• :
  • :
களத்தில்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: டிடிவி தினகரன் வெற்றி; திமுக டெபாசிட் இழந்தது

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்தனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன.

 
வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வாகை சூடியுள்ளார். 50.32% வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து  அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக வாக்கு சதவீதம் 13.94% ஆகும்.

கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல் 2001-ல் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு சுயேட்சையாக வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரனே சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்.

ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவை விஞ்சிய டிடிவி:

கடந்த 2016-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்தபோது அதிமுக வேட்பாளாராக களம் கண்ட ஜெயலலிதா அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனைவிட 39,544 வாக்குகள் அதிகமாகப் பெற்றார்.

தற்போதைய இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளரைவிட 40,707 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.

ஒப்பிட்டுப் பார்த்தால் இது ஜெயலலிதா - சிம்லா முத்துச்சோழன் இடையேயான வாக்குவித்தியாசத்தைவிட அதிகமானதாகும். 1,162 வாக்குகள் டிடிவி அதிகமாகப் பெற்றுள்ளார்.

டெபாசிட் இழந்த திமுக:

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும். அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது நிலைமை. ஆனால், மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் திமுக டெபாசிட் இழந்துள்ளது.

நாம் தமிழர், பாஜக கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன. நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

திமுகவுக்கு பின்னடைவே..

தேர்தலுக்கு முன்னதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரு பேட்டியின்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும் எனக் கூறிய நிலையில் தற்போது திமுக டெபாசிட் இழந்துள்ளது.

திமுகவின் செயல் தலைவராக ஆன பின்னர் கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் திமுக டெபாசிட் இழப்பது கட்சிக்கு பெரும் பின்னடைவே.

15வது சுற்றிலேயே டிடிவி வெற்றி உறுதியானது எப்படி..?

ஆர்.கே.நகரில் மொத்தம் பதிவான வாக்குகள் 1,76,885. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் 1,44,260. எஞ்சியுள்ள எண்ணப்பட வாங்கிய வாக்குகள் 32,625.

15-வது சுற்று முடிவில் தினகரன் பெற்ற வாக்குகள் 72,413. மதுசூதனன் பெற்ற வாக்குகள் 38,960. டிடிவி தினகரன் 33,447 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

எண்ணப்பட வேண்டிய வாக்குகளே வெறும் 32, 625 என்ற நிலையில் டிடிவி தினகரன் 33,447 வாக்குகள் முன்னிலையில் இருந்ததால் 15-வது சுற்றிலேயெ டிடிவியின் வெற்றி உறுதியானது.

நிகழ்நேரப் பதிவு நிறைவுற்றது

5.15 PM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவர் 89,013

வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகள் பெற்றார். பாஜகவின் கரு.நாகராஜ் 1,368 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 2,348 வாக்குகள் கிடைத்தது.

5.05 PM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் என்ன நேர்ந்தாலும் வாக்குக்கு பணம் கொடுப்பதில்லை என்ற கொள்கையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அவரது உறுதிக்கு கிடைத்த விளைவாக இந்த முடிவை பார்க்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

5.02 PM: 18 சுற்றுகள் முடிவில், மொத்தம் எண்ணப்பட்டுள்ள வாக்குகள் 1,72,191. இடைத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள்  1,76,885. இன்னும் 4,694 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டியுள்ளன.

5.01 PM: வேலூர் எம்.பி. செங்குட்டுவன் டிடிவி தினகரனை சந்திக்க அவரது இல்லத்துக்கு செல்வதாக தகவல். ஸ்லீப்பர் செல் உள்பட 60 பேர் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்த நிலையில் தற்போது அதிமுக எம்.பி., ஒருவர் தினகரனை சந்திக்க இருப்பது கவனிக்கத்தக்கது.

4.50 PM: 18-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 86,472 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 47,115 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். திமுகவின் மருதுகணேஷ் 24,055 வாக்குகள் பெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சி 3,645 வாக்குகளும், பாஜக 1,236 வாக்குகளும் பெற்றுள்ளன.


4.35 PM: 17-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 81,315 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 44,522 வாக்குகள் பெற்றுள்ளார். 36,793 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 22,962 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3,645 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் கரு.நாகராஜன் வெறும் 1,236 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

4.30 PM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 16 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் 1,53,210 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகள், 1,76,885 ஆகும்.

