img/728x90.jpg
16 வயதுச் சிறுவன்.. கோயில் பணியாளர்.. நான்கு காவலர்கள்! - கத்துவா சிறுமி வழக்கின் குற்றவாளிகள்!

16 வயதுச் சிறுவன்.. கோயில் பணியாளர்.. நான்கு காவலர்கள்! - கத்துவா சிறுமி வழக்கின் குற்றவாளிகள்!

கத்துவா சிறுமியின் வன்புணர்வு நிகழ்வு தொடர்ந்து சிறார்கள் மீது நிகழ்ந்து வரும் பாலியல் வன்முறைகளோடு ஒப்பிடப்பட்டாலும், அதை அதோடு மட்டும் சுருக்கிவிட முடியாது.
16 வயதுச் சிறுவன்.. கோயில் பணியாளர்.. நான்கு காவலர்கள்! - கத்துவா சிறுமி வழக்கின் குற்றவாளிகள்! #VikatanInfographics
`பறவைக்கூட்டின் முன் வேடர்கள் வைத்த வலையில், ஒருமுறைகூட வானில் பறந்திராத பறவைக்குஞ்சு சிக்கிக் கொண்டது' என்ற உருதுக் கவிஞர் மிர்சா காலீபின் கவிதையை வாசித்துவிட்டு, தீர்ப்பை வாசித்தார் பதான்கோட் நீதிமன்ற நீதிபதி தேஜ்விந்தர் சிங். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா நகரில் எட்டுவயதுச் சிறுமி கோயில் வளாகத்தில் வைத்து, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளானதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கத்துவா சிறுமி வன்புணர்வு வழக்கின் மீதான தீர்ப்பு, ஜூன் 10-ம் தேதி அளிக்கப்பட்டது.

முதன்மைக் குற்றவாளிகளான கோயில் பணியாளர் சஞ்சி ராம், குற்றத்தில் ஈடுபட்டதோடு அதை மறைத்த காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா, சஞ்சி ராம் மகனின் நண்பர் பர்வேஷ் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தடயங்களை அழித்ததோடு, குற்றத்தை மறைத்த குற்றத்திற்காக சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக் ராஜ் ஆகிய மூன்று காவலர்களுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முதன்மைக் குற்றவாளி சஞ்சி ராமின் மகன் விஷால் ஜங்கோத்ரா குற்றம் நடந்தபோது முசாபர் நகரில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தது நிரூபிக்கப்பட்டதால், அவர் மட்டும் விடுதலை செய்யப்பட்டார். மற்றொரு குற்றவாளி, பதினெட்டு வயது நிரம்பாதவர் என்பதால், சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

குழந்தைகள் மீதான வன்முறை

கடந்த 2018-ம் ஆண்டு, ஜனவரி 10-ம் தேதி, ஜம்மு பகுதியின் கத்துவா நகரில் வாழ்ந்து வந்த `பகர்வால்' என்ற நாடோடிப் பழங்குடி இனத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி காணாமல் போனார். ஒரு வாரத்திற்குப் பிறகு, காணாமல் போன சிறுமியின் உடல் ஊரின் எல்லையில் அமைந்திருந்த கோயிலுக்கு அருகில் கிடைத்தது. பிரதேப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, சிறுமிக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்திருந்தது உறுதிசெய்யப்பட்டது.

ஜனவரியில் நிகழ்ந்த இந்தக் கொடூரம், இந்தியா முழுவதும் மூன்று மாதங்கள் கழித்து சென்று சேர்ந்தது. எட்டு வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை எதிர்த்து, பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்தியாவின் பேசுபொருளாக இந்தச் சம்பவம் அமைந்தது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன. எனினும் கத்துவா பிரச்னை இந்தியச் சமூகத்தில் தொடர்ந்து நிலவி வரும் ஆணாதிக்கத்தினால் நிகழும் மற்ற குற்றங்களைப் போலவே அணுகப்பட்டது.

கத்துவா நிகழ்வு சிறார்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் பாலியல் வன்முறைகளோடு ஒப்பிடப்பட்டாலும், அதோடு மட்டும் அந்தச் சம்பவத்தைச் சுருக்கிவிட முடியாது. கொலைசெய்யப்பட்ட சிறுமி, `பகர்வால்' என்ற நாடோடி சமூகத்தைச் சேர்ந்தவர். ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பகர்வால் சமூகத்தின் மீது நிகழ்ந்து வரும் குற்றங்களின் வரிசையில் இந்தக் குற்றமும் நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் வாழும் இனக்குழுக்களுள் குஜ்ஜார்களும், பகர்வால்களும் மூன்றாவது மிகப்பெரிய குழுவினர். எனினும், இரண்டு குழுக்களும் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். நாடோடிகளாக வாழும் இந்தச் சமூகங்கள், கால்நடை வளர்ப்பைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். குளிர்காலத்தின்போது ஜம்முவிலும், வெயில் காலங்களில் காஷ்மீரிலும் வாழ்வது குஜ்ஜார், பகர்வால் சமூகங்களின் வழக்கம். பகர்வால் சமூகத்தினர் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக வாழ்ந்து வந்தாலும், காஷ்மீரிகளால் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள்.

