img/728x90.jpg
’வருங்காலம் எங்களை விடுவிக்கும்’ - சுப.உதயகுமாரன் உருக்கமான அறிக்கை!

’வருங்காலம் எங்களை விடுவிக்கும்’ - சுப.உதயகுமாரன் உருக்கமான அறிக்கை!

கூடங்குளம் அணு உலை அமைப்பதில் ஏற்பட்ட குழறுபடிகள் தொடர்பாக தாங்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் உண்மையாகி வருவதாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் தெரிவித்து உள்ளார்.

கூடங்குளம் அணு உலை அமைக்க ரஷ்யாவிடம் இருந்து உதிரிப் பாகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தரமற்ற உதிர்ப்பாகங்கள் பயன்படுத்தப்பட்டதால் முதல் இரண்டு அணு உலைகள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அணு உலைக்காக 1,000 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக சி.ஏ.ஜி எனப்படும் மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. பிரதமரின்.கட்டுப்பாட்டில் உள்ள அணு சக்தித் துறையில் நடந்துள்ள இந்த விவகாரம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரன் இந்த முறைகேடு தொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், "கூடங்குளம் அணுமின் திட்டத்தில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள், ஊதாரித்தனங்கள் மீது மத்திய அரசு ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். எம். ஆர். ஸ்ரீநிவாசன், எஸ். கே. ஜெயின், காசிநாத் பாலாஜி, ஆர். எஸ்.சுந்தர், மன்மோகன் சிங், நாராயணசாமி, இறந்துபோன ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கடாக்கின் ஆட்கள், விளாடிமிர் புடின் போன்றோரைப் பிடித்து விசாரிக்க வேண்டும்.

ஒரு மேற்கத்திய நாட்டில் இத்தகைய ஊழல் நடைபெற்றிருந்தால், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பெரும் பிரச்னைகளை  எழுப்பியிருப்பார்கள். இந்தியாவில் பிரதமர் மோடி நடத்தும் அரசிடம், ராகுல் காந்தி, லாலு, மாயாவதி உள்ளிட்ட அறைகுறைத் தலைவர்களிடம் மத்திய அரசைக் கண்டு அஞ்சி நடுங்கும்  தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளிடம் எதையும் நாம் எதிர்பார்க்க முடியாது.

ஆனால் ஒன்றைச் சொல்கிறேன், தோழர்களே, எழுதி வைத்துக் கொள்ளுங்கள், கூடங்குளம் அணுஉலைகளிலிருந்து இன்னும் மோசமான செய்திகள் அவ்வப்போது வரும், நீண்டகாலத்துக்கு வந்துகொண்டே இருக்கும். அவதூறுகளை அள்ளி வீசி, எளிய மக்களாகிய  எங்களைக் கொச்சைப்படுத்தியவர்கள் அதற்குப் பதில் சொல்ல வேண்டிவரும். ஓடி ஒளிந்தவர்கள், ஊமையாக இருக்கிறவர்கள், எங்கள்மீது களங்கம் கற்பித்துத் தப்பிக்க முயல்கிறவர்கள் எல்லோரும் வரிசையாக குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படுவார்கள். அந்த வருங்காலம் எங்களை விடுவிக்கும்" என சுப.உதயகுமாரன் தெரிவித்து உள்ளார்.