img/728x90.jpg
பேச்சும் வன்முறை செயலும் வன்முறை – இதுதான் ஆரியத்துவா!

பேச்சும் வன்முறை செயலும் வன்முறை – இதுதான் ஆரியத்துவா!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க.வைச் சேர்ந்த நடுவண் மற்றும் மாநில அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் அவ்வப்போது முசுலிம்களுக்கு எதிராகவும் “தேச விரோதிகளுக்கு” எதிராகவும் கொலை மிரட்டல் விடுவது, பாக்கித்தானுக்குப் போய் விடுங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு வன்முறை அச்சுறுத்தல்களை வெளியிடுவார்கள். அவ்வாறான மனித குலப்பகை மிரட்டல்களை அவர்கள் வெளியிடும்போது, எதிர்க்கட்சிகளும், சனநாயக ஆர்வலர்களும் கண்டனம் வெளியிடுவார்கள்.

இந்தக் கொலை மிரட்டல்களும், நாடு கடத்தல் அச்சுறுத்தல்களும் உண்மையாக நடக்காது, சும்மா மிரட்டுகிறார்கள் என்று பலர் நினைத்திருக்கக் கூடும். ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் வன்முறைகளைச் செயல்படுத்தக் கூடியவர்கள் என்பதற்குக் கடந்தகாலச் சான்றுகள் பல இருக்கின்றன.

இப்போது குடியுரிமைச் சட்டத்திருத்தத்தையும் (CAA), தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும் (NRC) எதிர்த்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்தியோர் மீது பா.ச.க. மாநில ஆட்சிகள் காவல்துறையினரை ஏவி நடத்திய கொலைகளும் வன்முறைகளும் நிகழ்காலச் சான்றுகளாகும்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ச.க. முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்; அசாமில் பா.ச.க. முதலமைச்சர் சர்வானந்தா சோனோவால்! இருவரும் காவல்துறையைப் பயன்படுத்தி, மாணவர்கள் மீதும் மற்றவர்கள் மீதும் ஏவியுள்ள கொலைச் செயல்கள், வன்முறைகள் மிகமிகக் கொடியவை.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம் மீரட் நகரில் லிசாரி கேட் பகுதி மசூதியில் 20.12.2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த முசுலிம்கள் கூடி நின்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து முழக்கமிடுகிறார்கள். காவல் துறையினர் கன்னாபின்னாவென்று அவர்கள் மீது தடியடி நடத்துகிறார்கள். ஆத்திரமுற்ற கூட்டத்தினரில் சிலர் காவல்துறையினரின் மீது கல்லெறிகிறார்கள். முசுலிம்களில் மூன்று பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் சாய்க்கப்படுகிறார்கள். அவர்களில் மோசின் என்ற 28 அகவை இளைஞரை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குப் போகிறார்கள். துப்பாக்கிக் குண்டுக் காயங்களுக்கு சிகிச்சை செய்யக் கூடாது என்று எங்களின் மேலிட நிர்வாகம் கட்டளை இட்டுள்ளது. எனவே மருத்துவம் பார்க்க முடியாது என்று அரசு மருத்துவர்கள் மறுக்கிறார்கள். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் மோசின் இறந்து போகிறார்.

இரவு மோசின் உடலைப் பெற்றோர் பெற்றுக் கொண்டனர். விடிவதற்குள் புதைக்க வேண்டும் என்று காவல் துறையினர் நெருக்கடி கொடுத்து, காலை 6 மணிக்கு மோசின் புதைக்கப்பட்டார்.

அதே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்ற இன்னொருவர் 32 அகவையுள்ள ஆசிப்! அவரைக் காப்பாற்ற அடுத்தடுத்து நான்கு மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு போகிறார்கள். நான்கு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.

ஆசிப் உடலை விடியற்காலம் 4 மணிக்குப் புதைக்க வேண்டும் என்று காவல் துறையினர் நெருக்கடி கொடுத்தனர். “எங்களுக்குரிய இடுகாடு சற்று தள்ளி இருந்ததால், அருகில் உள்ள வேறொரு இடுகாட்டில் புதைக்குமாறு காவல் துறையினர் கட்டாயப்படுத்தி, புதைக்க வைத்தனர்” என்று ஆசிப் மாமியார் சமீம் ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.

நாற்பது அகவையுள்ள ஜாகீர் சிகரெட் வாங்கக் கடைக்குப் போனவர், அக்கடையின் முன்பு உட்கார்ந்திருக்கிறார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த இடத்திலேயே அவர் செத்து விட்டார்.

“ஜாகீரின் உடல்கூறு ஆய்வறிக்கையை (பிரதேப் பரிசோதனை அறிக்கையை) வாங்க நாங்கள் யாரும் மருத்துவமனைக்குப் போகவில்லை. போனால் எங்களையும் கைது செய்து வழக்கில் சேர்த்து விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது” என்று ஜாகீரின் நண்பர் ஊடகத்தினரிடம் கூறினார். மற்ற இருவர்க்கான உடற்கூறு அறிக்கையையும் குடும்பத்தினர் வாங்கவில்லை.

துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட முகம்மது மோசின், ஆசிப், ஜாகீர் ஆகிய மூன்று பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது!

மீரட்டில் மட்டும் அடுத்தடுத்த நிகழ்வுகளிலும் சேர்த்து 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். உ.பி.யில் இதுவரை 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று ஏடுகள் கூறுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் 22 லிருந்து 26 அகவை உள்ள இளைஞர்கள்.

அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம்

கடந்த 15.12.2019 அன்று அலிகார் முசுலிம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து உத்தரப்பிரதேசக் காவல்துறையினர் தடியடி நடத்தியும், இரப்பர் குண்டுகளை வெடித்தும் நடத்திய வேட்டை கொடுமையானது.

அன்று (15.12.2019) தில்லி ஜாமியா மிலியா இசுலாமிய பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து காவல்துறையினர் தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறை வெறியாட்டம் போட்டனர். இச்செய்தி அலிகார் முசுலிம் பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தெரிய வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் சிலர் ஜாமியா மிலியாவில் இறந்து விட்டதாகவும் ஊகச்செய்தி வருகிறது.

கொந்தளித்துப் போன அலிகார் முசுலிம் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த வெளியே வருகிறார்கள். 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாசலில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களைத் தடுக்கின்றனர். மாணவர்கள் பல்கலை வளாகத்திற்குள் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் திமுதிமுவென்று காவல்துறையினர் ஓடி தடியடி நடத்துகிறார்கள். துப்பாக்கிச் சூடு நடத்தி இரப்பர் குண்டுகளால் மாணவர்களைப் படுகாயப்படுத்துகிறார்கள். ஒரு மாணவர்க்கு ஒரு கை விரல்கள் அனைத்தும் முறிந்து போயின.

“முசுலிம் மதத்தைக் கொச்சையாகப் பேசி, இழிவான சொற்களைக் காவல்துறையினர் பேசியது - துப்பாக்கிக் குண்டுகளை விட எங்களை அதிகம் காயப்படுத்தியது” என்கின்றனர் மாணவர்கள்.

உ.பி.யில் கொல்லப்பட்ட 19 பேரில் பெரும்பாலோர் இளைஞர்கள்! பல்லாயிரக் கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அசாமில்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் உடனடியாக – அதிகம் பாதிக்கப்படும் மாநிலம் அசாம். தமிழ்நாட்டிற்கு முன்னோடியாக வெளி மாநிலத்தவர்களின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலம் அசாம். அசாமியர்களின் மக்கள் தொகைக்குச் சமமான அளவிற்கு வெளி மாநிலத்தவர்கள் குடியேறிய மாநிலம் அசாம். வெளியாரை வெளியேற்றப் பெரும் போராட்டங்கள், பல்லாண்டுகள் நடத்தி, அவ்வாறு வெளியேற்றுவதற்கான ஒப்பந்தத்தை இந்திய அரசுடன் போட்ட மாநிலம் அது!

அதன்படியான கணக்கெடுப்பில் 19 இலட்சம் பேர் “வெளியார்” என்று முடிவானது. அவர்களில் பெரும்பாலோர் மேற்கு வங்கம், பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களைச் சோந்த இந்துக்கள். வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் சிறு பகுதியினர். 19 இலட்சம் பேரில் 14 இலட்சம் பேர் இந்துக்கள்!

மோகன் பகவத் – மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 14 இலட்சம் இந்துக்களும் அசாமில் வாழ வேண்டிய இந்தியக் குடிமக்கள் என்று ஆக்கிவிடும் என்பதே அசாமியரின் அச்சம்! வெளியாரை வெளியேற்ற இந்திய அரசுடன் அசாம் மக்கள் போட்ட ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். எனவே, அசாமில் அனைத்துத் தரப்பு அசாமியரும் வெகுண்டெழுந்து போராடுகின்றனர். திரிபுராவில் மண்ணின் மக்களான திரிபுரிகள் 25 விழுக்காடுதான். எனவே, அங்கும் கடுமையாக இச்சட்டத்தை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர். பா.ச.க.வைச் சேர்ந்த சாதாரண அசாமியரும் இப்போராட்டங்களை ஆதரிக்கின்றனர்.

ஆனால், அசாமின் பா.ச.க. முதலமைச்சர் சர்வானந்தா சோனோவால் கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

கவுகாத்தி, திப்ருகார், காட்டன் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் வீதிகளில் இறங்கி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடுகிறார்கள். அவர்கள் மீது – இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்த குற்றச்சாட்டின் (இந்தியத் தண்டனைச் சட்டம் – 121) கீழ் வழக்குப்பதிவு செய்து தளைப்படுத்துகிறது பா.ச.க. ஆட்சி.

