• :
  • :
களத்தில்

எச்சரிக்கை - இவர்கள் எட்டப்பர்கள்!

எச்சரிக்கை - இவர்கள் எட்டப்பர்கள்!

எச்சரிக்கை, இவர்கள் எட்டப்பர்கள்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக எடப்பாடி பழனிச்சாமி அரசு அறிவித்துள்ளது. 
 
இதை பலரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கருதுகிறார்கள்.  தூத்துக்குடி மக்களின் உறுதியான எதிர்ப்பு மற்றும் தமிழ்நாடு, இந்தியா மற்றும் சர்வதேச அளவில் எழுந்துள்ள எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழக அரசு பின் வாங்கியுள்ளது என்பது உண்மை தான், ஆனால் இதில் ஈப்பியெஸ் ஓப்பியெஸ் கும்பலின் சதித்தனமும் அடங்கியுள்ளது. 
இதை புரிந்து கொள்ளாவிட்டால் தூத்துக்குடி மக்களின் காதுகளில் மீண்டும் பூச்சுற்றிவிடுவார்கள்.
 
1,    ஸ்டெர்லைட் ஆலை ஒரு முறை அல்ல பலமுறை 'மூடப்பட்டது'. இது நாமறிந்த வரலாறு. அந்த ஆலை இறுதியாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. எனவே மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தமிழக அரசின் மூடுவதற்கான ஆணையை ரத்து செய்வது வேதாந்தா நிறுவனத்தால் இயலாத ஒன்றல்ல. நீட் விசயத்தில் தமிழக அரசு தமிழக மக்களை ஏமாற்றி துரோகம் செய்ததும் நாமறிந்ததே. ஜல்லிக்கட்டு விசயத்திலும் கூட தனது அனைத்து கபட நாடகங்களும் பலனளிக்காமல் போனப் பிறகு தான் தமிழக அரசு வேறு வழியின்றி "சிறப்பு சட்டத்தை" நிறைவேற்றியது. எனவே, ஸ்டெர்லைட் ஆலை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வரை தூத்துக்குடி மக்களுக்கான அபாயம் நீடித்து கொண்டுதான் இருக்கும்.
 
2,    தமிழக அரசு, மத்திய அரசின் உத்தரவின் பேரில் நடத்திய கொடூரமான படுகொலைகளையும் சட்டவிரோத கைதுகளையும் சித்திரவதைகளையும் இந்த அறிவிப்பின் மூலம் குழி தோண்டி புதைக்க பார்க்கிறது. இன்று வரை தமிழக அரசு இந்த படுகொலையை நியாயப்படுத்தியே பேசி வருகிறது. இந்த படுகொலைகளையும் தூத்துக்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் பறிப்பையும் திட்டமிட்டு நடத்திய தலைமை செயலாளர், டி.ஜி.பி., தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கலெக்டர் மற்றும் எஸ் பி, இதர காவல்துறை கொலையாளிகள் ஆகியோரை காப்பாற்ற நினைக்கிறது தமிழக அரசு.
 
3,     தூத்துக்குடி மக்களோடு இணைந்து போராடிய சில புரட்சிகர ஜனநாயக அமைப்புகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி மக்கள் அதிகாரம் போன்ற அமைப்பு தோழர்களை வேட்டையாடுவதன் மூலம் போராடும் மக்களுக்கு எந்த அமைப்பும் துணை நிற்க கூடாது என்ற நிலையை உருவாக்க எடப்பாடி கும்பல் முயற்சிக்கிறது. இது அப்பட்டமான சனநாயக விரோத பாசிச நடவடிக்கை ஆகும். ஆலை மூடல் என்ற ஏமாற்று அறிவிப்புடன் இந்த பாசிச அடக்குமுறைகளையும் இணைத்து முன் கொண்டு செல்கிறது, தமிழக அரசு.
 
