img/728x90.jpg
13ம் நூற்றாண்டின் வரிவசூல்துறை...! - புதுக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய கல்வெட்டு

13ம் நூற்றாண்டின் வரிவசூல்துறை...! - புதுக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய கல்வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம் தொண்டமான் அரசர்களால் ஆளப்பட்டபூமி. இன்றைக்கு அன்னவாசல் புதுக்கோட்டை என்று அறியப்படுகிறது. இந்த ஊரில் சமணர்கள் வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக குடைவறைக் கோயில்களும் சமணர் படுகைகளும் கொண்ட ஊர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றன. சித்தன்னவாசல், நார்த்தான்மலை, திருமயம் கோட்டை போன்றவற்றை தற்போதைய அடையாளங்களாகச் சொல்லலாம். இதுதவிர பாழடைந்து கிடக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய  கோவில்களும் இந்த மாவட்டத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. அப்படியானக் கோவில்களில் அருந் தகவல்கள் அடங்கிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்படுகின்றன. அன்னவாசல் அருகில் உள்ள சிறுஞ்சுனை கிராமத்தில் ஆரண்ய விடங்கர் சிவன்கோவில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இங்கு கள ஆய்வு செய்ய வேண்டுமென்று  எல்லைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் தொன்மை பாதுகாப்புமன்றத்தினரும் தொல்லியல் ஆய்வுக்கழக மரபுநடை ஒருங்கிணைப்பாளர் கஸ்தூரிரங்கனும் விருப்பமனு அளித்தனர். அதன் அடிப்படையில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக தலைவர்  கரு.ராசேந்திரன், நிறுவனர் ஆ.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் கொண்ட குழு சமீபத்தில், அந்தக் கோவிலில் கள ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வில், அவர்களுக்கு வரலாற்று பொக்கிஷம் ஒன்று கல்வெட்டு வடிவில் கிடைத்தது. அந்தக் கல்வெட்டை குழுவினர் ஆழ்ந்து ஆய்வு செய்தபோது, ஆச்சர்யத் தகவல்கள் கிடைத்தன. அதாவது, அந்தக் கல்வெட்டானது, பதிமூன்றாம் நூற்றாண்டின் ஆவணமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை அந்தக்கால மன்னர்கள் உள்ளூர் நிர்வாகத்திடம் கொடுத்திருந்ததை வெளிப்படுத்தும் கல்வெட்டுதான் அது. 

இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரான மணிகண்டனிடம் பேசினோம், "கல்வெட்டில் உள்ள செய்தி எல்லாக் கல்வெட்டுகளிலும் இருப்பது போல்,
மங்கலவரியுடன் ஆரம்பிக்கிறது. அதில் பதிக்கப்பட்டுள்ள பதிகம் என்னவென்றால்,' சிறுசுனையூரான விருதராஜ பயங்கர சதுர்வேதி மங்கலம் புரவரி சிகரணத்தார் ஆசிரியம்“ என்பதாகும். அதாவது, விருதராஜ பயங்கரன்  என்ற பெயருடன் அழைக்கப்பட்ட முதலாம் குலோத்துங்கனின் பெயரால், சிறுசுனையூர் என்று அழைக்கப்படும் இவ்வூரின் புறவரியை அவ்வூரின் சீகரணம். அதாவது ,கிராம நிர்வாக அதிகாரியே   வசூலித்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டிருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கவே இந்த ஆசிரியம் கல்வெட்டு நடப்பட்டுள்ளது.

அதேபோன்று, சிதைந்து போன சிறுசுனையூர் ஆரண்ய விடங்கர் சிவன் கோவில் குளத்தின் தென்புறம் 13 ஆம் நூற்றாண்டில் (கி.பி 1243 ல்) விளக்கு எரிக்க பெரியபிள்ளை மருந்தாழ்வான் என்பவர் அந்தக் காலத்தைச் சேர்ந்த இருநூறு காசு கொடுத்த கல்வெட்டும், கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடை நாற்கல நெல் குறித்த கல்வெட்டும் எங்கள் குழுவினரால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. இதன் மூலம் இவ்விடத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரி வசூலிப்பு முறைமைகளை நாம் அறிந்துகொள்ளமுடிகிறது, அது மட்டுமன்றி, சதுர வடிவிலான ஆவுடை, சிதைந்தநந்தி, மயில்வாகனத்துடன் கூடிய முருகன் சிலை உள்ளிட்டவை இவ்விடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு,சிறுஞ்சுனை கிராம மக்களால் தற்போது பாதுகாப்பாக  வைக்கப்பட்டுள்ளது. அதே சிதைவுகளிடையே இந்த புரவரி கல்வெட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது.