img/728x90.jpg
பாண்டி ஓ.கே.. ஆந்திரா நெக்ஸ்ட்... தமிழக முதல்வரைத்தான் பார்க்க முடில! - இளைஞர்களின் இயற்கை விவசாய முயற்சி

பாண்டி ஓ.கே.. ஆந்திரா நெக்ஸ்ட்... தமிழக முதல்வரைத்தான் பார்க்க முடில! - இளைஞர்களின் இயற்கை விவசாய முயற்சி

  புதுச்சேரி மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திசைதிருப்பி சாதித்திருக்கிரர்கள். அதையொட்டி,அறுவடைத் திருவிழாவைப் பத்திரிகை அடித்து விநியோகித்து, பிரமாண்டமாக நடத்தி, மற்ற விவசாயிகளையும் இயற்கை விவசாயத்திற்குத் திரும்ப வைக்கும் நம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொண்ட அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, 'இனி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயப் பகுதிகளும் படிப்படியாக இயற்கை விவசாயத்திற்கு மாற்ற விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்படும். அதுதான் மக்களின் உடல்நலனுக்கும்,எதிர்கால இந்தியாவுக்கும் நல்லது. சாதித்த இந்த இளைஞர்களைப் போற்றுகிறேன்' என்று பேச அந்த ஆறு இளைஞர்களும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

 
ஆனால்,'தமிழக முதலமைச்சரையும் இத்தகைய முயற்சியை செயல்படுத்த வைக்க நாங்க பலமுறை முயன்றும்,அவரைச் சந்திக்கவே முடியலை. அதுதான் வருத்தமாக இருக்கிறது' என்று ஆதங்கப்படுகிறார்கள்.
 
 அறுவடைத் திருவிழா
 
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்ற இளைஞர்தான் மற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து,புதுச்சேரியில் 100 ஏக்கர் நிலத்தில் விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய வைத்து சாதித்திருக்கிறார். இவரோடு சேர்ந்து, வசந்த், பருவவர்தினி, நந்தினி, திவாகர், கீர்த்தனபிரியன் என்று ஐந்து இளைஞர்களும் இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். ஐந்து பேருக்கும் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லை. இவர்களை இப்படி ஒருங்கிணைத்து,இயற்கை நோக்கித் திருப்பியவர் பெருங்கிழவர் நம்மாழ்வார்.  கணேசமூர்த்தியிடமே பேசினோம்.
 
 
 கணேசமூர்த்தி"ஆறு மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநில வேளாண்மைத்துறை அமைசர் கமலக்கண்ணன், துறைச் செயலாளர் அன்பரசு மூலமா பேசித்தான் முதலமைச்சர் நாராயணசாமியை இப்படி விவசாயிகளை இயற்கை முறைக்குத்  திருப்பும் முயற்சியை ஒப்புக்கொள்ள வைத்தோம். நம்பிக்கையில்லாமத்தான் எங்களுக்கு அனுமதி கொடுத்தார். சேலியமேடு, கடம்பாக்கம் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் முப்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான நூறு ஏக்கர்ல அந்த விவசாயிகளை இயற்கை முறையில விவசாயம் செய்ய வைத்தோம். அதற்கு,'ஆர்கானிக் சோன்'ன்னு பெயர் வைத்தோம். இடுபொருள், உரங்களை எல்லாம் நாங்கள் கொடுத்து, விவசாயம் செய்யும் முறைகளையும் சொல்லிக் கொடுத்தோம். அதோடு, நாங்க ஆரம்பிச்சிருக்கிற டாஸ்மாக்குங்கிற அமைப்பு மூலமா இந்த நிலங்களில் விளையும் நெல்லை அரசு விலையைவிட இரண்டு மடங்கு அதிகம் கொடுத்து குவிண்டாலுக்கு 3000 கொடுத்து வாங்கிக்கிறதா சொன்னோம். அதனால்,விவசாயிகள் ஆர்வமா முன்வந்தாங்க. கிச்சடிச்சம்பா,சீரகச் சம்பான்னு நமது பாரம்பரிய நெல் ரகங்களைத்தான் பயிரிட்டோம். 
 
