ஆபத்தான 15,000 டன் ஆர்ஸனிக் கலந்த கழிவுகளை வெளியேற்றியுள்ளது ஸ்டெர்லைட்

ஆபத்தான 15,000 டன் ஆர்ஸனிக் கலந்த கழிவுகளை வெளியேற்றியுள்ளது ஸ்டெர்லைட்

வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டங்களின் 100-வது நாளான கடந்த மே 22ம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து, மே 28ம் தேதி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்வைத்து நிரந்தரமாக மூடியது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட்  ஆலை நிர்வாகம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு விரைவில் தன் ஆய்வைத் துவக்க உள்ளது.இந்நிலையில், சுற்றுச்சூழல் குற்றங்களுக்காக 'வேதாந்தா நிறுவனம்' மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமாபாபு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பேரா. பாத்திமா பாபுஇதுகுறித்து பாத்திமா பாபுவிடம் பேசினோம், ”தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியமும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் 'வேதாந்தா நிறுவனம்', அதன் இயக்குநர்கள், உயர் அதிகாரிகள் மீது காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி விதிமீறல் குற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். வேதாந்தா நிறுவனத்தின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மூன்று மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை தண்டனை கிடைப்பது உறுதி. சுற்றுச்சூழல் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை  எடுக்க  அரசு நிறுவனங்கள் தயங்குகின்றன. எனவே, மக்கள் சார்பில் நாங்கள் போராடி வருகிறோம். சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க மாசுக்கட்டுப்பாடு வாரியத்தையும், சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. அந்த நோட்டீஸ் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியமும், சுற்றுச்சூழல் அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், அவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் கோப்புகளை நோட்டீஸ் அனுப்பியவரிடம் ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் குற்றவாளிகள் மீது நேரடியாகச் சட்டப்பூர்வமாக  நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் இடம் உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை, தனது உற்பத்தித் திறனை அதிகரிக்க தன்னிடம் தேவையான நிலம் இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கு 'வேதாந்தா நிறுவனம்' அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், தங்களிடம் உள்ள 172.7 ஹெக்டேர் நிலத்தில், 65 ஹெக்டேர் நிலம், ஆலையில் அதிகரிக்கும் திடக்கழிவினைக் கையாள்வதற்கும், 17.5 ஹெக்டேர் நிலம், பசுமை அரணுக்கும், 1.5 ஹெக்டேர் நிலம், காற்று மற்றும் நீர் மாசுபடுதலைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒதுக்கியிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2018-ம் ஆண்டின் தகவலின்படி, 102.3 ஹெக்டேர் நிலம் மட்டுமே வேதாந்தா நிறுவனத்திடம் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

ஸ்டெர்லைட்

கடந்த 2013ல் இருந்து 2018ம் ஆண்டு வரை கழிவுகளைக் கையாளும் விதிமுறைகள், 2008 மற்றும் 2016-ன் கீழ் அனுமதி பெறாமலேயே ஆபத்தான கழிவுகளை உற்பத்தி செய்தல், கையாளுதல் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவற்றில் 'வேதாந்தா நிறுவனம்' விதிமுறைகளை மீறியுள்ளது.

அனுமதி பெறாமலேயே கடந்த 2016-17ம் ஆண்டு 15,000 டன்னிற்கும் அதிகமான ஆர்ஸனிக் கலந்த ஆபத்தான கழிவுகளை வெளியேற்றியுள்ளது ஸ்டெர்லைட் ஆலை. எனவே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கும், சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில், நான் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். எனது நோட்டீஸின் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேதாந்தா நிறுவனம், அதன் அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த நிறுவனம் மற்றும் அதன் அதிகாரிகள் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்குத் தொடர முடிவெடுத்துள்ளேன்” என்றார்.