img/728x90.jpg
ஐட்ரோகார்பன் எடுக்காதே! காவிரி நீரைத் தடுக்காதே! - காவிரிப்படுகை மாவட்டங்களில் காத்திருப்பு அறப் போராட்டம்..!

ஐட்ரோகார்பன் எடுக்காதே! காவிரி நீரைத் தடுக்காதே! - காவிரிப்படுகை மாவட்டங்களில் காத்திருப்பு அறப் போராட்டம்..!

#StopHydrocarbonNotCauvery
#ஐட்ரோகார்பன்_எடுக்காதே_காவிரியைத்_தடுக்காதே

“ஐட்ரோகார்பன் எடுக்காதே! காவிரி நீரைத் தடுக்காதே!” என்ற முழக்கத்தோடு வரும் 2019 சூலை 2 காலை 8 மணி முதல், காவிரிப்படுகை மாவட்டங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பெருந்திரள் மக்கள் பங்கேற்கும் காத்திருப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

காவிரிப் படுகையை நாம் சோழ மண்டலம் என்கிறோம். ஆட்சியாளர்களோ பெட்ரோ – கெமிக்கல் மண்டலம் என்கிறார்கள். ஐட்ரோகார்பன், நிலக்கரி போன்ற கனிமங்களை எடுப்பதற்கு வசதியாகத்தான் ஆட்சியாளர்களால் காவிரி நீர் தடுக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. விழுப்புரம் மாவட்டத்திலிருந்து இராமநாதபுரம் மாவட்டம் வரை முதல்கட்டமாக 341 ஐட்ரோகார்பன் கிணறுகள் ஏலம் விடுகிறார்கள். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மாவட்டங்கள் முழுயாகப் பாதிக்கப்படுகின்றன.

அனில் அகர்வால் போன்ற வடநாட்டு வல்லூறுகளும் பன்னாட்டு வல்லூறுகளும் ஓ.என்.ஜி.சி.யும் ஏலம் எடுக்கின்றன. தமிழ் மண்ணை எவன் வேண்டுமானாலும் ஏலம் எடுக்கலாம்.

ஆறு கிலோ மீட்டர் ஆழத்திற்குக் குழாய்கள் இறக்கி – பக்கவாட்டில் பல குழாய்கள் செலுத்தி – அவற்றின் வழியாக அறுநூறுக்கும் மேற்பட்ட இரசாயனக் கரைசல்களை ஊற்றி – நீரியல் விரிசல் செய்து – நிலத்தைப் புண்ணாக்கி – நிலத்தடி நீரை நஞ்சாக்கி – நம் வேளாண்மையை அழித்து – குடிக்கவும் தண்ணீரின்றிச் செய்யும் நாச வேலைக்கு ஆட்சியாளர்கள் வைத்துள்ள பெயர் “வளர்ச்சித் திட்டம்” ! பாலிடாலுக்குப் பால் என்று பெயர் வைத்தால் எப்படியோ அப்படி இது!

மீத்தேன் போன்ற இரசாயனப் பொருள் எடுக்கத் தடை விதித்து 2015-இல் அப்போதைய முதல்வர் செயலலிதா அம்மையார் பிறப்பித்த ஆணை இன்றும் உயிரோடு இருந்தாலும் இன்றையத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அதைச் சட்டை செய்யவில்லை.

ஆற்று மணலையும் ஆதாயத்திற்காக காலி செய்கிறார்கள்.

காவிரி ஆணையமா? கானல் நீர் ஆணையமா?
காவிரி மேலாண்மை ஆணையமும், ஒழுங்காற்றுக் குழுவும் முழுநேர அதிகாரிகளைக் கொண்டதாக அமைக்கப்படவில்லை. வேறு பணிகளில் முழுநேரமாகச் செயல்படும் அதிகாரிகளின் ஓய்வு நேரப் பணியாக இவ்விரு அமைப்பிலும் இருக்கிறார்கள். இவை இரண்டிற்கும் தனியாகச் சொந்த அலுவலகம் கூட இல்லை. ஒழுங்காற்றுக் குழுவின் அலுவலகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பெங்களூருவில் இருக்க வேண்டும். ஆனால், அது புதுதில்லியில் ஓசி இடத்தில் இருக்கிறது.

நமது கோரிக்கைகள்
---------------------------------
1. தமிழக அரசே! காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு. ஐட்ரோ கார்பன் திட்டத்தைத் தடை செய்து அரசாணை வெளியிடு!

2. இந்திய அரசே! காவிரி ஆணையத்திற்கு முழுநேரத் தலைவரையும் அலுவலர்களையும் அமர்த்திடு! மேக்கேத்தாட்டு அணைக்குக் கொடுத்த அனுமதியை இரத்து செய்!

3. காவிரி ஆணையமே! கர்நாடகம் சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்துள்ள காவிரி நீரைக் கண்டறிந்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடு!

மக்களின் விழிப்புணர்ச்சியும், போராட்டமும்தான் தாய் மண்ணைக் காக்கும்; காவிரித் தாயை மீட்கும்!

போராட்டத்தையொட்டி சமூக வலைத்தளங்களில் சூலை 2 காலை 8 மணி முதல் #StopHydrocarbonNotCauvery - சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கமும், வேதாந்தா - ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு இலட்சம் மின்னஞ்சல்கள் அனுப்பி எச்சரிக்கும் இயக்கமும் நடக்கிறது. அனைவரும் அதில் பங்கேற்று, நம் கோரிக்கையை உலகறியச் செய்யுங்கள்!

வாருங்கள் காத்திருப்புக் களத்திற்கு..!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 76670 77075, 94432 74002