img/728x90.jpg
வெளி மாநிலத்தவரே தமிழ்நாட்டுக்கு வராதீர்!

வெளி மாநிலத்தவரே தமிழ்நாட்டுக்கு வராதீர்!

மனிதச் சுவர் போராட்டத்தில் - சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தை அதிர வைத்த முழக்கம்!

“தமிழர் வேலைகளைப் பறிக்காதீர்! வெளி மாநிலத்தவரே திரும்பிப் போங்கள்!” என தமிழ்த்தேசியப் பேரியக்கம் இன்று (20.12.2019) “மனிதச் சுவர் போராட்டத்தில்” முன்னெடுத்த முழக்கம், சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையத்தை அதிர வைத்தது.

தமிழர்களின் வாழ்வுரிமையையும், வேலைகளையும் பறிக்கும் வகையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் பல்லாயிரக்கணக்கில் வந்து தமிழ்நாட்டில் குவிகிறார்கள். இந்நிலையில், “தமிழர் வாழ்வுரிமையைப் பறிக்காதீர்கள் திரும்பிப் போங்கள்!” என்று வேண்டுகோள் வைக்கும் மனிதச்சுவர் போராட்டத்தை – வடநாட்டவரும், வெளி மாநிலத்தவரும் ஒவ்வொரு நாளும் வந்து குவிந்து கொண்டிருக்கும் சென்னை நடுவண் (சென்ட்ரல்) தொடர்வண்டி நிலையம் முன்பு இன்று (20.12.2019) நடத்தவுள்ளதாக தமிழ்த்தேசியப் பேரியக்கம், கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டு, தமிழகமெங்கும் இதற்கான பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டது.

அதன்படி, இன்று (20.12.2019) காலை சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு எழுச்சிமிக்கப் போராட்டமாக “மனிதச் சுவர் போராட்டம்” நடைபெற்றது. போராட்டத்தையொட்டி, நடுவண் தொடர்வண்டி நிலையம் வாயில் அருகில் சிறப்பு அதிரடிப்படையினரும், நூற்றுக்கணக்கான காவலர்களும் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் சென்னை நடுவண் தொடர்வண்டி நிலையம் முன்பு ஒன்றுகூடி, போராட்டக் கோரிக்கையை விண்ணதிர முழக்கங்களாக எழுப்பினர். “வெளியாரே வெளியாரே, வடவர்களே வராதீர் வராதீர்! வேலை தேடி தமிழ்நாட்டிற்கு வராதீர்!”, “இந்திக்காரர்களே இந்திக்காரர்களே எங்கள் வேலைகளைப் பறிக்காதீர்! எங்கள் வயிற்றில் அடிக்காதீர்! வந்தவழியே திரும்பிப் போங்கள் தமிழர் வாழ்வைப் பறிக்காதீர்!”, “வெளியேற்றுவோம் வெளியேற்றுவோம் வெளியாரை வெளியேற்றுவோம்! மார்வாடி குசராத்தி சேட்டுகளை வெளியேற்றுவோம்!” என தமிழிலும், “கோ பேக் கோ பேக் இந்தி வாலா கோ பேக்!”, “கோ பேக் கோ பேக் நார்த் இந்தியன்ஸ் கோ பேக், அவுட்சைடர்ஸ் கோ பேக்” என ஆங்கிலத்திலும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் தொடக்கவுரையாற்றினார். ஆண்களும், பெண்களுமாக நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் எழுச்சியுடன் பங்கேற்றனர்.

தொடர்ந்து சென்னை தொடர்வண்டி நிலையத்தின் எதிரே விண்ணதிர முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்த தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனங்களில் ஏற்றினர். வாகனங்கள் போதாததால், அடுத்த வாகனம் வரும் வரை ஆர்ப்பாட்டத் தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்தனர்.

கைதான தோழர்களை ஏழுகிணறு பகுதியிலுள்ள சமூக நலக்கூடத்திற்குக் கொண்டு சென்ற காவல்துறையினர், நெரிசலான அப்பகுதியில் தங்கள் வாகனத்தை கொண்டு செல்ல முடியாததால் தோழர்களை நடத்தி அழைத்துக் கொண்டு சென்றனர். அப்போது, மார்வாடிகள் நிறைந்திருந்த அப்பகுதியில் போராட்டத் தோழர்கள் அணிவகுத்து ஊர்வலம் போல வெளியாருக்கு எதிராக முழக்கமெழுப்பிச் சென்றனர். இது அங்கிருந்த மார்வாடிகளுக்கு அதிர்ச்சியையும், தமிழ் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாகவும் அம்முழக்கங்கள் அமைந்தன.

தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைமை ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலவன், காவிரி விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் திரு. சுந்தர விமலநாதன், உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி தலைவர் திரு. கோ. தமிழுலகன், மாதவரம் ஐயா இரா. பத்மநாபன், தமிழ்த்தேச மக்கள் கட்சி பொறுப்பாளர் தோழர் தமிழ்நம்பி, அகில இந்திய தொடர்வண்டி அப்ரண்டிஸ் மாணவர்கள் சங்கம் திரு. ஆரோக்கிய ரீகன், சட்டக்கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவர் திரு. சுபாஷ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் க. அருணபாரதி, நா. வைகறை, பழ. இராசேந்திரன், இரெ. இராசு, க. முருகன், க. விடுதலைச்சுடர், வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, ம. இலட்சுமி, முழுநிலவன், மு. தமிழ்மணி, பொதுக்குழு தோழர்கள் பாவலர் இராசாரகுநாதன், புதுச்சேரி இரா. வேல்சாமி, ஓசூர் ப. செம்பரிதி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி. தென்னவன், தஞ்சை இரா.சு. முனியாண்டி, ஈரோடு வெ. இளங்கோவன், கோவை சு. இராசேந்திரன், புளியங்குடி க. பாண்டியன், மதுரை கதிர்நிலவன், சிவா, தருமபுரி க. விசயன், சிதம்பரம் எல்லாளன், மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் தோழர் செம்மலர், போடி சுப்பிரமணியம், தமிழக உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் தூருவாசன், தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ. குபேரன், மூத்த தோழர் திருத்துறைப்பூண்டி இரா. கோவிந்தசாமி, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் பே. மேரி, தமிழக மாணவர் முன்னணி தோழர் மணிமாறன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பேரியக்கத் தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதாகினர். அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

போராட்டத்தையொட்டி சமூக வலைத்தளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils ஆகிய குறிச்சொற்களுடன் பரப்புரை இயக்கம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வர இயலாத பலர், இக்குறிச்சொற்களுடன் தங்கள் சுட்டுரை (Twitter) மற்றும் முகநூல் பக்கங்களில் போராட்டக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கருத்துகளை எழுதினர். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயகுமார், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன் உள்ளிட்ட தோழமை இயக்கத் தலைவர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் #தமிழகவேலைதமிழருக்கே என முழக்கங்களைப் பதிந்தனர். சற்றொப்ப 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்பரப்புரை இயக்கத்தில் பங்கெடுத்தனர்.