'எங்களை நம்பிய விவசாயிகள், இயற்கை விவசாயம், முதலமைச்சர், அரசு அதிகாரிகள் என எல்லோர் நம்பிக்கையையும் காப்பாற்றும்விதமாக ’நெல் விளையுமா?' ன்னு லேசா பயமா இருந்துச்சு. மனசுக்குள் நம்மாழ்வாரை தினமும் வேண்டிக்கிட்டோம். நல்லதே நடந்திருக்கு.விழாவுக்கு முதல்வர் நாராயணசாமி, வேளாண்மைத்துறை அமைச்சர் கமலக்கண்ணன், மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள்ன்னு நூறு பேர் வந்தாங்க. ஐந்நூறு விவசாயிகள் கலந்துக்கிட்டாங்க. அறுவடைத் திருவிழாவை நாராயணசாமி சேலியமேட்டில் தொடங்கி வைத்தார். 100 ஏக்கர் நிலத்திலும் அறுவடை முடிஞ்சுட்டு. ஏக்கருக்கு 24 மூட்டைகள் வீதம் விளைஞ்சுருக்கு. செலவு ஏக்கருக்கு 16 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரைதான் ஆகி இருக்கு. ஆனா, இந்தப் பகுதியில் செயற்கை விவசாயம் செய்த மத்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 26 மூட்டைகள் கிடைச்சுருக்கு. ஆனால்,ஏக்கருக்கு அவங்களுக்கு செலவு 25 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை ஆகிருக்கு. எங்களுக்கு அவங்களைவிட ரெண்டு மூட்டைதான் கம்மி. ஆனால்,தொடர்ச்சியா செய்தால்,மண் தன்மை பழையபடி நல்ல முறையில் மாறமாற விளைச்சல் கணிசமா அதிகரிக்கும். ஆனால்,செலவுக் கணக்குல அவங்களுக்கு ஏக்கருக்கு பத்தாயிரம் அதிகம். அதோட, அவங்களால குவிண்டால் நெல்லை 2000 க்குதான் விற்க முடிஞ்சது. இயற்கை விவசாயம் செய்த விவசாயிகள் நெல்லை குவிண்டாலுக்கு 3000 கொடுத்து நாங்களே வாங்கிகிட்டோம்.
 
 நாராயணசாமி
 
இதைப் பார்த்த அங்கு வந்த 500 விவசாயிகளும், 'வர்ற போகத்தில் இருந்து நாங்களும் இயற்கை விவசாயத்திற்கு மாறுறோம்'ன்னு சொன்னாங்க. அதைப் பார்த்த நாராயணசாமி, 'மக்களின் உடல் நலன் காக்கப்பட நாமெல்லாம் இயற்கை விவசாயத்திற்கு மாறணும். அதை நோக்கி புதுச்சேரி அரசு முன்னேறும். இயற்கை விவசாயத்திற்கு அனைத்து விவசாயிகளையும் மாற்ற புதுச்சேரி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். சாதித்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள்'ன்னு பேசினார். வர்ற போகத்துல புதுச்சேரியில் 5000 ஏக்கர் நிலத்தில் விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு திருப்பலாம்ன்னு இருக்கோம். 2020-க்குள் மொத்தப் பரப்பளவான 40000 ஏக்கர் நிலத்திலும் இயற்கை விவசாயம் செய்ய வைப்பதுதான் எங்கள் இலக்கு. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாங்க புதுச்சேரியில் போய் முதல்வரைச் சந்தித்து விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்குத் திருப்புறோம். அதோட,அவர்கள் விளைவிக்கிற நெல்லை நாங்களே வாங்கி அந்த அரிசிப் பையில் அதை விளைவித்த விவசாயியின் பெயர், முகவரி, போட்டோ, என்ன ரகம், என்னன்ன இடுபொருள்கள் போடப்பட்டதுங்கிற அனைத்துத் தகவல்களும் இடம்பெற்றிருக்கும். அடுத்து ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளிடம் இப்படி அங்குள்ள விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்குத் திருப்பும் முயற்சியை செய்ய அனுமதி வாங்கிட்டோம். ஆனால்,எனது சொந்த மாநிலமான நம்ம தமிழ்நாட்டிலும் இப்படிச் செய்ய,முதலமைச்சரைப் பார்க்க பலமுறை முயன்றும் முடியவில்லை. இது வேதனையா இருக்கு.
 
ஆறு இளைஞர்களால் இப்படி ஒரு மாற்றத்தை கொண்டு வரமுடிகிறதென்றால்,தமிழக அரசு நினைத்தால் தமிழகத்தில் நமது பாட்டன் பூட்டன் செய்த பாரம்பர்ய விவசாயத்தை எளிதாக மீட்டெடுக்கலாம். ஆனால், அதற்கு அவர்களுக்கு அக்கறையும் இல்லை; நேரமும் இல்லை. அத்தாம் பெரிய மனுஷன் நம்மாழ்வார் சொல்லியே காது கொடுக்காத அரசாங்கம், இத்தனூண்டு பசங்க நாங்க சொல்லியா கேட்கப் போறாங்க?. இருந்தாலும் நம்மாழ்வார் அய்யா கனவை ஒவ்வொரு விவசாயியிடமும் விதைச்சுக்கிட்டேதான் இருப்போம்" என்றார் அழுத்தமாக