொல்கிறது.
 
வெள்ளையன் பீரங்கியை வெடித்து உருவாக்கிய இந்தியாவை - இன்றைய வடநாட்டு ஆதிக்கவாதிகள் வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி அனுபவித்து வருகிறார்கள். கேட்டால் சனநாயகம்! தூ.. இதுவா சனநாயகம்? சனநாயகத்தின் பெயரால் மோசடி இல்லையா?
 
ஏ தமிழனே.. தமிழச்சியே எண்ணிப்பார்! உன் குடும்பத்துடன் உனக்கு உறவில்லாத ஏழு இந்திக் குடும்பங்களையும் இரண்டு பிறமொழிக் குடும்பங்களையும் இணைத்துக் கூட்டுக் குடும்பமாக வாழுங்கள்; அதில் பெரும்பான்மையோர் முடிவுப்படி குடும்ப நிர்வாக முடிவுகளை எடுங்கள் என்று சட்டம் போட்டால் ஏற்றுக் கொள்வாயா? மாட்டாய்!
 
ஆனால், உன் இனத்தை அப்படி வடநாட்டோடும் பிற இனத்தாரோடும் ஆதிக்க வேட்டையாடிகள் இணைத்து வைத்து, அதில் பெரும்பான்மை முடிவுப்படி வாழ்ந்து கொள் என்கிறார்களே அதை எப்படி ஏற்கிறாய்!
 
1947 ஆகத்து 15-இல் வெள்ளையன் வெளியேறிய பின் - நம்மை நாமே ஆண்டு கொள்வதாகப் பம்மாத்துப் பேசினார்களே வடநாட்டு ஆதிக்கவாதிகள் - அவர்கள் ஆட்சியில் நாம் பெற்ற புதிய உரிமைகள் என்ன?
 
வெள்ளைக்காரன் ஆட்சியில் பாதுகாப்பாக இருந்த நமது காவிரி உரிமை, கடல் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு, பாலாறு, தென்பெண்ணை, பவானி உரிமை. தில்லிக்காரன் ஆட்சியில் பறிபோய்விட்டன. வெள்ளைக்காரன் ஆட்சியில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த விற்பனை வரி உரிமையைத் தில்லிக்காரன் ஆட்சி பிடுங்கிக் கொண்டது. அவனது ஜி.எஸ்.டி.யைத் திணித்து விட்டது.
 
அணு ஆலைகள், ஐட்ரோகார்பன் நாச வேலைகள், உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட், நியூட்ரினோ, எட்டுவழி - பத்துவழி பாரத் மாலா சாலைகள், சாகர் மாலா துறைமுகங்கள்.. இவை தானே 1947க்குப் பின் வடநாட்டு ஆதிக்கம் தமிழ்நாட்டிற்கு வழங்கிய “வளர்ச்சித் திட்டங்கள்”!
 
பலவகைக் கல்வி கற்றுப் பட்டங்கள் பெற்று வேலையில்லாமல் வீதிகளில் அலையும் தமிழ்ப் பிள்ளைகள் ஒரு கோடிப் பேர். ஆனால், இந்திய அரசு தமிழ்நாட்டில் நடத்தும் தொடர்வண்டித் துறை, அஞ்சல் துறை, வங்கிகள், வருமானவரித் துறை, உற்பத்தி வரித்துறை, சுங்க வரித்துறை, பி.எச்.இ.எல். தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கம், அனல் மின் நிலையம், பெட்ரோலிய ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள் அனைத்திலும் இந்திக்காரர்களும் மற்ற மாநிலத்தவரும்தானே வேலையில் சேர்க்கப்படுகிறார்கள்! இது மட்டுமல்ல, அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வெளி மாநிலத்தவர் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள்.
 
இது சனநாயகமா? ஆம் வடநாட்டுப் பெரும்பான்மை சனநாயகம் இது! தமிழர்களோ அவர்களுக்கு நிரந்தரச் சிறுபான்மை; நிரந்தர அடிமைகள்! ஏ தமிழனே, ஏ தமிழச்சியே சனநாயகம் என்ற பெயரால் நடைபெறும் இந்த பேராதிக்கத்திற்கு நீயும் ஒப்புதல் தர வேண்டுமா? அதற்காக ஓட்டுப் போட வேண்டுமா?
 