4.25 PM: 16-வது சுற்று முடிவில், டிடிவி தினகரன் 76,701 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 41,529 வாக்குகளும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 21,827 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

4.16 PM: 15 சுற்றுகள் முடிவில் டிடிவி தினகரன் 72,413 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 38,966 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 20,388 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

4.00 PM: ஆர்.கே.நகரில் திமுகவின் நிலை மிகவும் பரிதாபமாகியிருக்கிறது. அவர்கள் திருமங்கலத்தில் எதை விதைத்தார்களோ, அதை ஆர்.கே. நகரில் அறுவடை செய்திருக்கின்றனர் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

3.50 PM: 14-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 68,392 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 36,211 வாக்குகள் பெற்றுள்ளார். 36,217 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 18,924 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 3,083 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் கரு.நாகராஜன் வெறும் 942 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

3.30 PM: ஜெயலலிதாவுக்கு அடுத்து தினகரன் தரப்பா? எடப்பாடி பழனிசாமி தரப்பா? என்பதை மனதில் வைத்தே ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர். அந்தப் போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். | திருமாவளவன் பேட்டி |

3.28 PM: 13 சுற்றுகள் முடிந்த நிலையில், நோட்டாவுக்கு 1537 வாக்குகள் கிடைத்துள்ளன.

3.25 PM: 13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 64,984 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 33,446 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 17,145 வாக்குகள் பெற்றுள்ளார்.

3.20 PM: 12-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 60,284 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 30,745 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 15,918 வாக்குகள் பெற்றுள்ளார்.

3.05 PM: 40 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இரட்டை இலை சின்னத்தையும், உதயசூரியன் சின்னத்தையும் ஒரு சுயேட்சை சின்னம் வெற்றி பெற்றுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவைக் காட்டுகிறது என டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

2.57 PM: 11 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் டிடிவி தினகரன் 26,579 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

2.55PM: 11-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 54,316 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 27,737 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 14,431 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 2,347 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 712 வாக்குகள் பெற்றுள்ளார். 

2.50 PM: 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தபோதும் மக்கள் திமுகவை நிராகரித்துள்ளனர். திமுக ஊழல் செய்துள்ளதை மக்கள் நிரூபித்துள்ளனர்" என அதிமுக எம்.பி, தம்பிதுரை கூறியுள்ளார்.

2.49 PM: 10 சுற்றுகள் முடிந்த நிலையில், ஆர்.கே.நகரில் நோட்டாவுக்கு 1298 வாக்குகள் பதிவாகியுள்ளன.

2.44PM: 10-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 23,441 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

2.44PM: 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 48,808 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 25,367 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 13,015 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 2,347  வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 712 வாக்குகள் பெற்றுள்ளார்.

2.30 PM: மதியம் 2.30 நிலவரப்படி, மொத்தம் பதிவான 1,76,885 வாக்குகளில் 84,982 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேல் அதாவது 44,308 வாக்குகளை டிடிவி தினகரன் பெற்றுள்ளார். 

2.19 PM: சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தினார் டிடிவி தினகரன்.

2.13 PM: "ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றி பெற்றால் அது ஆர்.கே.நகர் மக்களுக்கு கிடைத்த தோல்வி. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை. தமிழகத்தில் அசாதராண சூழ்நிலை நிலவுவதால் ஆளுநர் ஆய்வு தவறில்லை என்றே தோன்றுகிறது" என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரியில் பேட்டியளித்துள்ளார்.

2.03 PM: சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தினார்.

2.00 PM: 9-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 22,336 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

13:58 PM:  9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 44,308 வாக்குகள் பெற்று தினகரன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 21,972 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 11,431 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 2,116 வாக்குகள் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 626 வாக்குகள் பெற்றுள்ளார்.

13.44 PM: 8-வது சுற்று முடிவில் டிடிவி தினகரன் 20,161 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

13.40 PM: 8-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 39,940 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 19,779வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 10,307 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 1,732 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 519 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 925 வாக்குகள் கிடைத்துள்ளன.

13.33 PM: 7-வது சுற்று நிலவரப்படி டிடிவி தினகரன், அதிமுக வேட்பளர் மதுசூதனனைவிட 16,875 வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளார்.

13.23 PM: 7-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 34,346 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 17,471 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 9,206 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 1,732 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 519 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 925 வாக்குகள் கிடைத்துள்ளன.

1.10 PM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள், திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியிருக்கிறார்.

