img/728x90.jpg
உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் பெற்றதாக முதலமைச்சர் சொல்வது சரியா?

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி காவிரி நீர் பெற்றதாக முதலமைச்சர் சொல்வது சரியா?

காவிரி உரிமை மீட்புக் குழு
ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!

நடப்பு சாகுபடி ஆண்டில், தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட மிக அதிகமாகக் கர்நாடகத்தில் பெய்தது. ஆகத்து மாதம், தனது அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வெள்ள நீரைக் கர்நாடக அரசு வெளியேற்றியது. ஆனால் உச்ச நீதிமன்றம் சூன், சூலை, ஆகத்து மாதங்களுக்கு வரையறுத்த மொத்தத் தண்ணீரைவிட 11 ஆ.மி.க (டி.எம்.சி) குறைவாகத்தான் கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தஞ்சையில் 27.08.2020 அன்று செய்தியாளர்கள் கேட்ட வினாவுக்கு, உச்ச நீதிமன்றம் வரையறுத்த அளவுப்படி மாதந்தோறும் காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டிற்குத் தர வேண்டுமென்று கேட்டு வருகிறோம். கர்நாடகமும் அதைத் தந்து வருகிறது என்று கூறினார். இச்செய்தி 28.08.2020 ஏடுகளில் வந்துள்ளது. ஆனால் கர்நாடகம் கடந்த சூன், சூலை, ஆகத்து மூன்று மாதங்களுக்கு மொத்தமாகத் திறந்து விட்டுள்ள காவிரி நீர் 75.048 ஆ.மி.க (டி.எம்.சி), என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி மூன்று மாதங்களுக்கும் வந்திருக்க வேண்டிய காவிரி நீர் 86.38 ஆ.மி.க (டி.எம்.சி) என்றும், 11.34 ஆ.மி.க (டி.எம்.சி) தண்ணீர் பாக்கி உள்ளது என்றும் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி கூறினார் என்று இந்து ஆங்கில ஏடு 03.09.2020 இதழில் கூறியுள்ளது.

இந்த உண்மையை முதலமைச்சர் மூடி மறைத்து, வரவேண்டிய தண்ணீர் வந்துவிட்டது என்று கூறியது ஏன்? கர்நாடகம் சட்டப்படி திறந்து விட வேண்டிய தண்ணீரைப் பெற்றிட கவலையோடு நடவடிக்கைகள் எடுக்காமல், காவிரியில் உபரிநீர் இருப்பதாக கூறிக்கொண்டு, புதிய புதிய பாசனப் பகுதிகளை முதலைமைச்சர் உருவாக்குவது முரண்பாடாக இருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேரத் தலைவர் அமர்த்தியிருக்க வேண்டும். முழுநேர அலுவலர்கள் அமர்த்தியிருக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் தன்னாட்சியுடன், தனக்கான தனி அலுவலகத்தில் செயல்பட வேண்டும். ஆனால் இவற்றில் எதையும் இந்திய அரசு செயல்படுத்தவில்லை. நீராற்றல் துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்க்குக் கூடுதல் பொறுப்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது காவிரி ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் கூடி, “உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் காவிரி நீர் திறந்து விட ஆணையிடப்படுகிறது” என்று கூறுவது சாங்கியச் சடங்காகிவிட்டது. அடுத்த ஆணையக் கூட்டத்தில், கடந்த கூட்டத்தின் ஆணையை ஏன் நிறைவேற்றவில்லை என்று ஆணையத் தலைவர் கர்நாடகத்திடம் கேட்பதுமில்லை.

தமிழ்நாட்டின் சார்பில் காவிரி ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறப்பு வல்லுனர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் போன்றவர்கள், ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டங்களில் உட்கார்ந்து எழுந்திருக்கும் கடமையைச் செய்தார்களா? உரிமை நீரைப் பெற உரத்துக் குரல் கொடுத்தார்களா? சட்டக் கடமையை ஆணையம் செய்யாத போது எதிர்த்து வெளிநடப்புச் செய்தார்களா என்ற வினாக்கள் எழுகின்றன.

முதலமைச்சரே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி கர்நாடகம் சரியாகச் செயல்படுகிறது என்று சான்றளிக்கும் போது, அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் எப்படிச் செயல்படுவார்கள்?

வரும் 09.09.2020 அன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளது. இக்கூட்டத்திலாவது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரைக் கர்நாடகம் திறந்துவிட மேலாண்மை ஆணையம் கட்டளை இட்டு, அதைச் செயல்படுத்த நேரில் களம் இறங்க வேண்டும் என்று தமிழ்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். அதனை ஆணையம் ஏற்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்.