• :
  • :
களத்தில்

எடப்பாடி அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை - சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் உள்ளாட்சி ஊழியர்கள்!

எடப்பாடி அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை - சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் உள்ளாட்சி ஊழியர்கள்!

எடப்பாடி அரசு எங்களை கண்டுகொள்ளவில்லை - சிவகங்கையில் காத்திருப்பு போராட்டம் நடத்தும் உள்ளாட்சி ஊழியர்கள்!

நகராட்சி, ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சம்பளத்திற்கான அரசாணையை நடைமுறைப்படுத்தக்கோரி இரண்டாவது நாட்களாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். 
 
இது குறித்து சிவகங்கை மாவட்ட சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் வீரைய்யாவிடம் பேசும் போது,   ``கடந்த 40 ஆண்டுகாலமாகக் கிராமப்புற துப்பரவு தொழிலாளர்களும், மேல்நிலைநீர் தேக்கத்தொட்டி ஆப்ரேட்டர்களும் இரவு பகல் பார்க்காமல் கிராமத்தின் தூய்மையை தங்களின் குறிக்கோளாகக் கொண்டு பணி செய்து வருகிறார்கள்.
 
தமிழகம் முழுவதும் 12,524 ஊராட்சிகளிலும், சுமார் 70 ஆயிரம் பம்பு ஆப்ரேட்டர்களும், 40 ஆயிரம் கிராமப்புற சுகாதாரப்பணியாளர்களும் வேலை செய்து வருகிறார்கள். மிகக்குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு வேலை செய்யும் இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் விதமாக அரசாணை ஒன்றை வெளியிட்டது உள்ளாட்சி துறை. பம்பு ஆப்ரேட்டர்களுக்கு மாத சம்பளம் ரூ.11,236 எனவும் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.9,234 எனவும் வழங்க ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.
 
ஆனால் எடப்பாடி அரசு தொழிலாளர்களை கேவலப்படுத்தும் விதமாகப் பம்பு ஆப்ரேட்டர்கள் ஒரு நாளைக்கு 4 மணிநேரம் வேலை செய்யும் பகுதி  நேர ஊழியர்கள் என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறது. இவர்களின் வாதப்படி பார்த்தாலும் மாத சம்பளமாக ரூ.5,618 வழங்க வேண்டும். இதையும் கொடுக்காமல் தொழிலாளர்கள் வயிற்றில் அடித்து வருகிறது தமிழக அரசு.
 
சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளில் சுமார் 1,500 பம்பு ஆப்ரேட்டர்களும், 500 துப்புரவு தொழிலாளர்களும் மற்றும் தூய்மைப்பணி காவலர்கள் 250 தொழிலாளர்களும்  பணி செய்து வருகிறார்கள்.
 
இவர்கள் பெரும் மாத சம்பளம் டீ குடிக்கக் கூட பத்தாது. மாதம் வெறும் ரூ.600 சம்பளம் வழங்கப்படுகிறது. அதையும் இந்த மாவட்ட நிர்வாகம் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படவில்லை. காலமுறை ஊதியம் பெறும் ஒரு தொழிலாளி பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ரூ.50 ஆயிரமும், மாத ஓய்வூதியமாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவு இருக்கிறது.
 
அந்த உத்தரவு எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. எங்களுக்கு அரசு வழங்கிய உத்தரவை அமுல்படுத்த வேண்டும். அதுவரைக்கும் எங்களுடைய காத்திருப்பு போராட்டம் இரவு பகல் பாராமல் தொடரும்'' என்றார்.