1.00 PM: "ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கத் தொடங்கியிருக்கிறது. இது தமிழக மக்கள் எதிர்பார்த்ததுதான். ஊழல் வெற்றி பெறும், ஜனநாயகம் தோற்கும். பணநாயகம் வெற்றிபெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்" என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். 

12.51 PM: டிடிவி தினகரன் சென்னை வந்தடைந்தார். அவர், எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

12.50 PM: 6 சுற்றுகள் முடிவில் நோட்டாவுக்கு 798 வாக்குகள் கிடைத்துள்ளது.

12.49 PM: 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட  டிடிவி தினகரன் 14,074 வாக்குகள் பெற்றுள்ளார்.

12.48 PM: எதிர்காலத்தில் அதிமுக டிடிவி தினகரனுடன் இணையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

12.47 PM: 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், டிடிவி தினகரன் 29,255வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 15,181வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 7,986 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 1,509 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 485 வாக்குகள் பெற்றுள்ளார்.

12.40 PM: "மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக தமிழகத்தில் ஓர் இடைத்தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கான நோட்டாவைவிட குறைவாக வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பாஜக தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம்" என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
11.47 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படாது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

11.41 AM: 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட டிடிவி தினகரன் 11,816 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

11.40 AM: 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், குக்கர் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9,672 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 5,091 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 737 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 220 வாக்குகள் பெற்றுள்ளார்.

11.30 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள் பணநாயகத்தையே உணர்த்துகிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
11.24 AM: 3-வது சுற்று முடிவில் பாஜகவுக்கு நோட்டாவைவிட குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன என்பது கவனிக்கத்தக்கது. பாஜகவின் வேட்பாளர் கரு.நாகராஜன் 117 வாக்குகள் பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 333 வாக்குகள் கிடைத்துள்ளது.
11.05 AM: 3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் 15,868 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 7,033 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 3,750 வாக்குகள் பெற்றுள்ளார், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 459 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 117 வாக்குகள் பெற்றுள்ளார்.
10.36 AM: இரண்டு சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அதிமுக வேட்பாளர் மதுசூதனனைவிட 5,900 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

10.25 AM: 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 10,421, அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 4,521, திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 2,324, நாம்தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 747, பாஜகவின் கரு.நாகராஜன் 173 வாக்குகள் பெற்றுள்ளனர்.

10.05 AM: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பிரச்சினையை ஏற்படுத்தியவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. சுமார் 45 நிமிடங்கள் வாக்கு எண்ணிக்கை தடைபட்டது.

9.34 AM: வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீரென சலசலப்பு ஏற்பட்டது. அதிமுக - டிடிவி தரப்பு மோதலை அடுத்து வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள் தாக்கப்பட்டதால் வன்முறையில் ஈடுபட்டவர்களை வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
9.25 AM: நோட்டாவுக்கு 122 வாக்குகள் கிடைத்துள்ளன. இது பாஜக வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகளைவிட அதிகமாகும்.

9.20 AM: முதல் சுற்று நிலவரப்படி சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 5,339 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 1,182 பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 258 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜகவின் கரு.நாகராஜன் 66 வாக்குகள் பெற்றுள்ளார்.

9.00 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று நிலவரம் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில் திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயம், அதிமுக தலைமை அலுவலகம் ஆகியன் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
8.25 AM: தற்போதைய நிலவரப்படி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடியாவிட்டாலும்கூட சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

38-வது எண் வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்டு நேதாஜி நகர், சாஸ்திரி நகர் போன்ற பகுதிகள் உள்ளன.
8.10 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரே ஒரு தபால் வாக்கு பதிவானது. அந்த தபால் வாக்கு திமுகவுக்கு பதிவாகியுள்ளது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல்..

தமிழக அரசியலில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ‘விவி பாட்’ இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு, ராணி மேரி கல்லூரியில் முதல் தளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

மாலை 5.10 மணியளவில் 19 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் வாக்குகள் நிலவரம்

கட்சிகள்    வேட்பாளர்கள்    19-வது சுற்று வாக்கு நிலவரம்
சுயேட்சை    டிடிவி தினகரன்    89,013
அதிமுக    மதுசூதனன்    48,306
திமுக    மருதுகணேஷ்    24,581
நாம் தமிழர்    கலைக்கோட்டுதயம்    3,802
பாஜக    கரு.நாகராஜன்    1,368
     நோட்டா    2,348