இப்படியே வாக்களித்து இந்திய ஏகாதிபத்தியத்திற்கு பட்டுக் கம்பளம் விரித்துக் கொண்டிருந்தால், அடுத்த சில ஆண்டுகளில் தமிழினம் தமிழ்நாட்டில் சிறுபான்மை இனம் ஆகிவிடும். வடவர்களும் மற்றவர்களும், தமிழர்களை விடப் பெரும்பான்மை ஆகி விடுவார்கள். தமிழர்களுக்கு ஒரு தாயகம் இந்தியாவில் இருக்காது.
 
அதன் பிறகு, இந்தியாவின் இத்தனை உரிமைப் பறிப்புகளுக்கும் உடந்தையாய் இருந்து, கூட்டணி சேர்ந்து, கங்காணி வேலை பார்த்து பதவியும் பணமும் அடைந்து வரும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., போன்ற கட்சிகளும் சிறுத்துப்போய் விடும்; வடநாட்டுக் கட்சிகளிடம் கையேந்தி ஒன்றிரண்டு தொகுதிகள் பெறும் நிலைக்கு வந்துவிடும்.
 
தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் இந்த 17ஆவது மக்களவைத் தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள வாக்குறுதிகளைப் படித்தால், இவ்விருகழகங்களும் தமிழர்களை எவ்வளவுத் தரக்குறைவாக மதிப்பிட்டுள்ளார்கள் என்பது தெரியவரும்!
 
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவார்களாம். காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பார்களாம். மாநில அரசுகளைக் கலைக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 356-ஐ நீக்கி விடுவார்களாம். அடேயப்பா! “அஞ்சாமல் பொய் சொல்” என்று புதிய ஆத்திச்சூடியே கழகங்கள் எழுதினாலும் எழுதும்!
 
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் காங்கிரசோடும் பா.ச.க.வோடும் கூட்டணி சேர்ந்த காலங்களில்தான் இந்தித் திணிப்பும் சமற்கிருதத் திணிப்பும் தீவிரமடைந்தன.
 
தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து வரும் இவ்விரு கழகங்களும் தமிழ்நாட்டில் தேர்தலைப் பணப் பந்தயமாக மாற்றி விட்டன. கோடீசுவரர்களுக்கிடையே நடைபெறும் போட்டியாகக் குறுக்கி விட்டன. மக்களில் கணிசமானவர்களின் மனத்தைக் கறைப்படுத்தி விட்டன. தேர்தலில் பணமும் சாதியும் முக்கியக் காரணிகள் ஆகிவிட்டன. தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. அணிகளில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் தமிழின உரிமை மீட்புத் திட்டம் எதுவுமில்லை!
 
எந்த வகையில் பார்த்தாலும் இத்தேர்தல் “சனநாயகம்” என்ற பொருளுக்குள் அடங்கவில்லை!
 
பாசிச பா.ச.க.வா? அதனை எதிர்க்கும் காங்கிரசா இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என்கிறார்கள். மேற்சொன்ன எல்லா உரிமைப் பறிப்பிலும் காங்கிரசும், பா.ச.க.வும் ஒரே கொள்கை கொண்டவைதான்! பா.ச.க. வெளிப்படையாக ஆரியத்துவா பேசுகிறது. காங்கிரசு ஆட்சி ஆரிய ஆட்சி என்று அன்றே சொன்னார் அண்ணா!
 
அக்கூற்றை இன்றைக்கும் மெய்ப்பிக்கும் வகையில் தமது பூணூலைத் தூக்கிப் பிடித்து “நான் தத்தாத்திரிய கோத்ர பிராமணன்” என்றார் இராகுல் காந்தி!
 
உரிமை மீட்கப் போராடும் இனம் உரிமைப் பறித்தவர்கள் முன்வைக்கும் இரண்டு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் பின் தங்கிய நிலையில் இருக்கக் கூடாது. உரிமை மீட்பிற்கான தனது சொந்த இலட்சியத்தையும் வேலைத் திட்டத்தையும் முன்வைக்க வேண்டும்.
 
முதலில், பா.ச.க., காங்கிரசு கட்சிகளின் வடநாட்டு ஆதிக்க அரசியலையும், தமிழ்நாட்டுக் கட்சிகளின் கங்காணி அரசியலையும் அடையாளங்காணுங்கள்!
 
தமிழின உரிமை மீட்பு அரசியலாகத் தமிழ்த்தேசியத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! இலட்சியத் தமிழ்த்தேசிய அரசியலை மக்களிடம் விளக்குங்கள்; மக்கள் வருவார்கள்; மாற்றம் மலரும்!
 
இந்தப் புரிதலில்தான் இத்தேர்தலில் நாங்கள் யாருக்கும் வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தோம்!
 
தோழர் பெ. மணியரசன்
தவைர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்