4,     25 ஆண்டுகளாக இந்த ஆலை ஏற்படுத்திய பாதிப்புகளையும் அதனால் தூத்துக்குடி மக்கள் அடைந்த இழப்புகளையும் பற்றி இந்த அரசாணை வாயே திறக்கவில்லை
 
5,     பல்லாயிரம் சிறப்பு காவல் படைகளை இறக்கியிருப்பதன் மூலம் தூத்துக்குடி அன்றாட  வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதோடு அவர்கள் இழிவுபடுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். அவர்களை திரும்பப் பெறுவது பற்றி எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை. 
 
எனவே,
 
ஏகாதிபத்திய அடிவருடிகள், பாசிசமோடியின் பதந்தாங்கிகளான EPS &OPS கும்பலின் கபட நாடகங்களை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டு கொள்கிறோம்.
 
இந்த அறிவிப்புகள் நவீன எட்டப்பர்களின் அரசியல் தோல்வியையும் தமிழக மக்களின் தார்மீக வெற்றியையும் காட்டுகின்றன என்பது உண்மைதான். ஆனால், எந்த தார்மீக நெறியுமற்ற இந்த அரசியல் வியாபாரிகளை என்றும் நம்பக்கூடாது. 
 
அவர்களின் சூழ்ச்சிகரமான திட்டங்களை மோசடிகளை அம்பலப்படுத்தி உண்மையான வெற்றிக்காக போராடுவதே ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 
 
எனவே, 
 
* இரத்த வெறி பிடித்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டை தூத்துக்குடியிலிருந்தே அகற்றும் வரை போராடுவோம். ஜல்லிக்கட்டு போல் "அவசர சட்டம்" கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை நிர்பந்திப்போம்.
 
* தலைமை செயலாளர், டி.ஜி.பி.முதல் அனைத்து கொலையாளிகளையும் பதவி நீக்கம் செய்யவும் கொலை வழக்கில் கைது செய்யவும் கோரி போராடுவோம்.
 
* தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள கொலைகார காவல் படையை வெளியேற்றவும் மக்களின் சுதந்திரமான அன்றாட வாழ்வை உறுதி செய்யவும் கோரி போராடுவோம்.
 
* சட்ட விரோதமாக சிறைபடுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும் பொய் வழக்குகளை திரும்பப் பெற கோரியும் போராடுவோம்.
 
* சட்ட விரோத கைதுகளிலும் சித்திரவதைகளிலும் ஈடுபட்ட காட்டுமிராண்டி காவல் துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய கோரி போராடுவோம்.
 
* 25 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டால் தூத்துக்குடி மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து வகை பாதிப்புகளை குறித்து ஆய்வு செய்ய மனித உரிமை ஆர்வலர்கள், நேர்மையான விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் குழுவை அமைத்து அறிக்கை கொண்டு வர கோரி போராடுவோம், அந்த பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை ஸ்டெர்லைட்டிடம் இருந்து பெற்றுத் தரக் கோரி போராடுவோம்.
 
* மக்களுக்காக போராடும் அமைப்புகள் மீது பயங்கரவாத முத்திரை குத்தி ஒடுக்கும் தமிழக அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து போராடுவோம்.

தமிழகத்தின் புரட்சிகர, ஜனநாயக சக்திகளே !

* இந்துத்துவ பார்ப்பனிய பாசிச மற்றும் அதன் எடுபிடிகளான EPS & OPS கும்பலின் கொடுங்கோன்மையை எதிர்த்தும், தமிழக மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்வுரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கவும் ஒன்றுபடுவோம், ஓரணியில் திரள்வோம். 
 
* நெடுவாசல், கதிராமங்கலம், கூடங்குளம், தேனி பொட்டிபுரம் மற்றும் தமிழக மீனவ மக்களோடு இணைந்து களம் புகுவோம். ஹைட்ரோகார்பன், ONGC, அணு உலைகள், நியூட்ரினோ மற்றும் சாகர் மாலா போன்ற நாசகர திட்டங்களை விரட்டியடிக்கும் வரை போரிடுவோம்
 
-  விவேக் -