காஷ்மீரில் நிகழ்ந்துவரும் ஆயுதப்போராட்டம், `தனி நாடு' என்ற கோரிக்கையின் அடிப்படையில் இயங்கி வருகிறது. பகர்வால் சமூகத்தினர் நாடோடிகளாக இருப்பதால், தனியாக நாடு வேண்டும் என்ற கோரிக்கை அவர்களிடம் எழுவதில்லை. மேலும், பயணத்திலேயே இருக்கும் பகர்வால் சமூகத்தை, இந்திய அரசுக்கு ஆதரவானவர்கள் என்ற ரீதியில் பெரும்பான்மை காஷ்மீரிகள் அணுகுவதும் இந்தப் பிரிவினைக்குக் காரணம்.

காஷ்மீரின் நிலை இப்படியிருக்க, பெரும்பான்மை இந்துக்கள் வாழும் ஜம்மு பகுதியில் குஜ்ஜார், பகர்வால் சமூகத்தினர் இஸ்லாமியர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இதனால் ஜம்முவில் இந்தச் சமூகங்கள் மீது வன்முறை நிகழ்த்தப்படுகிறது. 

கத்துவா வழக்கு

2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் குஜ்ஜார் மக்களின் குடியிருப்புகள் சூறையாடப்பட்டன. அதை  எதிர்த்த யாகூப் என்ற இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார். அரசு உருவாக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு, பகர்வால் மக்கள் வாழும் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. கால்நடைகளை மேய்ப்பதையே தொழிலாகச் செய்துவரும் குஜ்ஜார், பகர்வால் சமூகங்களுக்குத் தற்போது பசு குண்டர்களின் மிரட்டல்கள் புதிய பிரச்னையாக எழுந்துள்ளன. இப்படியான சூழலில், பகர்வால் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி கத்துவாவில் வன்புணர்வுக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டார். 

வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியின் உடலைப் புதைப்பதற்குக்கூட கிராமத்தினர் இடமளிக்க மறுத்தனர். அந்தக் கிராமத்திலிருந்து, எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்த மற்றோர் இடத்தில், சிறுமியின் உடல் புதைக்கப்பட்டது.

சிறுமி வன்புணர்வு வழக்கு மாநில காவல்துறையின் குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டது. கோயில் பணியாளரான சஞ்சி ராம் முதலில் கைது செய்யப்பட்டார். புலனாய்வுத்துறைக்கு மாற்றப்படுவதற்கு முன்பு, அப்பகுதி காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா இந்த வழக்கை விசாரித்து வந்தார். புலனாய்வுத்துறை விசாரணையில் காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியாவுக்கும் குற்றத்தில் பங்குண்டு என்பது வெளிப்பட்டது. அவரோடு மூன்று காவலர்களும் கைது செய்யப்பட்டனர். 

கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் 'ஹிந்து ஏக்தா மன்ச்' என்ற வலதுசாரி அமைப்பு கத்துவாவில் பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில் பி.ஜே.பியைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் சந்திர பிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களில் லால் சிங் ஏற்கெனவே குஜ்ஜார் மக்களிடம் `1947-ம் ஆண்டை மறந்துவிடாதீர்கள்' என்று ஜம்முவில் 1947-ம் ஆண்டில் நிகழ்ந்த இஸ்லாமியர் படுகொலைகளை முன்வைத்துப் பேசியது சர்ச்சைக்குள்ளானது.

கத்துவா - மக்கள் போராட்டம்

கத்துவா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடப்பது, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை பதான்கோட் நீதிமன்றத்திற்கு மாற்றி, விரைவாக முடிக்க உத்தரவிட்டது. கத்துவா சிறுமிக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் தீபிகா ரஜாவத்திற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால், சிறுமியின் பெற்றோர் அவரை வழக்கிலிருந்து விலக்குவதற்கு மனு அளித்தனர். 114 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, இறுதியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளின் தரப்பில் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியை உள்ளாக்கியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்காமல், ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

காஷ்மீரில் சோபியான், குனன் போஷ்போரா போன்ற பகுதிகளில் ஏற்கெனவே ராணுவத்தினரால் சில பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் உள்ள போதிலும் கத்துவாவில் சிறுமிக்கு எதிரான இந்த வன்கொடுமைச் சம்பவம் பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்யப்பட்ட பகர்வால் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியின் உடலை அடக்கம் செய்வதற்குக்கூட இடம் தராத கிராமத்தினர், குற்றவாளிகளாகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் காவலர்கள் போன்றோரின் செயல்களே பகர்வால் சமூகத்திற்கு எதிரான அவர்களின் கொடூர மனநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.