இதே சர்வானந்தா சோனோவால் – வெளியாரை வெளியேற்றும் அசாம் போராட்டத்தில் அனைத்து அசாம் மாணவர் சங்கத்தில் செயல்பட்டுப் போராடிய முன்னாள் மாணவர் தலைவர்களுள் ஒருவர்.

அசாமில் காவல்துறையினர் 5 பேரை சுட்டுக் கொன்றார்கள். இவர்களின் அகவை 16, 17, 23, 25, 45.

கர்நாடகத்தில்

பா.ச.க. முதல்வர் எடியூரப்பா கர்நாடகத்தில் கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார். அங்கு மங்களூரில் குடியுரிமைச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடிய இருவரை சுட்டுக் கொன்றது கர்நாடகக் காவல்துறை. அகவை 23, 49.

தில்லியில் ஜாமியா மிலியா இசுலாமியா, சவகர்லால் நேரு பல்கலைக்கழகங்களின் உள்ளே சென்று மாணவர்களைத் தாக்கியது காவல்துறை!

வன்முறையாளர்கள்

ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பரிவாரங்கள் பேசும் ஆன்மிகம் மனத்தைப் பக்குவப்படுத்தும் ஆன்மிகம் அன்று. பழிவாங்கும் வெறி, ஆரிய இனவெறி, வன்மம், வன்முறை சார்ந்தவையாக இருக்கின்றன.

சிவநெறி, திருமால் நெறி சார்ந்த மரபுவழித் தமிழர் ஆன்மிகம், அன்பு, பொறுமை ஆகியவற்றால் மனத்தைப் பக்குவப்படுத்தும் ஆன்மிகம்! ஆர்.எஸ்.எஸ். – பா.ச.க. பேசும் ஆரியத்துவா ஆன்மிகம் வன்முறையை வளர்ப்பது. அவர்கள் பேச்சும் செயலும் ஒன்றாகவே இருக்கிறது. அது வன்முறை ஆன்மிகம்!

எதிர்காலம் அச்சம் நிறைந்தது

இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி மிகக் கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். அவருடைய வழிகாட்டல்படிதான் அவருடைய முதலமைச்சர்கள் செயல்படுகிறார்கள். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடியவர்களுக்கு மருத்துவம் பார்க்க, அவர்களை மருத்துவமனையில் சேர்க்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவர்கள் மறுத்த செயல் என்பது பா.ச.க. ஆட்சியாளர்களின் பாசிசத்திலேயே கொடிய வடிவமாகும்!

“தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) எடுப்பது பற்றி, என்னுடைய அரசு சிந்திக்கவே இல்லை. அதுபற்றி, எந்தத் திட்டமும் எங்களிடம் இல்லை” என்று நரேந்திர மோடி பேசியது, அப்பட்டமான பொய் என்று அனைவருக்கும் தெரியும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து 2019 திசம்பர் மாதம் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய அமித்சா, “தேசியக் குடிமக்கள் பதிவேடு எடுக்கப்படுவது உறுதி” என்று கூறியது ஏடுகளில் பதிவாகி வெளிவந்துள்ளது. நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் அமித்சா அவ்வாறு பேசியுள்ளார்.

இந்நிலையில், என்.ஆர்.சி. பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை என்று தலைமை அமைச்சர் மோடி கூறுவது, இவர் எந்தப் பாவத்தையும் செய்யத் துணிவார் என்றல்லவா தோன்றுகிறது!

அடுத்து, இந்திய இராணுவத் தலைமை தளபதி பிபின் இராவத், ஒரு கூட்டத்தில் பேசும்போது “மாணவர்களை அழிவு வேலையில் ஈடுபடுத்துவது தலைமைப் பண்பு அல்ல” என்று கூறியிருக்கிறார். பாக்கித்தானில் இவ்வாறு படைத்தலைவர்கள் பேசுவது வழக்கம். பா.ச.க.வின் இந்துத்துவ ஆட்சியிலும் இப்போது அவ்வாறு படைத் தலைவர் பேசுகிறார்.

இவையெல்லாம், எதிர்காலத்தில் வரப்போகும் பேராபத்தின் முன் அறிகுறிகள் என்று தோன்றுகின்றன.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் பா.ச.க.வின் யோகி ஆதித்தியநாத் போராட்டக்காரர்களைப் பார்த்து, இதற்கெல்லாம் நான் பழிவாங்குவேன் (Revenge) என்றும், இப்போராட்டங்களைத் துடைத்துத் தூக்கியெறிவேன் என்றும் கொக்கரித்தார்.

இவற்றையெல்லாம் மனித உரிமைகளை மட்டுமின்றி, மனித உயிர்களையும் பறிக்கும் பேராபத்திற்கான முன் அறிகுறிகள் என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும். இக்கருத்துகளை தங்களிடையே ஒருவருக்கொருவர் பேசி, தற்காப்பு உணர்ச்சி பெற்று சனநாயக வழியில் துணிந்து நிற்போம்; உரிமைகளைக் காப்போம் என்று உறுதியேற்க வேண்டும்!

ஐயா பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.