img/728x90.jpg
10,000 கோடி திட்டம் 7,200 கோடி ஆனது... எட்டு வழிச் சாலையில் என்னென்ன பிரச்னைகள்?

10,000 கோடி திட்டம் 7,200 கோடி ஆனது... எட்டு வழிச் சாலையில் என்னென்ன பிரச்னைகள்?

எங்களையெல்லாம் இங்க இருந்து விரட்டுனா, நாங்க எங்க போயி பொழைக்கிறது. எங்க உயிர் இருக்குற வரைக்கும் எங்க நிலத்துல ரோடு போட விடமாட்டோம். விவசாயம்தான எங்களுக்குத் தெரியும், இதை விட்டுட்டு கண்காணாத இடத்துக்கு எப்படிப் போறது"

சேலத்திலிருந்து சென்னை வரைக்கும் அமைய இருக்கும் எட்டு வழிச் சாலைக்காக நிலத்தைப் பறிகொடுப்பவர்களின் குரல்கள்தான் இவை.

"வனத்தையும் விவசாயத்தையும் அழித்து சாலை அமைத்தால், சூழலியல் ரீதியாக மிகப்பெரிய சீர்கேடுகளைச் சந்திக்க நேரிடும்"

இது சூழலியலாளர்களின் எச்சரிக்கை.

10,000 கோடி ரூபாய் செலவில் அறிவிக்கப்பட்ட சேலம் எட்டு வழிச்சாலையானது மாற்றம் செய்யப்பட்டு, முதற்கட்டமாக 7,000 கோடி செலவில் 6 வழிச் சாலை அமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த 11-ம் தேதி அறிவித்தது. இதன்படி, வனப்பகுதி வழியாகச் செல்லும் சாலையின் நீளம் 13 கிலோ மீட்டரிலிருந்து, 9 கிலோ மீட்டராகக் குறையும். 277 கி.மீ சாலையின் அகலம், வனம் அல்லாத பகுதியில் 70 மீட்டராகவும், வனப்பகுதியில் 50 மீட்டராகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு அறிவிக்கப்பட்ட 8 வழிச் சாலை திட்டத்தில் அகலம் 90 மீட்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு நாள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு தீர்வாக சாலைத் திட்டம் மாற்றி அமைக்கும்போது 3,000 கோடி ரூபாய் மிச்சமாகிறது. இன்னும் அலசி ஆராய்ந்தால் பணம் செலவாதலும், காடுகள் அழிக்கப்படுதலும் குறைக்கப்படும்.

எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை மக்கள் எல்லோரும் எதிர்ப்பதற்கு இன்னும் பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. அவை எவை?

* மக்களிடம் கருத்து கேட்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதுவரை பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தவில்லை.

* இத்திட்டம் பற்றி வெளிப்படைத் தன்மையைத் தமிழக அரசு ஏற்படுத்தத் தவறிவிட்டது. தமிழக அரசின் இணையதளத்திலோ, மத்திய அரசின் இணையதளங்களிலோ எந்த ஓர் அறிக்கையும் இல்லாதது.

* விவசாயிகளைக் காவல்துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்துக்கொண்டு அத்துமீறி நிலத்தை அளந்தது.

* எட்டு வழிச் சாலையைப் பற்றி எதிர்த்துப் பேசுபவர்கள் அனைவரையும் கைது செய்துகொண்டிருக்கிறது, காவல்துறை. கடைசியாக 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பின் தேசிய தலைவரையே கைது செய்தது. இப்படி அத்துமீறி நடக்கும் கைதுகள். ஏதோ தவறாக நடக்கிறது என்ற அச்சத்தைத்தான் மக்களிடையே ஏற்படுத்தும்.

* சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை இல்லாமல் எட்டு வழிச் சாலைக்காகக் காட்டுப் பகுதிகளில் இதுவரை 150-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள்.

* முதல் முதலாக வெளியிட்ட திட்ட அறிக்கையில் சீனாவில் இருக்கும் நகரின் திட்ட அறிக்கை வரிகளைச் சேர்த்து வெளியிட்டது. இவையெல்லாம் சாதாரண விவசாயிக்கு நிச்சயமாக அச்சத்தையே ஏற்படுத்தியது.

* ஏற்கெனவே உள்ள மூன்று வழிகளை மேம்படுத்தலாம் என்பது பொதுமக்களின் கோரிக்கை. அதற்கு கி.மீ குறைவு, நேரம் மிச்சம் என்று பதில் சொல்வது ஏற்க முடியாததாக இல்லை.

* எட்டு வழிச் சாலை அமைப்பதால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்கிறது, தமிழக அரசு. அதற்காக எந்த ஓர் ஆதாரமும் முன் வைக்காமல் வெறும் வாய்மொழியாகவே சொல்லி வருகிறது.

* நேரம் மிச்சமாவதால் எரிபொருள் செலவு குறைகிறது. வருடத்துக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள எரிபொருள் மிச்சம் ஆகும் என முதல்வர் அறிவித்திருக்கிறார். 120 கி.மீ வேகத்தில் செல்லும் வாகனமும் எரிபொருளை அதிகம் எடுத்துக்கொள்ளும். அதேநேரம் இச்சாலையில் பயணிக்கச் சுங்க கட்டணம் அதிகமாகவே இருக்கும். அதனால், மேல்தட்டு மக்களைத் தவிர மற்றவர்கள் பயணிப்பார்களா என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

* விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விரைவில் சென்னை போன்ற பெரு நகரத்துக்குக் கொண்டு செல்லுவதோடு வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் என்று மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. பயணக் குறைப்பு நேரம் 2 மணிநேரம்தான் அதனால் எந்த ஒரு விளைபொருள்களும் கெட்டுப்போய்விடாது. சாதாரண விவசாயி பொருள்களைக் கொண்டுபோகும் அளவுக்கு இந்தச் சாலை சுங்கச்சாவடி கட்டணங்கள் இருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

ஆந்திரா நதிநீர் இணைப்பை நேரில் ஒருமுறை பார்வையிடச் சென்றிருந்தபோது, அரசுத்துறை அதிகாரிகள் நதிநீர் இணைப்பை பற்றி எதிர்க்கட்சித் தலைவர், இடது சாரிகள் எனப் பலரையும் அழைத்து விளக்கிக்கொண்டிருந்தார்கள். மக்கள் மத்தியிலும், பொது சாசனத்திலும், கோதாவரி - கிருஷ்ணா நதிநீர் இணைப்புக்கான திட்ட அறிக்கை பார்வைக்கு உள்ளது. மக்களிடம் திட்டத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும், தீமைகள் பற்றியும் எடுத்துச் சொல்கிறார்கள். (நதிநீர் இணைப்பால் ஏற்பட்ட மக்களுடைய இடப்பெயர்வுகள், அவர்களுக்கு அதிகப்படியான தீமையை ஏற்படுத்தியது என்பது மீதிக் கதை).